அடிமையாக இருந்து எழுத்தாளராக மாறிய ஈசாப்!

அடிமையாக இருந்து எழுத்தாளராக மாறிய ஈசாப்!
Updated on
5 min read

(கதை சொன்னவரின் கதை)

அழ. வள்ளியப்பா

ஈசாப் கதைகள் உலகப் புகழ் பெற்றவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் படித்துச் சுவைக்கலாம். 'ஓநாயும் ஆட்டுக் குட்டியும்', 'சிங்கமும் சுண்டெலி யும்', 'நரியும் திராட்சையும்' போன்ற கதைகளை உலகத்தின் மூலை முடுக்கிலுள்ள குழந்தைகள்கூட அறிவார்கள்.

ஈசாப் முந்நூறுக்கு மேற்பட்ட கதைகளைக் கூறியிருக்கிறார். எல்லாம் குட்டிக் குட்டிக் கதைகளாகவே இருக்கும். இவற்றில் பெரும்பாலான கதைகள் விலங்குகள் கதைகளாகவேயிருக்கும். அல்லது பறவைகள் கதைகளாயிருக்கும். சிறிது நீளமாகவும் மனிதர்களைப் பற்றியும் அவர் சொன்ன கதைகள் மிகவும் குறைவு.

கழுதையும் குதிரையும்
கழுதையும் குதிரையும்

ஈசாப் காலத்தில் பத்திரிகையும் கிடையாது; புத்தகமும் கிடையாது. அவர் இந்தக் கதைகளை எதிலுமே எழுதி வைக்கவில்லை. அவர் தெருவிலே போய்க்கொண்டிருப்பார். அப்போது இருவர் சண்டை போட்டுக்கொள்வார்கள். உடனே, சண்டை போடாதபடி அவர்களைத் தடுப்பார். அங்கேயே அழகான குட்டிக் கதை ஒன்றையும் கூறுவார். கதையைக் கேட்ட தும், சண்டை போட்ட இருவரின் கோபமும் பறந்துவிடும்; சண்டை போட்டது தவறு என்று அவர்கள் உணருவார்கள்.

இதேபோல் அவர், கதைகளைக் கூறிக் கூறி, நாட்டில் நடந்த கலகங்கள், சண்டைகள் முதலியவற்றையெல்லாம் அடக்கியிருக்கிறார். அரசர்களுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பல விரோதங்களைத் தீர்த்து வைத்திருக்கிறார். அவ்வப்போது அவர் கூறிவந்த கதைகளை அவர் காலத்தில் இருந்தவர்களும், பின்னால் வந்தவர்களும் வாய்மொழியாகக் கூறி வந்தார்கள்.
அவர் இந்தக் கதைகளை எந்த மொழியில் கூறினார்? கிரேக்க மொழியில்தான் கூறிவந்தார். ஆம், அவருடைய தாய்மொழி அதுதான். அவருடைய தாய் நாடும் கிரேக்க நாடுதான்!

ஈசாப்
ஈசாப்

கிரேக்க நாட்டில், கிறிஸ்து பிறப்பதற்கு 260 ஆண்டுகளுக்கு முன்னர் ஈசாப் பிறந்தார் எனத் தெரிகிறது. ஆனால், அவர் கிரேக்க நாட்டில் எந்த ஊரில் பிறந்தார் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. 'எங்கள் ஊரில்தான் பிறந்தார்' என்று இப்போது ஆறு ஊர்க்காரர்கள் பெருமையாகக் கூறி வருகிறார்கள். ஒருவர் எப்படி ஆறு ஊர்களிலும் பிறந்திருக்க முடியும்? சில ஆராய்ச்சியாளர்கள், 'சாமோஸ்' என்ற ஊரில் தான் ஈசாப் பிறந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

ஈசாப் ஆரம்பத்தில் ஓர் அடிமையாகவே இருந்தார். ஆயினும் அதிக காலம் அப்படி இருக்கவில்லை. அவரது கெட்டிக்காரத்தனத்தையும், குட்டிக் கதை சொல்லும் திறத்தையும் கண்டு அவருடைய எஜமானர் அவருக்கு விடுதலை அளித்துவிட்டார்.

மனிதர்களுக்கு மனிதர்களைப் பற்றிய கதைகளையே கூறினால், அவர்கள் கோபம் அடையலாம் அல்லவா? அதனால்தான் ஈசாப் விலங்குகளையும் பறவைகளையும் பாத்திரங்களாக வைத்தே பெரும்பாலான கதைகளைக் கூறி வந்தார். அவர் கூறிய கதைகளை ஈசாப் இறந்த முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ‘பாப்ரியஸ்' என்ற கிரேக்க ஆசிரியர் ஒருவர் முதல் முதலாகத் தொகுத்து எழுதி வைத்தார். பிறகு லத்தீன், பிரெஞ்சு முதலிய மொழிகளிலும் இந்தக் கதைகளைக் கூறிவந்தார்கள்.
பிரெஞ்சிலிருந்து முதல்முதலாக ஆங்கிலத்தில் இந்தக் கதைகளை மொழி பெயர்த்து 1845ஆம் ஆண்டில் புத்தகமாக வெளியிட்டார்கள். இங்கிலாந்தில் முதல்முதலாக அச்சு இயந்திரத்தை அமைத்த காக்ஸ்டன் என்பவரே அந்தப் புத்தகத்தை அச்சிட்டவர்! அதன் ஒரு பிரதி இப்போதுகூட பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் கண்ணாடி அறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறதாம்!
ஈசாப் சொன்ன கதைகளைத் தவிர, ஈசாப்பைப் பற்றிய கதைகள் பல உள்ளன. அவரது மதி நுட்பத்தையும் தெளிவான சிந்தனையையும் மக்களிடத்திலே அவர் கொண்டிருந்த மாசற்ற அன்பையும் விளக்கக் கூடியவை அந்தக் கதைகள்.

ஈசாப் அடிமையாயிருந்தபோது, அவருடைய எஜமானர் தம் நண்பர்களிடம் ஒரு பந்தயம் கட்டினார். "சமுத்திரத்திலுள்ள நீர் முழுவதையும் நான் ஒரே நாளில் குடித்துப் பொட்டலாக்கிவிடுவேன். அப்படிச் செய்யாவிடில், என் சொத்து முழுவதும் உங்களுக்குச் சொந்தம்'' என்று குடிவிட்டுக் கூறிவிட்டார்.

ஆனால், மயக்கம் தெளிந்ததும், தாம் கூறியது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை உணர்ந்தார். “இப்போது என்ன செய்வது?" என்று அடிமையாயிருந்த ஈசாப்பைக் கேட்டார்.

ஈசாப் ஒரு நல்ல யோசனை கூறினார். அதன்படி சமுத்திரத்திலுள்ள நீரைக் குடிக்க எஜமானர் ஈசாப்புடன் புறப்பட்டார். மற்றவர்களும் சென்றார்கள்.

சமுத்திரக் கரைக்குப் போனதும், ஈசாப் அங்கு நின்றவர்களைப் பார்த்து, ''பெரியோர்களே, எங்கள் எஜமானர் சமுத்திரத்திலுள்ள நீர் முழுவதையும் குடிக்கத் தயார்தான். அவர் சமுத்திரத்திலுள்ள நீரை மட்டுமே குடிப்பதாகக் கூறினார். ஆனால், இப்போது பல ஆறுகளிலிருந்தும் நீர் வந்து சமுத்திரத்தில் விழுந்துகொண்டே இருக்கின்றதே! குடிக்கக் குடிக்கத் தண்ணீர் வந்து விழுந்துகொண்டே இருந்தால், எப்படிக் குடித்துப் பொட்டலாக்குவது? ஆகையால் முதலில் ஆற்று நீர் சமுத்திரத்தில் விழாதபடி, எல்லா ஆறுகளையும் தடுத்து நிறுத்த வேண்டும். நிறுத்தியவுடனே, என் எஜமானர் சொன்னபடி செய்து காட்டுவார்'' என்றார்.
உடனே வேடிக்கை பார்க்க அங்கு வந்திருந்தவர்கள், “ஆமாம், ஆமாம். அதுதான் சரி” என்றார்கள்.

பந்தயம் போட்டவர்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. வெட்கத்துடன் திரும்பிவிட்டனர்.
இப்படி அவர் பல சந்தர்ப்பங்களில் எஜமானரைக் காப்பாற்றியிருக்கிறார். அதனால்தான் அவருக்கு விரைவில் விடுதலை கிடைத்தது.

அவர் அடிமையாக இருந்தபோது மற்றொரு நிகழ்ச்சி நடந்தது.

அடிமை வேலையில் ஈசாப்
அடிமை வேலையில் ஈசாப்

ஒருநாள் அவருடைய எஜமானர் வெளியூருக்குப் புறப்பட்டார். சாமான்களைத் தூக்கி வருவதற்காகத் தம்முடன் சில அடிமைகளையும் அவர் அழைத்துச் செல்வது வழக்கம்.

அன்று எடுத்துச் செல்ல வேண்டிய சாமான்களை ஈசாப் ஒருமுறை பார்த்தார். பிறகு, மற்ற அடிமைகளைப் பார்த்து, "எனக்கு அதிக கனமில்லாத சுமையைத் தரவேண்டும்” என்று கேட்டார்.

ஈசாப்பிடம் மற்ற அடிமைகளுக்கு எப்போதுமே மதிப்பு உண்டு. ஆகையால், "சரி, உனக்கு வேண்டிய சாமானை எடுத்துக்கொள்'' என்றார்கள்.

உடனே ஈசாப் அங்கிருந்த பெரிய கூடை ஒன்றை எடுத்துக்கொண்டார். அந்தக் கூடை நிறைய ரொட்டிகள் இருந்தன. அவ்வளவு பெரிய கூடையை ஈசாப் தூக்கிக்கொண்டதும், மற்ற அடிமைகள் சிரித்தார்கள்.
"என்னப்பா இது! கனமில்லாத சுமையாக வேண்டுமென்று கேட்டாய். இவ்வளவு பெரிய கூடையைத் தூக்கிக் கொண்டிருக்கிறாயே !” என்று கேட்டார்கள்.

ஈசாப் அப்போது எதுவும் கூறவில்லை. ஆனால், ஈசாப் முட்டாளல்ல என்பதை அவருடைய நண்பர்கள் வெகு சீக்கிரத்திலே தெரிந்து கொண்டார்கள். ஈசாப் வைத்திருந்த கூடையிலிருந்த ரொட்டிகளை வேளா வேளைக்கு அவர்கள் எடுத்துத் தின்று வந்ததால், கனம் குறைந்துகொண்டே வந்தது. செல்ல வேண்டிய ஊரை நெருங்கும்போது ஈசாப் வெறும் கூடையுடன் ஆனந்தமாக நடந்து சென்றார். ஆனால், மற்றவர்கள் அப்படிச் செல்லவில்லை. போகப் போக, சுமையைத் தூக்க முடியாமல் அவர்கள் அயர்ந்துவிட்டார்கள்.

அப்போதுதான் மற்றவர்களுக்கு ஈசாப்பின் புத்திசாலித்தனம் தெரிந்தது.

ஈசாப் இருந்த ஊரின் நடுவே ஒரு குளம் இருந்தது. எல்லோரும் அதில்தான் குளிப்பார்கள்.

ஒருநாள் ஈசாப்பின் எஜமானர், ஈசாப்பை அழைத்து, ''நான் குளிக்க வேண்டும். குளத்திலே கூட்டம் அதிகமாக இருக்கிறதா என்று பார்த்து வா" என்று உத்தரவிட்டார்.

ஈசாப் உடனே சென்று பார்த்தார். அந்தக் குளத்திற்குச் செல்லும் வழியிலே குறுக்காக ஒரு பெரிய கல் கிடந்தது. குளிக்கச் சென்றவர்களில் சிலர் அதைத் தாண்டிக்கொண்டு சென்றார்கள். சிலர் கல் தடுக்கிக் கீழே விழுந்து, பிறகு எழுந்து சென்றார்கள். ஆனால், ஒருவர்கூட அதை அப்புறப்படுத்தவில்லை.

ஈசாப் இந்தக் காட்சியைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அதே நேரம் அங்கு வந்தார் ஒருவர். அவர் அந்தக் கல்லைத் தூக்கி ஓரமாகப் போட்டுவிட்டுக் குளிக்கச் சென்றார்.

ஈசாப் உடனே தம் எஜமானரிடம் சென்று, குளத்தில் ஒரே ஒரு மனிதர் தான் குளித்துக்கொண்டிருக்கிறார்'' என்று சொன்னார்.
“சரி, நான் போய்க் குளித்துவிட்டு வருகிறேன்'' என்று கூறி, எஜமானர் புறப்பட்டார்.

குளத்தங்கரைக்குச் சென்றதும், அங்கு ஏராளமானவர்கள் குளித்துக் கொண்டிருப்பதை எஜமானர் கண்டார். உடனே அவருக்கு ஈசாப்பின் மீது கோபம் கோபமாக வந்தது. வேகமாக வீட்டுக்குத் திரும்பினார். "ஏ ஈசாப், உனக்கு என்ன, கண் தெரியவில்லையா? குளத்தில் எத்தனை பேர் குளிக்கிறார்கள் ? ஒரே ஒருவர்தான் குளிக்கிறார் என்றாயே!" என்று சீறினார்.
"ஆமாம், அவர் ஒருவர்தான் மனிதர்! வழியிலே கிடந்த கல்லை அப்புறப் படுத்தி, மற்றவர்களை விழாமல் காப்பாற்றிய
அவர் ஒருவர் தான் மனிதர்!" என்றார் ஈசாப்.

தடுக்கி விழவைக்கும் கல்லைக் கண்டும், பேசாமல் சென்று குளித்துக் கொண்டிருந்தார்களே, அவர்களை மனிதர்கள் என்று சொல்ல விரும்பவில்லை ஈசாப். இதையறிந்த எஜமானர் ஈசாப்பின் உயர்ந்த எண்ணத்தை மிகவும் பாராட்டினார்.

நரியும் திராட்சையும்
நரியும் திராட்சையும்

அந்தக் காலத்தில் அரசர்களுக்கு ஈசாப்பிடம் அதிக மரியாதை உண்டு. அவர்கள் தங்களது சபைகளுக்கு ஈசாப்பை சகல மரியாதையுடன் வரவேற்று உபசரிப்பார்கள். ஈசாப் மக்களுக்குள்ள குறைகளை அரசர்களிடம் கூறுவார். மக்களுக்காக அரசர்களுடன் வாதாடுவார். அவரது முயற்சியால் எவ்வளவோ நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன.

மக்களின் நலன் கருதி வாழ்ந்த ஈசாப்பிற்கு, கடைசியில் மக்களாலேயே மரணம் ஏற்பட்டது என்று சொன்னால், யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், அவருடைய வாழ்க்கைச் சரிதம் நமக்கு அப்படித்தான் கூறுகிறது.

ஒரு முறை டெல்பி என்ற இடத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தைப் போக்க, மக்களுக்கு நிறையத் தங்கம் கொடுக்கலாம் என்று நினைத்தார் கிரோசஸ் என்ற அரசர். உடனே ஈசாப்பை அழைத்து வரச் செய்தார். அவரிடம் ஏராளமான தங்கக் காசுகளைக் கொடுத்தார். அவற்றைப் பஞ்சத்தால் அவதிப்படும் மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கச் சொன்னார்.

ஈசாப் தங்கக் காசுகளுடன் அந்தப் பிரதேசத்திற்குச் சென்றார். அரசரின் விருப்பப்படி அவர்களுக்குப் பகிர்ந்துகொடுக்க முயன்றார். ஆனால், சில பேராசைக்காரர்கள் எல்லாவற்றையும் தங்களிடமே கொடுத்துவிடும்படி நிர்ப்பந்தப்படுத்தினார்கள். ஈசாப் எவ்வளவோ சமாதானம் கூறிப் பார்த்தார்; அவர்கள் கேட்கவில்லை. 'பொன் முட்டையிடும் வாத்து' கதையைக்கூட அப்போதுதான் கூறினாராம். என்ன சொல்லியும் அவர்கள் இணங்கவில்லை. கலகம் செய்யத் தொடங்கினார்கள்.

வேறு வழியின்றி, ஈசாப் தங்கக் காசுகளை அந்த அரசருக்கே திருப்பி அனுப்பிவிட்டார். இதனால் கோபம் கொண்ட அந்தப் பேராசைக்காரர்கள் ஈசாப்பைப் பிடித்துச் செங்குத்தான ஒரு மலைக்குக் கொண்டு சென்றார்கள். மலையின் உச்சியிலிருந்து அவரைக் கீழே உருட்டிவிட்டார்கள். உலகத்துக்காக உழைத்த உத்தமரின் உயிர் பிரிந்துவிட்டது.

ஈசாப்பின் கருத்துகள் சாகாவரம் பெற்றவை. அவரது கதைகள் இக்காலத்துக்கு மட்டுமல்ல; எக்காலத்துக்கும் பயன் தரக்கூடியவை.

‘இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in