

புதுடெல்லியில் உள்ள தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (National Museum of Natural History - NMNH) தீக்கிரையாகி முற்றிலும் அழிந்துவிட்டது. இப்படி அழிந்துபோனதால் அதிகம் கவலைப்பட்டவர்கள் யாராக இருக்கும்? உங்களைப் போன்ற குழந்தைகள்தான். அந்த அருங்காட்சியகத்தை அதிகம் பார்த்து, ரசித்து வந்தவர்கள் பள்ளி சிறுவர், சிறுமியர்கள்தானே.
பாரம்பரிய சின்னம்
இந்த அருங்காட்சியகத்தைத் தொடங்கி வைத்தவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. 1978-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் நாளில் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. அப்போதிலிருந்து தொடர்ச்சியாக 38 ஆண்டுகளாகச் சுற்றுச்சூழல்-இயற்கை சார்ந்த விழிப்புணர்வைப் பரவலாக்கும் பணியை அந்த அருங்காட்சியகம் செய்துவந்தது. இயற்கையின் மீது டெல்லி குழந்தைகள் ஆர்வம்கொள்ள அடிப்படைக் காரணமாக இருந்தது இந்த அருங்காட்சியகம்.
மாணவர்கள் மட்டுமில்லாமல் பெரியவர்களும், அருங்காட்சியகம் மூலம் பயனடைகிறார்கள். ஆராய்ச்சிகள்கூட நடைபெறுகின்றன. அமெரிக்காவில் உள்ள சிகாகோ கள அருங்காட்சியகத்துடன், டெல்லி அருங்காட்சியகமும் இணைந்து பல ஆராய்ச்சிகளைச் செய்துவந்தது.
நம் நாட்டின் இயற்கை பாரம்பரியத்தை இதுபோன்று ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் மூலமாகச் சிறப்பாகப் புரிந்துகொள்ள முடியும். அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்படும் மாதிரி உயிரினங்கள், இந்தப் பூமியில் தோன்றி மறைந்த உயிரினங்களுக்கான ஓர் அரிய ஆவணம். அந்த வகையில் மிகப் பெரிய தேசிய பாரம்பரிய சின்னம் ஒன்றை நாம் இழந்துவிட்டோம்.
தாகூர் டைனோசர்
இந்த அருங்காட்சியகம் எரிந்ததால், இழந்துபோன மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, 16 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் புதைபடிவம். சாரோபாட் ஃபெமூர் (sauropod’s femur) என்ற வகையைச் சேர்ந்த அந்த டைனோசரின் அறிவியல் பெயர் Barapasaurus tagorei. 1961-ல் தக்காண பீடபூமியில் உள்ள கோட்டா பகுதியில் இந்தப் புதைபடிவம் கண்டறியப்பட்டது. அது கண்டறியப்பட்ட ஆண்டு, நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டு என்பதால், அவருடைய பெயரே அந்த டைனோசர் வகைக்கு வைக்கப்பட்டது. கொல்கத்தாவிலுள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனம், இந்தப் புதைபடிவத்தை அருங்காட்சியகத்துக்கு அளித்திருந்தது.
இழந்த பொக்கிஷங்கள்
இந்த டைனோசரைப் போலவே பண்டைய இயற்கை வரலாற்றுப் பொக்கிஷங்களின் சுரங்கமாக இந்த அருங்காட்சியகம் திகழ்ந்துவந்தது. அப்படி இழந்ததில் முக்கியமானவை:
1990-களில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் கைப்பற்றப்பட்ட அரிய கறுப்புப் புலியின் பாடம் செய்யப்பட்ட உடல், அழிந்துபோய்விட்ட இரண்டு நீண்ட அலகு பிணந்தின்னிக் கழுகுகள் (பாறு), இரண்டு ஆசிய சிங்கங்கள், ஒரு வெள்ளைப் புலி, ஒரு பிரம்மாண்ட ஓங்கில் (டால்பின்), பனிச் சிறுத்தை, காண்டாமிருகம் ஆகியவற்றின் பாடம் செய்யப்பட்ட உடல்கள், புதைபடிவ முட்டைகள்.
இந்த அருங்காட்சியகத்தில் இருந்த நீர் நில வாழ்வன, ஊர்வன மாதிரிகள், வண்ணத்துப்பூச்சி சேகரிப்புகள், சட்டமிடப்பட்ட பல்லி மாதிரிகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதுபோலக் கணக்கற்ற உயிரினங்கள், தாவரங்களின் மாதிரிகள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமாகிவிட்டன. இது மட்டுமல்லாமல், நூலகத்திலிருந்த புத்தகங்களும் சுற்றுச்சூழல்-இயற்கை தொடர்பான வீடியோ பதிவுகளும் எரிந்துவிட்டன.
புதிய அருங்காட்சியகம்
தீ விபத்தைத் தொடர்ந்து, உலகத் தரம் வாய்ந்த புதிய இயற்கை அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சொல்லியிருக்கிறார். டெல்லியில் உள்ள புராணா கிலா பகுதிக்குப் பின்புறம் உள்ள பிரகதி திடலில் ரூ. 225 கோடி செலவில் புதிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் அமைக்க, இந்த விபத்துக்கு முன்னதாகவே அரசு தயாராகிவந்தது. எப்படியிருந்தாலும் புதிய அருங்காட்சியகத்தில், பழைய அருங்காட்சியகத்தில் இருந்த அரிய பொக்கிஷங்கள் இருக்காது என்பது மிகப் பெரிய துயரம்தான்.
அருங்காட்சியகங்கள் ஒரே நாளில் உருவாக்கப்படுவதில்லை. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல நூற்றாண்டுகள் பழமையான மாதிரிகள் பொறுமையாகச் சேகரிக்கப்பட்டு, கடுமையான உழைப்புக்குப் பிறகே ஒரு அருங்காட்சியகம் உருவாகிறது. ஆனால், இது போன்றதொரு தேசிய சொத்து ஒரு சில மணி நேரத்தில் தீக்கிரையானதற்கு நிர்வாகத்தின் அலட்சியமே முதல் காரணம்.
இந்த அருங்காட்சியக வளாகத்துக்கு வெளியே அல்லோசாரஸ் (Allosaurus) என்ற பிரம்மாண்ட டைனோசர் பொம்மை ஒன்று நின்றுகொண்டிருக்கும். அருங்காட்சியகக் கட்டடத்துக்கு வெளியே இருந்ததால், அது பாதிக்கப்படவில்லை. அது மட்டுமே இப்போது அங்கே இருக்கிறது, தன்னந்தனியாக!
உயிரினங்களின் உடலுக்குள் உள்ள உடல் உறுப்பு களை அகற்றிவிட்டு, தோல்-மயிர் போர்வையை இயற்கையாக உள்ளது போலவே பதப்படுத்தி, உள்ளே பஞ்சு போன்ற பொருட்களை அடைத்து உயிருள்ளதுபோலவே தோன்றும் உருவங்கள் அருங்காட்சியகங்களில் வைக்கப்படுகின்றன. டெல்லி தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பல அரிய உயிரினங்களின் மாதிரிகள் இப்படி வைக்கப் பட்டிருந்தன. இந்த உயிரின உடல் மாதிரிகளில் பெரும் பாலானவற்றை உருவாக்கியவர்கள் மைசூரைச் சேர்ந்த புகழ்பெற்ற நிறுவனமான வான் இங்கென் & வான் இங்கென்.