

ஓட்டமும் நடையுமாக விரைந்துவந்தார் அப்பா.‘‘மாரிகோல்ட், உன்னை எங்கெல்லாம் தேடுவது? தோட்டத்தில் தனியாக உட்கார்ந்து என்ன செய்துகொண்டிருக்கிறாய்? சரி, இதைக் கேள். நேற்று இரவு நம் மாளிகைக்குக் கடவுள் வந்திருந்தார் என்று சொன்னால் நம்புவாயா? வந்ததோடு இல்லாமல், உனக்கு என்ன வரம் வேண்டும், கேள் மிடாஸ் என்றும் சொன்னார். அப்படியே திகைத்து நின்றுவிட்டேன்.
என்ன கேட்பது? இன்னும் சில மாளிகைகள்? மலையளவு வைரம்? பழங்காலத்துப் புதையல்? என் அன்பு மகளான நீ காலமெல்லாம் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு எவ்வளவு செல்வம் தேவைப்படும் என்று யோசித்தேன். பிறகு புத்திசாலித்தனமாக ஒரு வரம் கேட்டேன். என்ன தெரியுமா?”
என்ன என்பதுபோல் அப்பாவைப் பார்த்தேன்.
‘‘நான் எதைத் தொட்டாலும் தங்கமாக மாறவேண்டும் என்றேன். கடவுளும் நிறைவேற்றிவிட்டார். உண்மையாகவே வரம் வேலை செய்கிறது, மாரிகோல்ட்! நான் தொட்டால் கல்லும் மண்ணும் கண் முன்னால் தங்கமாக மாறுகிறது. இரு, உன் முன்னால் அந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டுகிறேன்.’’
‘‘ஐயோ, வேண்டாம் அப்பா” என்றேன் அதிர்ச்சியோடு. ‘‘நீங்கள்தானா அது? ஏன் இப்படியொரு வரம் வேண்டினீர்கள் அப்பா? என் ரோஜா செடியைக் கொன்றது நீங்கள்தானா? என் அழகிய குளத்திலுள்ள நீரெல்லாம் உறைந்து நின்றுவிட்டதற்குக் காரணம் நீங்கள்தானா?’’
‘‘ஹாஹா, இதற்கு ஏன் வருந்துகிறாய் மாரிகோல்ட்? எல்லாம் தங்கமாக மாறினால் நல்லதுதானே? காலை பூத்து மாலை வாடிவிடும் ரோஜாவின் மதிப்பு இப்போது எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்று தெரியுமா? கல்லும் மண்ணும் செடியும் கொடியும் தங்கமாக மாறிவிடும் என்றால் இந்த இடமே சொர்க்கமாக மாறிவிடும் அல்லவா?’’
‘‘இல்லை அப்பா. இந்த மாளிகை ஏற்கெனவே நரகமாக மாற ஆரம்பித்துவிட்டது. பறவைகளின் ‘கீச் கீச்’ சத்தம் கேட்டுத்தான் தினமும் நான் கண் விழிப்பது வழக்கம். இன்று காலை ஒரு பறவையும் என் தோட்டத்தை நெருங்கவில்லை.
அலையலையாக மிதந்துவரும் பட்டாம்பூச்சிகளில் ஒன்றைக்கூட இன்னும் நான் காணவில்லை. அசையாத ரோஜா மலரை, ஆடாத சூரியகாந்தியை, மணம் பரப்பாத மல்லிகையைக் கண்டு பூச்சிகளும் வண்டுகளும் நத்தைகளும் எறும்புகளும் அஞ்சுவதை நான் என் இரு கண்களால் கண்டேன். இப்படியொரு சாபம் ஏன் வந்து நமக்குச் சேரவேண்டும் என்றுதான் காலை முதல் இந்தத் தோட்டத்தில் அமர்ந்து கலங்கிக்கொண்டிருந்தேன். அது நீங்கள் வாங்கி வந்த வரம் என்பது இப்போதுதான் தெரிகிறது.’’
‘‘எறும்பும் பட்டாம்பூச்சியும் வராவிட்டால் என்ன மாரிகோல்ட்? தங்கம் போதாதா?’’ என்றார் அப்பா.
‘‘நம்மைச் சுற்றியுள்ள எல்லாமே தங்கமாக மாறிய பிறகு அடுத்து நாம் என்ன செய்வோம் அப்பா? இன்னொருமுறை கடவுள் தோன்றி, இன்னொரு வரம் தருகிறேன் கேள் மிடாஸ் என்றால், அப்போது கேட்பதற்கு என்ன பாக்கி வைத்திருக்கிறீர்கள்? நான் பார்ப்பதெல்லாம் வைரமாக மாறவேண்டும் என்றா? என்னைச் சுற்றியுள்ள காற்று வைடூரியமாகவும் மாணிக்கமாகவும் மரகதமாகவும் மாறவேண்டும் என்றா?’’அப்பா ஏதோ சொல்ல வாயெடுத்தார். ஆனால், முடியவில்லை.
‘‘நம் மாளிகைக்கு அருகில் ஏராளமான குடிசைகள் இருக்கின்றன. நம் மாளிகையிலேயே ஏராளமான பணியாளர்கள் இருக்கிறார்கள். உனக்கு என்ன வேண்டும் என்று கடவுள் கேட்டதும், என்னிடம் ஏற்கெனவே ஏராளமாக இருக்கிறது. என் மக்களுக்கு ஏதேனும் கொடு என்று ஏன் கேட்கவில்லை நீங்கள்? இன்னும் எவ்வளவு மாளிகைகள் இருந்தால், எவ்வளவு செல்வம் இருந்தால் போதும் என்பீர்கள்?
இனி எப்படி உண்பீர்கள் அப்பா? எதைப் பருகுவீர்கள்? ஒரு புறாவை, ஒரு புள்ளிமானை, ஒரு பூனையை இனி உங்களால் மகிழ்ச்சியோடு தடவிக்கொடுக்க முடியுமா? உங்களை நம்பி இனி ஒரு மயில் நெருங்கி வருமா? ஒரு பட்டாம்பூச்சி அச்சமின்றி வந்து உங்கள் தோள்மீது இனி அமருமா? ஒரு குழந்தையை இனி உங்களால் வருடிக்கொடுக்க முடியுமா? தவறி உங்கள் விரல் என்மீது பட்டுவிட்டால் நான் என்னாவேன் அப்பா? ஒரு தங்க பொம்மையைக் காட்டி இவள்தான் என் மாரிகோல்ட் என்று பெருமிதத்தோடு சொல்லிக்கொள்ள முடியுமா உங்களால்?
‘‘எனக்காக அல்ல, எல்லாம் உனக்காகத்தான் என்று தயவுசெய்து சொல்லாதீர்கள். அதிக தங்கம் இருந்தால் அதிக மகிழ்ச்சியோடு நான் வாழ்வேன் என்று நீங்கள் எப்படி முடிவெடுக்கலாம் அப்பா? என்னைப் பற்றியும் என் கனவுகள் பற்றியும் எதுமே தெரிந்துகொள்ளாமல்தான் இவ்வளவு காலம் இருந்திருக்கிறீர்களா?
‘‘உங்கள் கை படாத புத்தகம்தான் இனி உண்மையான புத்தகம். உங்கள் கை படாத இலை மட்டுமே விரிந்து, வளரும். உங்கள் கை படாத குளத்திலுள்ள மீன்கள்தாம் இனி வாழும். உங்கள் கையில் படாத மழைத்துளி மட்டுமே நிலத்தில் சேரும். இதுதான் நீங்கள் கேட்டு வாங்கிய வரமா அப்பா? அதுவும் எனக்காக?’‘
அப்பாவின் கண்கள் கலங்குவதைக் கண்டபோது பாவமாக இருந்தது. தழுதழுக்கும் குரலோடு சொன்னேன்.
‘‘அப்பா, உங்கள் கடவுளிடம் உடனே ஓடுங்கள். நீங்கள் பெற்றுக்கொண்ட வரத்தை அவரிடமே திருப்பிக்கொடுங்கள். ரோஜா மலர் மீண்டும் பூத்துக் குலுங்கட்டும். தோட்டம் மீண்டும் உயிர் துளிர்க்கட்டும். உங்களை அணைத்துக்கொள்ள என் கரங்கள் மீண்டும் நீண்டு வரட்டும். செய்வீர்களா அப்பா? உங்களுக்காக, எனக்காக, நமக்காக, நம் மக்களுக்காக.’’
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
ஓவியம்: லலிதா