கதை: மிமிக்ரி மான்குட்டி!

கதை: மிமிக்ரி மான்குட்டி!
Updated on
2 min read

குறிஞ்சிக் காட்டில் மான்கூட்டம் ஒன்று வசித்துவந்தது. அதில் ஒரு மான்குட்டியும் இருந்தது. அது எல்லா மான்களுக்குமே செல்லக்குட்டி.

மான்குட்டி பேச ஆரம்பித்தபோதே அதற்கு ஒரு தனித்திறமை வந்துவிட்டது. அதாவது காட்டிலுள்ள மற்ற விலங்குகளைப் போலவே அச்சு அசலாக மான்குட்டியால் குரல் கொடுக்க முடிந்தது.

மரத்திலிருக்கும் குயில் கூவுவதைக் கேட்டதுமே, மான்குட்டியும் குயிலைப் போலவே பதில் குரல் கொடுக்கும். மான்குட்டி இப்படிக் குரல் கொடுப்பது தன்னைக் கேலி செய்வதற்காக என்று நினைத்து குயில் கோபம் கொள்ளும்.

குரங்கு பேசாமலிருந்தாலும் மான்குட்டி வலியச் சென்று குரங்கைப் போலச் சத்தமிடும். வரிக்குதிரையைப் பார்த்தால் வரிக்குதிரை போலவே கனைத்துக் காட்டும். பூனையைப் பார்த்தால் ‘மியாவ்’ என்று குரல் கொடுக்கும்.

குயில், குரங்கு, வரிக்குதிரை, அணில், காட்டுப்பூனை போன்ற விலங்குகள் மான்குட்டியைப் பற்றி தாய் மானிடம் சொல்லி வருத்தப் பட்டன. அதைக் கேட்ட தாய் மான் தன் குட்டியிடம், “இப்படியெல்லாம் அவர்களைக் கேலி செய்யக் கூடாது” என்று கண்டிப்புடன் சொன்னது.

ஆனால், வயது முதிர்ந்த மான் மட்டும், “சரி சரி விடு, அவன் குழந்தைதானே... நான் கவனித்துக்கொள்கிறேன்” என்று தாய் மானிடம் சமாதானம் சொன்னது.

காட்டில் குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியது. கடுமையான வெயில். ஏரிகளும் குளங்களும் வற்றத் தொடங்கின. விலங்குகள் எல்லாம் தண்ணீரைத் தேடி வெகுதொலைவுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டன.

நாளடைவில் மான்கூட்டத்துக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. உண்பதற்குப் போதிய அளவில் புற்கள்கூடக் கிடைக்கவில்லை.

அதனால் மான்கள் அனைத்தும் புல்லும் தண்ணீரும் இருக்கும் இடத்திற்கு இடம்பெயரலாம் என்று தீர்மானித்தன. அவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து பயணம் மேற்கொண்டன.

அவை சற்றுத் தாழ்வான இடத்திற்கு வந்தபோது, தொலைவில் கிச்சிலிப் பறவைகள் பறந்து செல்வதை முதிர்ந்த மான் பார்த்தது.

அது மற்ற மான்களிடம், “கிச்சிலிப் பறவைகள் பறக்கும் இடத்தில் நிச்சயம் தண்ணீர் இருக்கும். அதனால் நாம் அந்தத் திசையில் போகலாம்” என்று சொல்ல, அனைத்து மான்களும் அந்தத் திசை நோக்கிச் சென்றன.

மூத்த மான் சொன்னது போலவே சிறிது தூரத்தில் அவை ஓர் ஏரியைக் கண்டன. ஏரியில் நீர் இருந்தது. ஏரியின் கரை முழுவதும் பசும்புற்களும் வளர்ந்திருந்தன. அவற்றைக் கண்ட மான்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

‘கோடைக்காலம் முடியும்வரை நாம் இங்கேயே தங்கியிருந்தால் உணவுக்கும் தண்ணீருக்கும் பஞ்சமேயிருக்காதே’ என்று நினைத்த மான்கள், அந்தப் பகுதியிலேயே வசிக்கலாம் என்று தீர்மானித்தன.

மான்கள் உறங்கிக்கொண்டிருந்த ஒருநாள் இரவில், எங்கிருந்தோ சில ஓநாய்கள் ஏரிக்கரைக்கு வந்தன. அவை ஏரிக்கரையில் பதிந்திருந்த மான்களின் குளம்புத் தடங்களைக் கவனித்தன.

‘ஆஹா! இந்த இடத்தில் நமக்குக் குடிக்கத் தண்ணீர் மட்டுமல்ல, இரையாக மான்களும் நிறையவே இருக்கின்றன’ என்று ஓநாய்கள் நாக்கைச் சப்புக்கொட்டின.

‘மான்கள் அருகில்தான் எங்காவது இருக்கும்’ என்று புரிந்துகொண்ட ஓநாய்கள், அங்குமிங்கும் மான்களைத் தேடிக்கொண்டே வந்தன.

ஓநாய்கள் தூரத்தில் வருவதை உறங்காமலிருந்த மூத்த மான் பார்த்துவிட்டது. உடனே அது மெல்லிய குரல் கொடுத்து மான்குட்டியை எழுப்பியது. மான்குட்டி விழித்ததும் அதன் காதில் ஏதோ முணுமுணுத்தது.

மறு நொடியே மான்குட்டி தன் குரலை மாற்றி, சிங்கம்போல கர்ஜனை செய்தது. சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்ட ஓநாய்கள் திடுக்கிட்டன.

அடுத்து மான்குட்டி தன் குரலை மாற்றி, புலியைப் போல உறுமியது.

அவ்வளவுதான்! ‘இனி இங்கே இருந்தால் நாம் சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் இரையாக வேண்டியது தான்’ என்று நினைத்த ஓநாய்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடிவிட்டன.

இதற்குள் மற்ற மான்களும் விழித்துக் கொண்டு, நடப்பதை யெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தன.

‘‘ஆஹா! என் செல்லக்குட்டி சரியான நேரத்தில் சிங்கத்தைப் போலவும் புலியைப் போலவும் குரல் எழுப்பி அனைவரையும் காப்பாற்றிவிட்டானே’’ என்று தாய் மான் தன் குட்டியைப் புகழ்ந்தது. மான்குட்டிக்கு இந்த யோசனையைச் சொல்லிக் கொடுத்த மூத்த மானையும் பாராட்டியது.

முதிர்ந்த மான், “நம் குழந்தை களிடம் பல திறமைகள் ஒளிந் திருக்கும். ஆனால், அந்தத் திறமையை எந்த நேரத்தில் எதற்காக, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரியாது. பெரியவர்களாகிய நாம் அந்தத் திறமையை எந்த நேரத்தில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லித்தர வேண்டும். அப்படிச் செய்தால் நிச்சயம் குழந்தைகளின் திறமை எல்லோருக்குமே பயன்படும். நம் செல்ல மான்குட்டியைப் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று சிங்கம், புலிகளின் குரலைக் கேட்கச் செய்தேன். அவனும் அவற்றை நன்றாகக் கவனித்துக் கற்றுக்கொண்டான். அந்தக் குரல்தான் இன்று நம்மை ஓநாய்களிடமிருந்து காப்பாற்றியது” என்று சொன்னது.

மூத்த மான் சொன்னதைக் கேட்ட அனைத்து மான்களும், தங்கள் பிள்ளைகளிடம் ஒளிந்திருக்கும் திறமையைக் கண்டறிந்து வளர்ப்பதாக உறுதியளித்தன.

நீங்களும் எழுதலாம்!

மாயாபஜார் இணையப் பகுதிக்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பெரியவர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கலாம். கதை, கட்டுரை, துணுக்குகள், நகைச்சுவை, அனுபவம் என்று எதை வேண்டுமானாலும் எழுதி அனுப்பலாம். சுவாரசியமான படைப்புகள் மாயாபஜார் இணையப் பகுதியில் (ஆன்லைன்) பிரசுரமாகும்.

மின்னஞ்சல்: mayabazaar@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in