காட்டு நாளிதழ் வனக்குரல்! - எல். மீனாம்பிகா

காட்டு நாளிதழ் வனக்குரல்! - எல். மீனாம்பிகா
Updated on
2 min read

வனக்குரல்
நம்பர் 1. காட்டு நாளிதழ்
நாள்: 23.04.2022 சனிக்கிழமை

ஆடு மேய்ந்தபுரத்தில் 'மே' தினக் கொண்டாட்டம்

ஆடு மேய்ந்தபுரத்தில் 'மே' தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட இருக்கிறது. சந்தை மைதானத்தில் நடக்கும் விழாவுக்கு ஆட்டுக்கார அலமேலு படத்தில் நடித்த ஆடு ராமு தலைமை வகிக்கிறார். தாடிபுரம் சொர்ணா ஆடு குத்து விளக்கு ஏற்றுகிறார். அன்றைய தினம் ஆடு மேய்ந்தபுரத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் மேய்ச்சல் நிலங்களுக்கும் குளங்களுக்கும் பொதுவிடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சந்தை மைதானத்தில் நடக்கும் மேதின விழாவில் அனைத்து ஆடுகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறைக்குச் செல்ல படகு வசதி வேண்டும்!

பேச்சிப்பாறை: பேச்சிப்பாறை கானக உண்டு உறைவிடப் பள்ளியில் அயல்காட்டு விலங்குகள், பறவைகள் தங்கி கல்வி கற்று வருகின்றன. ஆனால், அருகில் உள்ள தச்சமலை பகுதி விலங்குகள் இங்கே கல்வி கற்க வரமுடியாத சூழல் உள்ளது. காரணம் தச்சமலை முதல் பேச்சிப்பாறை வரை கோதையாறு குறுக்கிடுவதால், ஆற்றைக் கடந்துவர முடியாத சூழல் உள்ளது. அதே வேளை இங்குள்ள பறவைகள் பேச்சிப்பாறை பள்ளிக்கூடத்துக்குப் பறந்து சென்று கல்வி கற்று வருகின்றன. எனவே தச்சமலையில் இருந்து பேச்சிப்பாறைக்குப் படகு வசதி செய்து தரவேண்டும் என தச்சமலை தலைவர் கரடிமுடியான் காட்டரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

குளத்தில் டைவ் அடித்த யானை கஜன் படுகாயம்

யானைவால் புரம்: கோடைகாலம் என்பதால் யானைவால்புரம் குளத்தில் விலங்குகள் மகிழ்ச்சியாகக் குளித்து வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை முயல், மான், குரங்கு ஆகியவை டைவ் அடித்து, குளிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த கஜனுக்கும் குளிக்க ஆசை வந்துள்ளது. உடனே கரையில் இருந்து வேகமாக ஓடி குளத்தில் டைவ் அடித்தபோது, பாறையில் அதன் தலை மோதியது. இதில் பலத்த காயத்துடன் கஜன் அலறவே, அருகில் தோட்ட வேலை செய்துகொண்டிருந்த கரடியன்கள் ஓடிவந்து, கஜனை மீட்டனர். மருத்துவமனையில் கஜனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பள உயர்வு கேட்டு மான்கள் மாநாட்டில் தீர்மானம்

கட்டிமான்காடு: கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சம்பளம் உயர்த்தப்படாததால் வரும் மே மாதம் முதல் துப்புரவுப் பணிகளில் ஈடுபடமாட்டோம் எனத் துப்புரவுப் பணியாளர் சம்மேளனத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விலைவாசி உயந்துகொண்டே செல்லும்போது, இரண்டு ஆண்டுகளாகச் சம்பளம் உயர்வு இல்லாததால், பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள மான்கள் வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்ததாக அறிவித்துள்ளன. உடனே அமைச்சர் மந்திரன், 'விரைவில் சம்பள உயர்வு அளிக்கப்படும்' என வாக்குறுதி அளித்துள்ளார்.


'டாங்கி ஆஃப் த இயர்' விருது பஞ்சகல்யாணிக்கு..

கழுதைக்கோடு: சிறந்த கழுதைகளுக்கு வழங்கும் 'டாங்கி ஆஃப் த இயர் விருது' இந்த ஆண்டு பஞ்சகல்யாணி கழுதைக்குக் கிடைத்தது. கழுதைக்கோட்டில் நடந்த கழுதைகள் மாநாட்டில் பெரிய காதுகளைக்கொண்ட பஞ்சகல்யாணி விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டார். விருது பெற்ற பஞ்சகல்யாணி நன்றி தெரிவிப்பதற்காக மைக்கைப் பிடித்தார். சந்தோஷ மிகுதியால் கர்ணகடூரமாகப் பாடவே நடுவர்கள் எழுந்து ஓடினர். இதனால் அடுத்தடுத்து விருது பெறுபவர்களுக்கு விருதை வழங்க இயலாமல் போனது.

வன நலக் குறிப்புகள்:
உணவைக் குறைக்காமல் எடை குறைக்கலாம் - டாக்டர் யானையம்மா

உடல் எடை குறைப்பதற்கு உணவைக் குறைக்க வேண்டிய தேவை இல்லை என்று காட்டாஸ்பத்திரி டாக்டர் யானையம்மா தெரிவித்தார். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் காட்டைச் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடவேண்டும். காட்டாற்றில் குளித்துவிட்டு ஓலைகளையும் உணவுகளையும் சாப்பிட்டு ஓய்வெடுப்பவர்களுத்தான் உடல் எடை கூடுகிறது. அதனால் அனைவரும் உடல் உழைப்பில் ஈடுபட்டால், எடையை எளிதாகக் குறைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in