ஆழ்கடல் அதிசயங்கள் 02: உலகின் மிகப்பெரிய குழந்தை!

ஆழ்கடல் அதிசயங்கள் 02: உலகின் மிகப்பெரிய குழந்தை!
Updated on
2 min read

அடுத்த அதிசயத்தைக் காணும் ஆவலில் ரோசி, செந்தில், ரக் ஷா மூவரும் ஆராய்ச்சியாளர் அருணாவுடன் சேர்ந்து கடலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

திடீரென்று, “அதோ அங்கே பாருங்க” என்று அருணா கைகாட்டினார்.

கற்பனைக்கு எட்டாத அளவில் மிகப் பிரம்மாண்டமான ஒரு திமிங்கிலமும், அதன் அருகிலேயே குட்டித் திமிங்கிலம் ஒன்றும் நீந்திக்கொண்டிருந்தன. ரோசி, செந்தில், ரக் ஷா மூவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

“இதுதான் நீலத்திமிங்கிலம். பத்து நிமிடத்துக்கு முன்னாடிதான் குட்டி போட்டிருக்கு” என்று அருணா சொல்ல, “பத்து நிமிடத்துக்கு முன்னாடி பிறந்த குட்டியா இது? இவ்வளவு பெருசா இருக்கே!” என்று செந்தில் வியப்புடன் கேட்டான்.

“நீலத்திமிங்கிலம்தான் உலகிலேயே மிகப்பெரிய விலங்குன்னு நாம பாடத்தில் படிச்சோம்ல, பெரிய விலங்குன்னா குட்டியும் பெருசாதான் இருக்கும்” என்று ரக் ஷா தனக்குத் தெரிந்த விஷயத்தைச் சொன்னாள். “எவ்வளவு எடை இருக்கும்?” என்று ரோசி யோசித்தாள்.

“நீலத்திமிங்கிலங்கள் சராசரியா 98 அடி நீளம் வளரும். இவற்றின் எடை சுமார் 199 மெட்ரிக் டன் (ஒரு டன் 1000 கிலோ) அதாவது கிட்டத்தட்ட லட்சம் கிலோ” என்று அருணா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, “லட்சம் கிலோவா!” என்று செந்தில் கண்களை விரித்தான்.

சிரித்தபடியே, “ஆமாம்! லட்சம் கிலோ எடை கொண்ட அம்மா திமிங்கிலத்துக்குப் பிறக்கும் குட்டி, பிறக்கும்போதே 23 அடி நீளமும் 3000 கிலோ எடையும் இருக்கும். பிறக்கும் உயிரினங்களிலேயே மிகப் பெரியது இதுதான். அதாவது Largest New born on earth” என்றார் அருணா.

“இவ்வளவு பெரிய குட்டி பிறக்கணும்னா பேறுகாலம் ஒரு பத்து பதினைந்து வருஷம் இருக்குமா?” என்று ரக் ஷா கேட்க, “இல்லை, நீலத்திமிங்கிலங்களுடைய பிரசவ காலம் 10 முதல் 12 மாதங்கள் மட்டுமே. கிட்டத்தட்ட மனிதர்களைப் போலத்தான். நீலத்திமிங்கிலங்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை குட்டி போடும். பெரும்பாலும் ஒரு பிரசவத்தில் ஒரு குட்டியைத்தான் ஈனும்” என்று கூறியபடியே நீர்மூழ்கிக்குள் இருந்த ஸ்பீக்கரை இயக்கினார். வெளியில் கேட்ட ஒலி நீர்மூழ்கிக்குள் ஒலிபரப்பானது. குயில் கூவுவது போல நீண்ட முனகல் ஒலி கேட்டது.

“நீலத்திமிங்கிலம் இப்படித்தான் ஒலி எழுப்பும். அது எழுப்பும் எல்லா அதிர்வெண் ஒலிகளும் மனிதர்களுக்குக் கேட்காது என்றாலும் நீலத்திமிங்கிலத்தின் சத்தம் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும்” என்று அருணா விளக்கினார்.

“குட்டி அம்மாவின் உடலோட ஒட்டி இருக்கு, பால் குடிக்குது” என்று செந்தில் கைகாட்டினான்.

“இவ்வளவு பெரிய குட்டின்னா நிறைய பால் குடிக்குமோ?” என்று ரோசி சந்தேகமாகக் கேட்டாள்.

“ரொம்ப சரி. ஒரு நீலத்திமிங்கிலக் குட்டி சராசரியா ஒருநாளைக்கு 200 லிட்டர் பால் குடிக்கும். நீலத்திமிங்கிலத்தின் பாலில் கொழுப்புச் சத்து அதிகம் என்பதால், ஒவ்வொரு நாளும் திமிங்கிலத்தின் குட்டி வேகமாக வளரும். ஒரு நாளைக்கு 90 கிலோ எடை அதிகரிக்கும்” என்றார் அருணா.

“ஒரு நாளைக்கு 90 கிலோ அளவுக்கு வளருமா! அடேங்கப்பா!” என்று மூவரும் ஆச்சரியப்பட்டார்கள்.

“ஆமாம், அம்மா திமிங்கிலத்துடன் கூடவே இருக்கும் குட்டியின் எடை, ஆறே மாதங்களில் இரண்டு மடங்காக மாறிடும். பிறகு இவை பால் குடிப்பதை நிறுத்திவிட்டு அம்மாவின் உதவி, வழிகாட்டலுடன் க்ரில் இறால்களை வேட்டையாட ஆரம்பிக்கும்” என்று அருணா விளக்கினார்.

“நீலத்திமிங்கிலங்களைப் பொறுத்தவரை எல்லாமே பிரம்மாண்டம்தான் போல. நாம இவ்வளவு தொலைவில் இருந்து பார்ப்பதால்தான் இந்தத் திமிங்கிலத்தின் உருவமே முழுசா தெரியுது. ஒரு பிரசவத்தில் ஒரு குட்டிதான் போடும்னா, இவற்றின் இனப்பெருக்க விகிதமும் குறைவுதானோ?” என்று ரோசி கேட்டாள்.

“ஆமாம், நீலத்திமிங்கிலங்கள் மட்டுமில்ல, எல்லாத் திமிங்கிலங்களுமே குறைவான இனப்பெருக்க விகிதம் கொண்டவைதான். ஒரே ஒரு திமிங்கிலம் பாதிக்கப்பட்டால்கூட, அது திமிங்கிலங்களின் தலைமுறைக்கே நல்லது இல்லை. இவற்றை நாம்தான் பாதுகாக்கணும்” என்று அருணா சொல்லிக்கொண்டிருந்தபோதே திமிங்கிலம் ஒரு நீண்ட ஒலியை எழுப்பியது.

“தாலாட்டுப் பாடுது போல” என்று ரோசி கிண்டலடிக்க, திமிங்கிலங்கள் இரண்டும் நீந்தியபடி நீலக்கடலுக்குள் சென்று மறைந்தன.

(அதிசயங்களைக் காண்போம்)

கட்டுரையாளர், கடல்சார் ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: nans.mythila@gmail.com]

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in