

‘உங்களுக்கு மிகவும் பிடித்த வெளிநாடு எது?' - மற்ற மாநிலங்களில் எப்படியோ. தமிழகத்தைப் பொறுத்தவரை, சிங்கப்பூர் என்று பலரும் சொல்வார்கள். ஏன் அப்படி?
மலாய், மேன்டரின், ஆங்கிலம் ஆகியவற்றுக்கு இணையாக, தமிழும் அங்கே ஆட்சி மொழி. அதனால்தான், அந்த நாட்டு அரசு, தனது தேசிய கீதத்தை, அதிகாரபூர்வமாகத் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறது.
படிப்படியாய் உயர்ந்தது
தனி நாடாக மலர்வதற்கு முன்பு சிங்கப்பூர், ஒரு மாநகரமாக இருந்தது. 1958-ல் சுபிர் சையது இயற்றி இசையமைத்த மலாய் மொழிப் பாடல் ஒன்று நகராட்சியின் விழாக்களில் இடம் பெற்றுவந்தது. அதன் பிறகு சிங்கப்பூர், 1959-ல் தன்னாட்சி பெற்ற பகுதியாக மாறியது. 1965-ல் முழு சுதந்திரம் பெற்ற தனி நாடாக ஆனது. இப்படி மாறியபோதும் அந்தப் பாடலே தேசிய கீதம் ஆனது.
ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலை வேண்டிப் போராட, மக்களை எழுச்சி பெறச் செய்ய, அந்தப் பாடலே உதவியது.
உருவானது கீதம்
சிங்கப்பூரில் பிரபலமாக இருந்தது விக்டோரியா திரையரங்கம். இது பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்டு 1958-ல் திறக்கப்படவிருந்தது. திறப்பு விழாவையொட்டி, ‘அரங்கத்தின் கோட்பாட்டைப் பிரதிபலிக்கும் விதமாக, புதிதாக ஒரு பாடல் எழுதி, இசை அமைத்து வழங்கினால் சிறப்பாக இருக்குமே' என்று திரையரங்க நிர்வாகம் கருதியது. அப்போது கேத்தே-கெரிஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் பாடலாசிரியர், இசையமைப்பாளராக இருந்தார் சுபிர் சையது. அவரை அணுகியது நிர்வாகம். அவரும் ஒப்புக்கொண்டார். அந்தப் பாடலை எழுதி இசையமைத்து முடிக்க அவருக்கு ஏறத்தாழ ஓர் ஆண்டுக் காலம் ஆயிற்று.
எளிமையான பாடல்
1958 செப்டம்பர் 6 அன்று அரங்கத்தின் திறப்பு விழாவில் முதன்முறையாக இசைக்கப்பட்டது அப்பாடல். விழாவில் கலந்துகொண்டு சிங்கப்பூர் துணை மேயர் ஆங் பாங் பூன் இப்படிக் குறிப்பிட்டார்: “அத்தனை இன மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக இருக்கிறது”.
நகர சபைக்கு நகர்ந்தது
துணைப் பிரதமர் தோ சின் சே நகரசபையின் பாடலாக இதைத் தேர்ந்தெடுத்தார். அதற்கு ஏற்ப, பாடல் வரிகளில் சில திருத்தங்கள் செய்து தந்தார் சுபிர் சையது. 1959 நவம்பர் 11 அன்று, சட்டமன்றம் ஏற்றுக்கொண்டது. 1959 நவம்பர் 30 அன்று, சட்டம் நிறைவேறியது. நாட்டுப் பாடல் ஆனது
தலைமை நிர்வாகப் பொறுப்பில் இருந்த ‘யூசுஃப் பின் இஷாக்' 1959 டிசம்பர் 3 அன்று முறையாக நாட்டு மக்களுக்கு பாடலை அறிமுகப்படுத்தினார். 1965 ஆகஸ்ட் 9 அன்று, மலேசியாவிடமிருந்து முழு சுதந்திரம் பெற்ற குடியரசு நாடாக மலர்ந்த சிங்கப்பூர் இப்பாடலையே தனது தேசிய கீதமாக அறிவித்தது.
‘வரப்பு உயர, கோன் உயரும்' கதையாக, அரங்கத்திலிருந்து நகர சபைக்கு நகர்ந்த பாடல், நகரம் தனி நாடாக உயர்ந்த போது நாட்டுப் பாடலாகவும் உயர்ந்தது.
இப்பாடல் இப்படி ஒலிக்கும் (மலாய் மொழியில்)
(இரண்டாவது பத்தி, இரண்டு முறை பாடப்படுகிறது)
மரி கீ டாரா யத் சிங்கப்பூரா
ஸாம ஸம மெனுஜூ பஹாகியா
ஸிட்டா ஸிட்டா கீட்டா யாங் மூலியா
பேர்ஜயா சிங்கப்பூரா.
மாரிலா க்கீட்டா பேர்ஸரு
டெங்கன் ஸெமான்கட் யாங் பாரு
ஸெமூவா க்கீட்டா பேர்ஸரு
மஜூலா சிங்கப்பூரா
மஜூலா சிங்கப்பூரா
மாரிலா க்கீட்டா பேர்ஸரு
டெங்கன் ஸெமான்கட் யாங் பாரு
ஸெமூவா க்கீட்டா பேர்ஸரு
மஜூலா சிங்கப்பூரா
மஜூலா சிங்கப்பூரா.
தமிழாக்கம்
சிங்கப்பூர் மக்கள் நாம்
செல்வோம் மகிழ்வை நோக்கியே
சிங்கப்பூரின் வெற்றிதான்
சிறந்த நம் நாட்டமே.
ஒன்றிணைவோம் அனைவரும்
ஓங்கிடும் புத்துணர்வுடன்.
முழங்குவோம் ஒன்றிணைந்தே
முன்னேறட்டும் சிங்கப்பூர்
முன்னேறட்டும் சிங்கப்பூர்.
ஒன்றிணைவோம் அனைவரும்
ஓங்கிடும் புத்துணர்வுடன்.
முழங்குவோம் ஒன்றிணைந்தே
முன்னேறட்டும் சிங்கப்பூர்.
முன்னேறட்டும் சிங்கப்பூர்.
(தேசிய கீதங்கள் ஒலிக்கும்)