

திலகா
அண்டார்டிகா கண்டத்தில் அமைந்துள்ளது பூமியின் தென் துருவம். அண்டார்டிகா பெரிய நிலப் பகுதி. ஆனால், பூமியின் வட துருவம் கடல் பகுதியில் அமைந்துள்ளது.
‘ஸ்கேட்’ என்ற அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, 1959ஆம் ஆண்டு வட துருவத்தை ஒட்டிய கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. திடீரென்று அந்த நீர்மூழ்கிக் கப்பல், கடலை மூடியபடி இருந்த உறைபனியை உடைத்துக்கொண்டு மேலே வந்தது. கடலை மூடியிருந்த பனிக்கட்டியின் தடிமன் சுமார் 2 அடி. அதனால் நீர்முழ்கிக் கப்பலால் எளிதாகத் துளைத்துக்கொண்டு மேலே வரமுடிந்தது. ஸ்கேட் மூலம் கடல் பனிக்கட்டியால் மூடப்பட்டாலும் அந்தப் பனிக்கட்டிக்கு அடியில் உள்ள நீர், உறையாமல் நீராகத்தான் இருக்கும் என்ற உண்மை உலகத்துக்குத் தெரியவந்தது. கடலின் மேற்புறம் உள்ள நீர் உறைந்தாலும் அடியில் உள்ள நீர் உறையாமல் இருப்பதைக் கண்டு எல்லோரும் வியந்தனர்.
துருவப் பகுதியில் பூஜ்ஜிய டிகிரிக்கும் குறைவாக குளிர் இருக்கும். கடலின் மேல் பகுதியில் உறைந்திருக்கும் பனிக்கட்டி வெளியே நிலவும் குளிர், தண்ணீரைப் பாதிக்காதபடி தடுத்துவிடுகிறது. அதனால்தான் பனிக்கட்டிக்குக் கீழே தண்ணீர் உறையாமல் இருக்கிறது.
ஆர்டிக் பகுதியில் கடல் நீர் உறைந்தாலும் கடலுக்கு அடியில் வாழும் கடல்வாழ் விலங்குகளுக்குப் பாதிப்பில்லை. வெளியில் வசிக்கும் துருவக் கரடிகளும் பாதிக்கப்படுவதில்லை.
துருவக் கரடிகளுக்கு சீல் தான் முக்கியமான உணவு. சீல்கள் பனிக்கட்டிக்கு அடியில் உள்ள நீரில் வாழ்கின்றன. அவ்வப்போது நீருக்குள்ளிருந்து வெளியே வந்து காற்றை சுவாசிக்கின்றன. கடலின் மேல் பகுதி பனிக்கட்டியால் மூடியிருந்தாலும் சீல்கள் தங்களது நகங்களால் பனிக்கட்டியில் ஓட்டை போட்டுவிடும். பனிக்கட்டியில் போட்ட ஓட்டைகள் வழியே அவ்வப்போது தலையை நீட்டி, காற்றை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றுவிடுகின்றன.
சீல்கள் போட்ட ஓட்டைகளுக்கு அருகே துருவக் கரடிகள் காத்துக்கொண்டிருக்கும். சீல்களின் தலை தெரிந்ததும் வேகமாகப் பிடிக்கும் முயற்சியில் இறங்கிவிடுகின்றன.
துருவப் பகுதிகள் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவை ‘ஐஸ்பெர்க்’ எனப்படும் பனிமலைகள்தாம்! குளிர் காலத்தில் மேலும் மேலும் பனிக்கட்டிகள் சேருகின்றன. கரையோரமாக உள்ள பனிக்கட்டிப் பாளங்கள் ஒருகட்டத்தில் கடலில் விழுந்து மிதக்க ஆரம்பிக்கின்றன. இயல்பாக இவை தெற்கு நோக்கி அதாவது அட்லாண்டிக் கடலை நோக்கிச் செல்ல முற்படுகின்றன.
மிதக்கும் பனிக்கட்டிகள் மிகவும் பிரம்மாண்டமானவை. இவற்றை மிதக்கும் பனிமலைகள் என்று அழைக்கிறார்கள். மிகுந்த எடை காரணமாக மிதக்கும் பனிமலைகளின் பெரும்பகுதி கடல் நீரில் மூழ்கியிருக்கும். சிறு பகுதிதான் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். அதாவது பத்தில் ஒரு பங்குதான் கடல் நீருக்கு மேலே நீட்டிக்கொண்டிருக்கும். கப்பல் மீது மிதக்கும் பனிமலை மோத நேர்ந்தால் கப்பல் மூழ்க வேண்டியதுதான்.
1912ஆம் ஆண்டு மிதக்கும் பனிமலை மீது மோதியதால்தான் டைட்டானிக் கப்பல் மூழ்கியது. அப்போது ராடார் கருவி கிடையாது. ஆகவே எதிரே மிதக்கும் பனிமலை வந்ததை கப்பல் மாலுமிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போதெல்லாம் எல்லாக் கப்பல்களிலும் ராடார் கருவிகள் உள்ளன. தூரத்தில் இருந்தாலும் மிதக்கும் பனிமலைகளை இந்தக் கருவிகள் கண்டுபிடித்துவிடும்.
மிதக்கும் பனிமலைகள் மேலும் மேலும் தெற்கு நோக்கி வரும்போது சூரிய வெப்பம் காரணமாக உருகிக் கடல் நீரில் கரைந்துவிடும்.
அண்டார்டிகா சுற்றியுள்ள கடலிலும் கடல் நீர் பனிக்கட்டியால் மூடப்படுகிறது. அங்கும் நிறைய பனிமலைகள் தோன்றுகின்றன. அவை வடக்கு நோக்கி வருகின்றன. ஆனால், அவை நடமாடும் கடல் பகுதிகளில் கப்பல் போக்குவரத்து அதிகமில்லை.