

(கதை எழுதியவரின் கதை)
அழ. வள்ளியப்பா
சிண்ட்ரெல்லா கதையைத் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. உலகம் முழுவதுமே சிண்ட்ரெல்லா பிரபலம். இந்தக் கதையை எழுதிய சார்லஸ் பெரால்ட் என்பவரை நாம் மறந்து விடலாமா?
பதினேழாம் நூற்றாண்டில் பிரெஞ்சு தேசத்தில் நாடோடிக் கதைகளுக்கும் தேவதைக் கதைகளுக்கும் நல்ல கிராக்கி ஏற்பட்டது. இந்தியாவிலிருந்தும் பாரசீகத்திலிருந்தும்கூடப் பல கதைகளைத் திரட்டிச் சென்றார்கள். அவற்றையெல்லாம் பிரெஞ்சு மக்கள் ஆவலாகக் கேட்டார்கள். சொல்லச் சொல்ல அந்தக் கதைகளுக்கு மெருகு ஏறியது. கேட்கக் கேட்க மக்களுக்கு இன்பம் பெருகியது. ஒருவரைவிட ஒருவர் அந்தக் கதைகளைச் சிறப்பாகச் சொல்லத் தொடங்கினார்கள். இதில் பலத்த போட்டியும் ஏற்பட்டது.
பிரெஞ்சு மக்கள் பொதுவாகவே கலை உணர்ச்சி நிறைந்தவர்கள். அதனால், அவர்கள் இதுபோன்ற கதைகளை மிகவும் விரும்பிக் கேட்டார்கள். மக்களின் இந்த விருப்பத்தை நன்கு புரிந்துகொண்டார் பெரால்ட். அப்போது அவருக்கு எழுபது வயதிருக்கும். 'நாம் கேள்விப்பட்ட தேவதைக் கதைகளைக் குழந்தைகளுக்கு ஏற்றபடி எழுதி வெளியிட்டால், எத்தனையோ குழந்தைகள் படித்து இன்புறுவார்களே!' என்று நினைத்தார். சில கதைகளை எழுதினார். அந்தக் கதைகள் எல்லாமே இன்று உலகப் புகழ் பெற்றுவிட்டன!
பெரால்ட், பாரிஸ் நகரத்தில் 1628-ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய அப்பா ஒரு பாரிஸ்டர். அவருடன் கூடப் பிறந்தவர்கள் மூவர். அவர்தான் கடைக்குட்டி. நால்வரும் நன்கு படித்தவர்கள். எல்லோருமே நல்ல உத்தியோகத்தில் இருந்தார்கள். பெரால்ட் சட்டப் படிப்புப் படித்துத் தேறியவர். ஆனால், சில ஆண்டுகள்தாம் வக்கீல் தொழில் நடத்தினார். பிறகு, அவருடைய அண்ணன் ஒருவருக்கு உதவியாகச் சிலகாலம் வேலை பார்த்தார்.
பெரால்ட் மக்களின் மன உணர்ச்சிகளை நன்கு அறிந்தவர். இது பற்றி அவர் பல ஆராய்ச்சிகள் செய்து பார்த்தவர்.
பெரால்ட் கடைசிக் காலத்தில்தான் குழந்தைக் கதைகளை எழுதினார். ஆரம்பக் காலத்தில் பெரியவர்களுக்காகப் பல கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதிப் புகழ் பெற்றார்.
ஒரு முறை அவர் கவிதை எழுதினார். அதனால் ஒரு பெரிய சண்டையே கிளம்பிவிட்டது. பழமையைப் போற்றுகிறவர்களுக்கும் புதுமையைப் பாராட்டுகிறவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்தச் சண்டை பிரெஞ்சு தேசத்தில் மட்டும் நடைபெறவில்லை; இங்கிலாந்திற்கும் பரவலானது. இதனால், அவரது பெயர் எங்கும் தெரிய வாய்ப்பு ஏற்பட்டது.
பெரால்ட் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தார். பிரெஞ்சு அரசாங்க மாளிகைகளையெல்லாம் அவர்தான் நிர்வாகம் செய்துவந்தார். பிரெஞ்சு இலக்கியக் கழகத்திலே அவர் ஒரு முக்கிய அங்கத்தினராக விளங்கினார். அக்கழகத்தில் நடக்கும் தேர்தல்களில் ரகசிய வாக்கு அளிக்கும் முறையை அவர்தான் முதலில் ஏற்படுத்தினார். பெரியவர்களுக்காகவே எழுதி வந்த பெரால்ட் வருங்காலத்தில் பெரியவர்களாகப் போகும் குழந்தைகளை நினைத்துப் பார்த்தார். 'பெரியவர்களான பின் நல்ல இலக்கியங்களைப் படிக்க வேண்டுமானால், இப்போதே அவர்களைத் தயார் செய்ய வேண்டும்' என்று எண்ணினார். பிறகுதான் குழந்தைகளுக்கு எழுதத் தொடங்கினார்.
பெரியவர்களுக்காகவே எழுதிவந்த பெரால்ட் திடீரென்று குழந்தைகளுக்காக எழுதத் தொடங்கியதும் பலர் கேலி செய்தார்கள். "அர்த்தமில்லாத கதைகளையெல்லாம் எழுதுகிறாரே!" என்று கூறி ஏளனம் செய்தார்கள். ஆயினும், அவர் குழந்தைகளுக்கு எழுதுவதை நிறுத்தவில்லை; தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார்.
அவரது நல்ல எண்ணமும் விடாமுயற்சியும் வீண் போகவில்லை. அவர் படைத்த பாத்திரங்கள் இன்று குழந்தைகளின் உள்ளங்களில் நிலையான இடம் பெற்றுவிட்டன!