ஆழ்கடல் அதிசயங்கள் 04: கடலுக்கடியில் சுத்திகரிப்பு நிலையம்!

ஆழ்கடல் அதிசயங்கள் 04: கடலுக்கடியில் சுத்திகரிப்பு நிலையம்!
Updated on
3 min read

பேச்சு சுவாரசியமாகப் போய்க்கொண்டிருந்ததால், நாட்டிலஸ் நீர்மூழ்கி ஒரு பவளத்திட்டுக்கு அருகில் வந்ததையே யாரும் கவனிக்கவில்லை. ரக் ஷாதான் முதலில் பவளத்திட்டைச் சுட்டிக்காட்டினாள். பவளத்திட்டின் வடிவங்களையும் கண்கவர் மீன்களையும் பார்த்த செந்தில், ரக் ஷா, ரோசி ஆகிய மூவரும், “அழகா இருக்கே” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

“நாம இப்போ வந்திருப்பது பவளத்திட்டில் இருக்கும் ஒரு சுத்திகரிப்பு நிலையம். அதாவது Cleaning station” என்று ஆராய்ச்சியாளர் அருணா சொல்லி நிறுத்த, “என்ன! பெரிய இயந்திரங்கள் எதையும் காணோமே... அட, நிலையம் இதுதான்னு அடையாளம் கண்டுபிடிக்க ஒரு பெயர்ப்பலகைகூட இல்லையே” என்று கழுத்தை வளைத்துத் தேடினாள் ரக் ஷா.

சிரித்துக்கொண்ட அருணா, “அதோ, அந்தச் சின்ன மீன்கள் இருப்பதுதான் அடையாளம், அவற்றின் வாய்தான் சுத்திகரிப்பு இயந்திரம்” என்று கைகாட்டினார். அங்கே விரல் நீளத்துக்கு நீல நிறத்தில் மீன்கள் இருந்தன. வளைந்து விநோதமாக அவை மெதுவாக நீந்தினாலும், ஒரு குறிப்பிட்ட பாறையை மட்டும் சுற்றி வந்துகொண்டிருந்தன. வேறு எங்கும் போகவில்லை.

“நல்லா கவனிச்சுப் பாருங்க” என்று அருணா அறிவுறுத்தினார்.

அடுத்த சில நொடிகளில் ஓர் அஞ்சாலை மீன் (Moray Eel) பாறைக்கு அருகில் வந்து, உடலை நேராக வைத்துக்கொண்டது. வாயைப் பெரிதாகத் திறந்தது. நீல மீன் அந்த அஞ்சாலையின் வாய்க்குள் போனது.

“அடடா, பெரிய மீன் இருப்பதைக் கவனிக்காம வாய்க்குள்ள மாட்டிகிட்டதே” என்று செந்தில் வருத்தப்பட, “அவசரப்படாதே” என்று மீண்டும் அந்தக் காட்சியை நோக்கி அருணா கைகாட்டினார்.

அஞ்சாலையின் வாய் திறந்தபடியே இருக்க, சிறு மீன் அதன் வாய்க்குள் அங்குமிங்கும் நீந்தி கொத்துவதுபோல் ஏதோ செய்துகொண்டிருந்தது!

“எனக்குத் தெரிஞ்சுபோச்சு, ஒரு முதலை வாயைத் திறந்து இருக்கும், அதோட பல்லை சின்னப் பறவை சுத்தம் செய்யும். முதலை பறவையை ஒண்ணுமே செய்யாது. முன்னாடி ஒரு நாள் வயலுக்குப் போற வழியில ஒரு உண்ணிக்கொக்கு மாடுகளைச் சுத்தம் செய்வதை என் தாத்தா காட்டினார். இதுவும் அது மாதிரிதானே?” என்றாள் ரோசி.

“மிகவும் சரி. இதோ இந்த மீன், திரளி (Wrasse) வகையைச் சேர்ந்தது. இதை நாங்க சுத்தம் செய்யும் மீன்கள்னு (Cleaner Fish) சொல்வோம். இந்த ஒரு இனம் மட்டுமில்ல, 45 வகையான உயிரினங்கள் இது மாதிரி சுத்தம் செய்யும் வேலையைச் செய்யும். இதனால் பெரிய மீன்களுக்குப் பல்லிடுக்கில் உள்ள உணவுத்துகள்கள், செவுள், தோலில் உள்ள ஒட்டுண்ணிகள்கிட்டே இருந்து விடுதலை கிடைக்குது. திரளிகளுக்கு இதன்மூலம் உணவு கிடைக்குது. இரண்டு தரப்புக்கும் நன்மை செய்யக்கூடிய நட்புறவு இது. சில இனங்கள், சுத்தம் செய்வதை மட்டுமே உணவா நம்பி இருக்கும். வேறு சில இனங்கள், அவ்வப்போது சுத்தம் செய்யும், மற்ற நேரம் தாங்களாகவே உணவு தேடும்” என்று அருணா விளக்கினார்.

“இந்தச் சிறு மீன்கள் தங்களுக்கு நன்மை செய்யும் என்பதால் வேட்டையாடிகளான பெரிய மீன்கள்கூடச் சாதுவா நடந்துக்கும்போல. நல்ல புரிதல்தான்” என்றான் செந்தில்.

“இதில் இன்னொரு சுவாரசியமும் இருக்கு. நேரடியா ஒட்டுண்ணிகள், உணவுத்துணுக்குகளைச் சாப்பிடுவது மட்டுமல்லாமல், சுத்தம் செய்யும் மீன்கள் பெரிய மீன்களின் உடலோடு உரசி நட்பைத் தெரிவிக்கும்னு சமீபத்தில் கண்டுபிடிச்சிருக்காங்க! உணவைச் சாப்பிடுவது தனக்கு நன்மைன்னாலும், இதுபோன்ற செயல்களால் இந்த நட்பு வலுவாகுமாம். ஆகவே, இந்த மீன்கள் அதற்காகக் கொஞ்சம் நேரத்தைச் செலவழிக்குமாம்” என்றார் அருணா.

“சின்ன மீன் கொஞ்ச நேரத்தைச் செலவழிச்சா என்ன ஆகிடும்? அதுக்கு டைம் டேபிள் இருக்கா என்ன?” என்று ரக் ஷா கிண்டலாகக் கேட்டாள்.

“என்ன வரிசை மாதிரி மீன்கள் காத்துகிட்டு இருக்கு?” என்றான் செந்தில்.

அங்கே பாறைக்கு அருகில் பெரிய மீன்களின் வரிசை ஒன்றுகூடியிருந்தது. மீன்கள் வாயைத் திறந்து, செவுள்களை விரித்தபடி, உடலை அசையாமல் வைத்துக்கொண்டு காத்திருந்தன.

“ஓய்வே இல்லாம திரளி மீன்கள் ரொம்பப் பரபரப்பா வேலை செய்யுதுங்க... அங்கே பாரேன், கூட்டத்தில் தள்ளுமுள்ளு நடக்குது” என்று செந்தில் பரபரப்பானான்.

ஒரு பெரிய கோழி மீன் (Surgeon Fish) வரிசையில் இருக்கும் மீன்களைத் தள்ளிவிட்டு முன்னால் நீந்த முயற்சி செய்துகொண்டிருந்தது.

“இது வழக்கமா நடப்பதுதான். சில நேரம் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அதிகமான மீன்கள் வரும். சுத்தம் செய்யும் மீன்கள் இதுபோன்ற நிலையங்களில் மட்டுமே இருக்கும்னு சொல்ல முடியாது. அவை சும்மா நீந்தியபடியேகூட அடுத்த மீன்களை அணுகிச் சுத்தம் செய்யும். மோளா மீன்களின் உடலில் இருக்கும் ஒட்டுண்ணிகளைக் கடற்பறவைகள் சாப்பிடுவதை நான் பார்த்திருக்கேன். கடலாமை ஓட்டில் உள்ள பாசிகளைத் தாவர உண்ணி மீன்கள் சாப்பிடும். சுத்தம் செய்யும் இறால் வகைகளும் பவளத்திட்டுகளில் உண்டு. ஒட்டுண்ணிகள் இம்சை தருவது மட்டுமில்ல, சில நேரத்தில் மீன்களின் வழக்கமான செயல்பாடுகளைக்கூடப் பாதிக்கும். ஆகவே இந்த மீன்களின் சுத்திகரிப்பு ஒரு முக்கியமான சேவை” என்று சொல்லி முடித்தார் அருணா.

வரிசையில் சண்டைகள் எல்லாம் முடிந்து, மீன்கள் தங்கள் முறைக்குக் காத்திருந்தன. ஒரு மீனின் செவுளைச் சுத்தம் செய்து முடித்த திரளி, ‘இத்துடன் என் வேலை முடிந்தது’ என்பது போல அடுத்த மீனை நோக்கி முன்னேறியது. பெரிய மீன் தன்னுடைய அன்றாட வேலைகளைப் பார்ப்பதற்காக நீந்தத் தொடங்கியது.

(அதிசயங்களைக் காண்போம்)

கட்டுரையாளர், கடல்சார் ஆராய்ச்சியாளர் தொடர்புக்கு: nans.mythila@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in