

தென்னாப்பிரிக்காவில் ‘சீல் தீவு’ என்கிற இடத்துக்கு அருகில் உள்ள கடற்பகுதிக்கு வந்து சேர்ந்திருப்பதாகக் காட்டியது நாட்டிலஸ் நீர்மூழ்கியில் இருக்கும் வரைபடம். கடற்பரப்பின் அருகில் நீர்மூழ்கியைக் கொண்டு சென்ற ஆராய்ச்சியாளர் அருணா, நீர்மூழ்கியின் ஒரு பகுதி நீருக்கு மேலேயும் இன்னொரு பகுதி நீருக்குக் கீழேயும் இருக்கும்படி அதை நிறுத்திவைத்தார். ரோசி, செந்தில், ரக் ஷா மூவரும் ஆர்வமாகக் கவனித்தனர்.
கேப் ரோமக் கடல்நாய் (Cape Fur seal) என்று அழைக்கப்படும் கடல் பாலூட்டிகளின் சிறு கூட்டம் சற்றுத் தொலைவில் மெதுவாக நீந்திக்கொண்டிருந்தது. மீன்களை வேட்டை யாடிக்கொண்டிருந்த அந்தக் கடல்நாய்க் கூட்டத்தில், திடீரென்று எல்லாக் கடல்நாய்களும் எச்சரிக்கையோடு இருப்பதுபோல உடல் மொழியைக் காட்டின. தொலைவில் நிழல்போலத் தெரிந்த ஓர் உருவம், அந்தக் கூட்டத்துக்குப் பக்கத்தில் வந்ததும் செந்தில் அலறிவிட்டான், “ஆ... சுறா மீன்!.”
“எதுக்குப் பயப்படுற செந்தில்?” என்று அருணா கேட்க, “எவ்வளவு பெரிய மீன்! நம்மையே விழுங்கிடும். பயமா இருக்கு, போயிடலாம்” என்றான் செந்தில்.
“இது பெருஞ் சுறா இனம் (Great white shark). சுறாக்கள் மிகப்பெரிய உருவத்தைக் கொண்டவை. 15 அடி நீளமும் 1,800 கிலோ எடையும் கொண்ட சுறா இனங்கள். ஆனா, அதோட இலக்கு நாம இல்லை, இங்கு இருக்கும் கடல்நாய் கூட்டம்தான். கவனமா பாருங்க” என்று அருணா விளக்கினார்.
சுறா வந்தவுடன் கடல்நாய்கள் அங்குமிங்கும் சிதறி நீந்தின. ஒரு குறிப்பிட்ட கடல்நாயை சுறா குறிவைத்துப் பின்தொடர ஆரம்பித்தது. அந்தக் கடல்நாய் உடனே சுதாரித்துக்கொண்டு வேகமாக நீந்தியது. சுறாவின் வாய் தன்னுடைய உடலுக்குப் பக்கத்தில் வருவதுபோல நெருங்கியதும் உடனே கடல்நாய் தன் உடலை வளைத்துத் திடீரென்று திரும்பியது. கொஞ்சம் தடுமாறிய சுறா, உடனே சுதாரித்துக்கொண்டு விடாமல் துரத்தியது. அடுத்தடுத்து வளைந்து திரும்பி சுறாவுக்குப் போக்குக் காட்டிய கடல்நாய், இறுதியில் தப்பிவிட்டது.
“அட! கடல்நாய் தப்பிச்சு போயிருச்சே” என்று ரக் ஷா ஆச்சரியப்பட்டாள். “இந்தப் பெருஞ் சுறாக்கள், ஓங்கில், கடல்நாய் போன்ற கடல் பாலூட்டிகளைத்தான் வேட்டையாடும், இந்த இரைகள் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகள் என்பதால் எல்லா நேரமும் வேட்டை வெற்றிகரமாக நடப்பதில்லை” என்று அருணா விளக்கினார்.
“அப்படின்னா இன்னிக்குச் சுறா பட்டினிதான்” என்று ரோசி சிரித்தாள். “அவசரப்படாத ரோசி... சுறாக்களும் புத்திசாலித்தனமான விலங்குகள்தாம். கடலுக்கடியில் ஒரு ஏவுகணை போலச் சீறிப்பாயும் உடல், தேவைப்பட்டால் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகம் நீந்தக்கூடிய ஆற்றல் எல்லாம் கொண்ட உச்ச வேட்டையாடிகள் இவை. இவற்றுக்கு ஆறு புலன்கள் உண்டு” என்று அருணா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, “அது எப்படிச் சாத்தியம்?” என்று ரக் ஷா கேட்டாள்.
“ஆமாம், அதீத பார்வைத்திறன், சுவை உணர்வு, ஒரு பில்லியன் துளி கடல்நீரில் ஒரு துளி ரத்தம் இருந்தால்கூட உணரக்கூடிய அளவுக்கு மோப்ப சக்தி, சுற்றியுள்ள சூழலை உணரும் தொடுபுலன், துல்லியமான கேட்கும் சக்தி, எல்லாவற்றையும் தாண்டி சுறாக்களுக்கு இன்னும் ஒரு சூப்பர் பவர் இருக்கு; அதுதான் மின்சாரத்தை உணரும் திறன் (Electroreception). இரை விலங்குகளின் உடல் செயல்பாடுகளாலும் நரம்புகளாலும் உருவாக்கப்படும் சின்ன மின் அதிர்வைக்கூடச் சுறாக்கள் தெரிஞ்சுக்கும். சுறாக்களோட தலைப் பகுதியில் ஆம்புலே ஆஃப் லோரென்சினி (Ampullae of Lorenzini) என்கிற சிறப்பு உறுப்புகள் இருக்கின்றன. இவை மின்சாரத்தைக் கண்டுபிடிக்கும். இத்தனை ஆற்றல் வைத்திருக்கிற சுறாக்கள், சும்மா ஒருமுறை தோல்வியடைஞ்சதால வேட்டையை நிறுத்திடுமா என்ன?" என்று கேட்ட அருணா, “அங்கே பாருங்க” என்று பரபரப்பானார்.
மீண்டும் ஒரு கடல்நாயை, சுறா குறிவைத்துத் துரத்தியது. இந்த முறை கடல்நாய் எவ்வளவு வளைந்தாலும் சுறா சோர்வடையாமல் அதைப் பின்தொடர்ந்தது. எப்படி நீந்தினாலும் சுறாவிடமிருந்து தப்பிக்க முடியாத கடல்நாய், ஒருகட்டத்தில் நீருக்கு வெளியே எம்பிக் குதித்தது. சுறாவும் உடனே கடல்நீருக்கு மேலே 10 அடி உயரத்துக்கு எம்பி வாயை அகலமாகத் திறந்து, அந்தரத்தில் இருந்த கடல்நாயை எட்டிப் பிடித்தது!
நீர்மூழ்கிக்குள் குண்டூசி போட்டாலும் கேட்கும், அவ்வளவு அமைதியாக வியப்புடன் எல்லோரும் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
கடல்நாயைக் கவ்விப்பிடித்த சுறா, நீருக்குள் விழுந்து இரையை உண்ணத் தொடங்கியது.
கைதட்டி எல்லோருடைய கவனத்தையும் திருப்பிய அருணா, “என்ன ஆச்சரியமா இருக்கா? இதை நாங்க Breaching என்று சொல்வோம். இரையைப் பிடிக்க இறுதி முயற்சியாக, தன்னுடைய பிரம்மாண்டமான உடலை உந்தித் தள்ளி சுறாக்கள் காற்றில் துள்ளிக் குதிக்கும். 40 கோடி ஆண்டுகளா பூமியின் கடற்பகுதிகள்ல தாக்குப்பிடிச்சு, உச்ச வேட்டையாடியா இருக்கறதுன்னா சும்மாவா? பல வித்தைகள் வேணும், இல்லையா?” என்று கேட்டார்.
இன்னும் ஆச்சரியத்தில் விழியை விரித்தபடியே இருந்த ரோசி, “ஆமாம், இதே வேகத்தோட நம்மைத் தாக்கியிருந்தா என்ன ஆகும்?” என்றாள்.
“என்ன நண்பர்கள் குழுத் தலைவரே, பயந்துட்டீங்களா?” என்று சிரித்த அருணா, “சுறாக்கள் மனிதனைத் தாக்கும் நிகழ்வுகள் மிகவும் குறைவு, அதுவும் தவறுதலா நடப்பதுதான். உண்மையில் சுறாக்கள் மனிதனை உண்ண விரும்புவதில்லை. பெருஞ் சுறாக்கள் இருக்கும் கடற்பகுதிகளில் எச்சரிக்கைகள் தரப்பட்டிருக்கும், அதைப் பின்பற்றினால் போதும்” என்று விளக்கினார்.
“பொதுவா சுறா இனங்கள் அழிந்து வருவதாகப் படிச்சிருக்கேன். டைனசோர்களையும் தாண்டி வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த மீன்களை நாம் பாதுகாக்கணும்” என்றாள் ரக் ஷா.
“உண்மைதான்” என்று அருணா சொல்லிக் கொண்டிருந்தபோதே, வேறு ஒரு பெருஞ் சுறா கடல்நாய்களின் கூட்டத்துக்கு நடுவில் வந்து தன் வேட்டையைத் தொடங்கியது.
கட்டுரையாளர், கடல்சார் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: nans.mythila@gmail.com