

நேர மண்டலம் என்பது என்ன? தென் துருவத்துக்கு நேர மண்டலம் ஏன் இல்லை, டிங்கு?
- அ.ரா. அன்புமதி, 8-ம் வகுப்பு, லிட்ரசி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சாமளாபுரம், திருப்பூர்.
வணிகம், சட்டம், சமூகக் காரணங்களுக்காக நிலையான ஒரு நேரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக மனிதர்கள் ‘நேர மண்டலத்தை’ (Time Zone) உருவாக்கியிருக்கிறார்கள். பூமி மீது சூரியன் விழும் ஒளியை வைத்து, வட, தென் துருவங்களை இணைக்கும் தீர்க்கரேகைக் கோடுகளால் நேர மண்டலங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. தென் துருவம் நிலப்பகுதியாக இருந்தாலும் அங்கு நீண்ட பகல், நீண்ட இரவு நிலவுகிறது. வட துருவம் ஆர்டிக் கடலின் மத்தியில் அமைந்துள்ளதால் வானிலை மாற்றம் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.
அதனால் வட, தென் துருவங்களுக்கு நேர மண்டலத்தை நிர்ணயிக்கவில்லை. பூமியின் ஒரு பாதி இரவாகவும் இன்னொரு பாதி பகலாகவும் இருப்பதால், பொதுவாக இரு நேர மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நேர மண்டலங்கள் மூலம் அருகில் உள்ள நாடுகளின் நேரத்தை எளிதாக அறிந்துகொள்ள முடியும். சுமார் ஒரு மணி நேர வித்தியாசம்தான் இருக்கும். சில இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நேர மண்டலங்கள் பின்பற்றப்படுகின்றன. வட, தென் துருவங்களில் மனிதர்கள் நிரந்தரமாகத் தங்குவதில்லை. ஆராய்ச்சிக்குச் செல்பவர்கள் அவரவர் விருப்பப்படி, அவரவர் நாட்டு நேர மண்டலத்தைப் பின்பற்றலாம், அன்புமதி.
குளியல் சோப்புகள் பல வண்ணங்களில் இருந்தாலும் அவற்றிலிருந்து வரும் நுரை மட்டும் வெள்ளையாக இருப்பது ஏன், டிங்கு?
- பா.வி. பிரணவ், 5-ம் வகுப்பு, மாடல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, வண்ணாரப்பேட்டை, சென்னை.
தண்ணீரில் வண்ண சோப்புகளைத் தேய்க்கும்போது நுரை உண்டாகிறது. இந்த நுரையில் சோப்பைவிடக் காற்றின் பங்கு அதிகமாக இருக்கிறது. இயற்கையான வெளிச்சம் வெண்மையாக இருப்பதால், அது நுரையில் பிரதிபலிக்கிறது. அதனால்தான் சோப்பு வண்ணமாக இருந்தாலும், நுரை வெண்மையாக இருக்கிறது. ஓர் அறையில் சிவப்பு, பச்சை, மஞ்சள் விளக்கு ஒளிக்குக் கீழ் சோப்பு நுரையைக் கொண்டு சென்றால், அந்த விளக்கின் ஒளியால் நுரை வண்ணமாகத் தெரியும். முயற்சி செய்து பாருங்கள், பிரணவ்.
ஆமை ஏன் மெதுவாக நகர்கிறது, டிங்கு?
- மு. ஜீவஹரிணி, 8-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
ஆமைகளின் உடலில் வளர்சிதை மாற்றம் மெதுவாகவே நடைபெறுகிறது. ஆமைகள் தாவரங்களை உணவாகக்கொள்கின்றன. அதனால், வேகமாகச் சென்று, உணவை வேட்டையாட வேண்டிய அவசியமும் இல்லை. பரிணாம வளர்ச்சியில் உணவுக்காக வேட்டையாடும் விலங்குகளும் வேட்டையாடப்படுகிற இரை விலங்குகளும் வேகமாகச் செல்லும் விதத்தில் படைக்கப்பட்டிருக்கின்றன.
ஆமைகளுக்கு உணவுக்காக வேட்டையாட வேண்டிய அவசியமில்லை. எதிரியைக் கண்டால் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஆமையின் முதுகில் கடினமான ஓட்டை இயற்கை வழங்கியிருக்கிறது. அதனால், ஆபத்து என்று உணர்ந்தவுடன் ஆமை தன்னுடைய தலையையும் கால்களையும் ஓட்டுக்குள் இழுத்துக்கொள்கிறது. இதனால் எளிதில் உயிர் தப்பிவிடுகிறது, ஜீவஹரிணி.