

அன்று அதிகாலை கோதை ஒரு கனவு கண்டாள். நெருப்பு கக்கும் டிராகனைப் பார்த்தாள். டிராகன் சிறகடிக்கும் சத்தம் பல மைல் தொலைவிலிருந்து கேட்டது. கோதைக்குப் பயம் தொற்றிக்கொண்டது. உடல் வியர்த்தது. அது, அவர்கள் வீட்டைச் சுற்றிப் பறந்தது. கோதை திடுக்கிட்டு எழுந்தாள். நடந்ததெல்லாம் கனவு என்று புரிந்தது.
அருகிலிருந்த மயிலிறகை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டாள். சில நிமிடங்களில் பதற்றம் தணிந்தது. கண்களை மூடி, மயிலிறகை டிராகன் மீது வீசியதாக நினைத்துக்கொண்டாள். நெருப்பு கக்குவதை நிறுத்திய டிராகன், மொட்டை மாடியில் சுருண்டு படுத்துக்கொண்டது. சிறிது நேரத்தில் அங்கிருந்து பறந்து போனது.
கனவுக்கு மத்தியில் கோதை எழுப்பிய சத்தம் கேட்டுப் பதறி எழுந்த தம்பி, “பயங்கர கனவா? பூதமோ பிசாசோ உன்னைத் தூக்கிட்டுப்போக வந்திருக்குமே?” என்றான். கண்ணசைவில் ‘எல்லாம் சரியாகிவிட்டது’ என்று சைகை செய்த கோதை, தனது தினசரி வேலைகளைத் தொடங்கினாள்.
“நீலி தந்த மயிலிறகுதான் உதவியதா?”
நீலி, மேற்கு மலைப்பகுதியில் உள்ள செண்பகக் காடுகளுக்கு அருகில் வசிக்கிறாள். கோதைக்கு மலைக்குச் செல்வதென்றால் அவ்வளவு பிரியம். அங்குதான் அவளுக்கு நீலியின் நட்பு கிடைத்தது. இருவரும் அன்பு பாராட்டினார்கள்.
மலை அடிவாரத்தில் உள்ள அருவி, வளைந்து ஓடும் காட்டாறு, அதன் கரைகளில் வளர்ந்துள்ள பூச்செடிகள், அதற்கு மேலே சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகள், பறவைகளின் கீச்சுக் குரல்கள் என எல்லாம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக அமையும். நாள் முழுக்க கோதை மகிழ்ச்சியில் திளைத்திருப்பாள்.
சென்ற முறை நீலி, அவளுக்கு ஒரு மயிலிறகை அன்புப் பரிசாகத் தந்தாள். அன்று முதல் தனக்கு நல்லதே நிகழ்வதாகக் கருதுகிறாள் கோதை. கோபத்தைத் தணிக்க உதவுவதாக நம்புகிறாள். உள்ளங்கையில் மயிலிறகை வைத்து, கன்னத்தில் கை வைத்து, சிறிது நேரம் கண்மூடித் திறந்தால் எல்லாமே சரியாகிவிடும்!
மலை அடிவாரத்தில் பழங்குடியினர் குடியிருப்பு உள்ளது. காட்டுக்குள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பிறகு, அவர்கள் வேறு வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். அடிவாரத்தை ஒட்டியுள்ள தனியார் தோப்புகளைப் பராமரிக்கும் பணிகளைச் செய்கிறார்கள். சிலர் தோப்புகளைக் காவல் காக்கிறார்கள்.
ஒருநாள் நீலி அவர்களைத் தோப்புக்கு அழைத்துச் சென்றாள். ஓர் அறைக்குள் இருந்து ‘உர்.. உர்’ என்று வந்த சத்தம் கேட்டு, கோதை பயந்தாள்.
“ஐயோ, பயமா இருக்குது. மலையிலிருந்து தப்பிச்சு வந்த புலியை அறைக்குள்ளே கெட்டி வெச்சுருக்காங்களா?”
“புலி கிலி எதுவும் இல்லை. அது, இந்தத் தோப்புக்காரரோட வளர்ப்பு நாய். நம்மளை மோப்பம் பிடிச்சுப் பாக்குது” என்றாள் நீலி.
“எதுக்காக அதைக் கெட்டி வச்சிருக்காங்க?”
“சிலர் வன அதிகாரிகளுக்குத் தெரியாம காடுகளுக்குள்ள போயி சிறு விலங்குகளை வேட்டையாடிட்டு வருவாங்க. ராத்திரி நேரத்தில மட்டும் நாயை வெளியே திறந்து விடுவாங்க. பகல் நேரத்தில அதிகாரிகளுக்குத் தெரிஞ்சுடுமோங்கிற பயம்.”
அதிர்ச்சியுற்ற கோதை, “வனவிலங்கு வேட்டையா?” என்றாள்.
“ஆமாம். அதிகாரிகள் கையுங் களவுமாகப் பிடிச்சாலும் கைது பண்ண முடியாது. நாய்தான் கொன்னதுன்னு சொல்லித் தப்பிச்சுருவாங்க” என்றாள் நீலி.
“இதையெல்லாம் யார் தட்டிக்கேட்கப் போறாங்க?” என்று சலித்துக்கொண்டாள் கோதை.
மாலை நீலியிடம் விடைபெற்றுக் கிளம்பியபோது, குடியிருப்புப் பகுதியில் சுற்றிய ஒரு மான்குட்டியைப் பார்த்தாள், கோதை. அது மிகவும் அழகாக இருந்தது. “தாயிடமிருந்து பிரிந்து, வழிதவறி வந்த மான்குட்டியாக இருக்கும். உணவு தேடி மலை அடிவாரத்துக்கு இறங்கி வந்திருக்கும்” என்றாள் நீலி.
அப்போது, சற்றும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
வடக்குத் திசையிலிருந்து “லொள்.. லொள்” என்று குறைத்தபடி பாய்ந்து வந்தது ஒரு நாய். ஆள் உயரத்தில் இருந்த நாய், வேலி தாண்டி ஓடியதைப் பார்த்து நடுங்கிப் போனாள் கோதை. அது, மான்குட்டியைத் துரத்தியது.
குடியிருப்புக்கு உள்ளே இருந்து வந்த சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்கள். வளர்ப்பு நாய்களை யாரும் துன்புறுத்தக் கூடாது.
கோதை பதறினாள். இன்னும் சற்று நேரத்தில் நாய், மான்குட்டியின் கழுத்தைக் கவ்வப்போகிறது என்பது புரிந்தது. குழப்பம் அதிகரித்தது. மான்குட்டியைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற உணர்வு அங்கிருந்த எல்லாக் குழந்தைகளுக்கும் இருந்தது.
திடீரென்று நாயைத் துரத்திக்கொண்டு ஓடினாள் கோதை. கையில் இருந்த எதையோ நாய் மீது வீசினாள். சட்டென்று காட்சி மாறியது. எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. மான்குட்டியைக் கவ்வ பாய்ந்தோடிய நாய், வேகத்தைக் குறைத்து நிதானமாகத் திரும்பி வந்தது.
நல்ல வேளை! உணவு தேடி அலைந்த மான்குட்டி தப்பித்தது. கோதையின் பக்கம் திரும்பி வந்த நாய், வாலாட்டியபடி அருகில் உட்கார்ந்துகொண்டது.
மான்குட்டியைக் காப்பாற்றிய கோதைக்குப் பரிசாக மயிலிறகைக் கொடுத்தாள் நீலி.