

தற்போது நடைபெறவிருக்கும் தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல், நாடு விடுதலை பெற்ற பிறகு நடைபெறும் 15-வது தேர்தல். தேர்தலின் சில சுவாரசியங்களைத் தெரிந்துகொள்வோமா?:
வேட்பாளர் என்பதற்கான ஆங்கிலச் சொல் candidate. இது candidatus என்ற லத்தீன் சொல்லில் இருந்து உருவானது. candidatus என்பதற்கு வெள்ளை உடையணிந்த என்று அர்த்தம். தமிழில் அந்த வார்த்தை இல்லை என்றாலும், அன்று முதல் இன்றுவரை வேட்பாளர்கள் என்னவோ வெள்ளை உடையில்தான் வலம்வருகிறார்கள். அந்தக் காலத்தில் தூய்மையின் அடையாளமாக வெள்ளை நிறம் இருந்ததே காரணம்.
வெளியே யாருக்கும் தெரியாமல் வாக்களிப்பது என்பதற்கான ஆங்கிலச் சொல் Ballot. இது ball என்ற சொல்லில் இருந்து உருவானது. கிரேக்கர்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு வாக்காளரைத் தேர்ந்தெடுக்க வெள்ளைப் பந்தையும், பிடிக்காத வேட்பாளரை நிராகரிக்கக் கறுப்புப் பந்தையும் வாக்காகப் பயன்படுத்தினர்.
நாட்டில் 1950-கள்வரை வாக்குச் சீட்டுக்குப் பதிலாக, ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனித்தனி வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு கட்சிக்குமான வாக்குப் பெட்டிகள் வித்தியாசமான நிறத்தில் இருந்தன.
தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (Electronic Voting Machines - EVMs) ஹைதராபாத் எலெக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா, பெங்களூரு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய அரசு நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டது. இது முதன்முதலில் கேரளத்தில் 1998-ல் பயன்படுத்தப்பட்டது. ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 16-ஓட்டு பட்டன்கள், அதாவது 16 வேட்பாளர்கள் இடம்பெறலாம். ஒரு வாக்குச்சாவடியில் நான்கு இயந்திரங்களைப் பயன்படுத்த முடியும் என்பதால், அதிகபட்சம் 64 வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் போட்டியிடலாம். தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பிறகு இந்த இயந்திரங்களில் உள்ள தகவல்களை அழித்துவிட்டு, புதிதாகப் பயன்படுத்த முடியும்.
இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு மிக அதிகமானோர் போட்டியிட்ட சாதனையைத் தமிழகமே நிகழ்த்தியுள்ளது. 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் 1033 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். (தற்போதைய தேர்தலில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் மொத்த வேட்பாளர் எண்ணிக்கையே 3776தான்.) அதன் காரணமாக அப்போது வாக்குச் சீட்டு, வாக்குப் புத்தகமாக அச்சடித்துக் கொடுக்கப்பட்டது. அந்த முறை தேர்தலையே போராட்டக் கருவியாகப் பயன்படுத்தி விவசாயிகள் 1000 பேர் போட்டியிட்டனர்.
தமிழகச் சட்டப்பேரவை, தமிழகத்தைவிடவும் பெரிய பரப்பைக் கொண்டிருந்த மதராஸ் மாகாணச் சட்ட மேலவையின் தொடர்ச்சியே. முதன்முதலாக 1921-ல் மதராஸ் மாகாணச் சட்ட மேலவை அமைக்கப்பட்டது. இதன் முதல் கூட்டம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 1921, ஜனவரி 9-ம் தேதி நடைபெற்றது.
சட்ட மேலவையின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள். அதேநேரம் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். 1935-ல் இப்படி மாற்றியமைக்கப்பட்டது.
நாடு விடுதலை பெற்ற பிறகு 1952 ஜனவரி மாதம் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலை அடுத்து, மதராஸ் மாநிலத்தின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் மார்ச் 1-ம் தேதி ஆரம்பித்தது. முதல்வராகப் பதவியேற்றவர் ராஜாஜி.
1967 சட்டப்பேரவைத் தேர்தல் முதல் இப்போதுவரை சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 234 ஆகவே இருக்கிறது. அதற்கு முன்பு ஒவ்வொரு தேர்தல், காலத்துக்கேற்ப தொகுதிகளின் எண்ணிக்கை மாறிக்கொண்டிருந்தது.
நம்முடைய சட்டப்பேரவை மதராஸ் மாகாண அல்லது மதராஸ் மாநிலச் சட்டப்பேரவை என்றே அழைக்கப்பட்டு வந்தது. 1967-க்கு பிறகு பெயர் மாற்றம் செய்யப்பட்டுத் தமிழ்நாடு சட்டமன்றம் என்று அழைக்கப்படுகிறது.