

அழ. வள்ளியப்பா
ஆண்டர்சன், டென்மார்க் தேசத்திலுள்ள ஓடென்ஸ் என்ற ஊரில் 1805-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடைய அப்பா செருப்புத் தைப்பவர்; அம்மா துணி வெளுப்பவர். தங்களுடைய பிள்ளை பள்ளிக்கூடத்திற்குப் போய்ப் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று அப்பாவும் அம்மாவும் ஆசைப்பட்டார்கள். ஆனால், ஆண்டர்சனுக்குப் படிப்பில் கவனம் செல்லவே இல்லை. அவர் எப்போதும் ஏதாவது கனவு கண்டுகொண்டேயிருப்பார். இதனால், அவர் பள்ளிப் படிப்புக்கு விரைவில் முழுக்குப் போடவேண்டிய தாயிற்று!
ஆண்டர்சனுக்கு அவருடைய அப்பா ஒரு பொம்மை நாடக மேடையைச் செய்து கொடுத்திருந்தார். ஆண்டர்சன் பல பொம்மைகளை நடிகர்கள் போல் அந்த மேடையில் நிற்க வைப்பார். சும்மா நிற்கவைக்க மாட்டார்; தையற் கடையிலிருந்து எடுத்து வந்த துண்டுத் துணிகளைக் கொண்டு அவற்றிற்கு உடை தைத்துப் போட்டு, நிற்க வைப்பார். அந்த நடிகர்களுக்கு நாடகம் வேண்டாமா? நாடகத்தையும் ஆண்டர்சனே தயார் செய்வார். பல வகையான நாடகங்களை அவர் கற்பனை செய்வார். நாடகத்திற்கு வேண்டிய கதை, வசனம், பாட்டு எல்லாவற்றையும் அவரே எழுதுவார். அந்த நடிகர்களுக்குப் பதிலாக அவரே பேசியும் பாடியும் உணர்ச்சி ததும்ப நடிப்பார். இதனால், அவரது கற்பனை கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது.
ஆண்டர்சனின் அப்பா செருப்புத் தைப்பவராயிருந்தாலும், ஓய்வு நேரத்தில் புத்தகங்கள் படித்துக்கொண்டேயிருப்பார். சில சமயங்களில் ஆண்டர்சனை அருகில் வைத்துக்கொண்டு, சில நல்ல நல்ல கதைகளையும், நாடகங்களையும் படித்துக் காட்டுவார். ஆண்டர்சன் நாடகத்திலுள்ள வசனத்தையெல்லாம் மனப்பாடம் செய்துவிடுவார். அப்படி அவர் மனப்பாடம் செய்ததைத் தெருவில் நடக்கும்போதெல்லாம் சொல்லிப் பார்ப்பார். இதனால், தெருவில் போவோர் வருவோரெல்லாம் 'இவன் என்ன, தனக்குத் தானே பேசிக்கொள்கிறானே! பைத்தியமோ!' என்று நினைப்பார்கள்.
ஆண்டர்சனுக்கு வயது 14 ஆயிற்று. இதற்குள் அவருடைய அப்பா காலமாகிவிட்டார். "இனிமேல் இந்த ஊரில் இருந்தால் சரிப்படாது. தலை நகருக்குப் போக வேண்டும்'' என்று ஆண்டர்சன் ஆசைப்பட்டார். உடனே தாயிடம் சென்றார். டென்மார்க்கின் தலைநகராகிய கோபன்ஹேகனுக்குப் போகவேண்டும் என்ற ஆசையை வெளியிட்டார்.
"அங்கே போய் என்ன செய்வாய்?'' என்று கேட்டார் ஆண்டர்சனின் அம்மா.
“புகழ் சம்பாதிக்கப் போகிறேன்'' என்றார் ஆண்டர்சன்.
உடனே அம்மா சிரித்தார். "எல்லோரும் பொருள் சம்பாதிக்கப் போவார்கள். நீ புகழ் சம்பாதிக்கப் போகிறாயா?" என்று கேட்டார்.
“ஆமாம் அம்மா. நிச்சயம் புகழ் சம்பாதிப்பேன். இன்று என்னைப் பார்த்துக் கேலி செய்கிறார்களே, அவர்களெல்லாம் அன்று என்னைப் பார்த்து வியப்படையப் போகிறார்கள். எனக்கு அனுமதி கொடுங்கள்” என்று கெஞ்சினார்.
அம்மா முதலில் சம்மதிக்கவில்லை. ஆண்டர்சன் தொடர்ந்து வற்புறுத்தவே, அனுமதி கொடுத்துவிட்டார் அம்மா.
ஆண்டர்சன் தலைநகருக்குப் போவதற்குப் பணம் வேண்டுமே, என்ன செய்வது? கிடைக்கும் சில்லறைக் காசுகளையெல்லாம் ஒரு களிமண் உண்டிப் பெட்டிக்குள் போட்டுவைப்பார். அந்தப் பெட்டியை உடைத்து காசுகளையெல்லாம் எண்ணிப்
பார்த்தார். பத்து ரிக்ஸ் டாலர் (சுமார் 20 ரூபாய்) இருந்தது. அந்தப் பணத்துடன் புறப்பட்டுவிட்டார்.
ஆண்டர்சனுடன் ஓர் அம்மையாரும் பிரயாணம் செய்தார். அவர், 'தன்னந்தனியாக ஒரு சிறுவன் இருக்கிறானே' என்று நினைத்து, "தம்பி, நீ எங்கே போகிறாய்?'' என்று கேட்டார்.
“தலை நகருக்குப் புகழ் சம்பாதிக்கப் போகிறேன்” என்றார் ஆண்டர்சன்.
"எப்படிப் புகழ் சம்பாதிப்பாய்?' என்று கேட்டார் அந்த அம்மையார்.
"நடிகனாவேன். மிக மிகப் பெரிய நடிகனாவேன். கூடிய சீக்கிரத்தில் புகழ் பெற்றுவிடுவேன்'' என்று துடுக்காகப் பதிலளித்தார் ஆண்டர்சன். ஆண்டர்சனின் மன உறுதியைப் பாராட்டினார் அந்த அம்மையார்.
ஊரைவிட்டுப் புறப்படும் போது, அங்கிருந்த ஓர் அச்சகத்தாரிடமிருந்து ஆண்டர்சன் ஒரு கடிதம் வாங்கி வந்தார். கோபன்ஹேகனிலுள்ள புகழ் பெற்ற ஒரு நடிகையிடம் கொடுக்க வேண்டிய சிபாரிசுக் கடிதமே அது. ஆண்டர்சன் நேராக அந்த நடிகையிடம் சென்றார். கடிதத்தைக் கொடுத்தார். கிழிந்த உடையுடன் வந்த ஆண்டர்சனைப் பார்த்ததும் அவர், “உனக்கு நன்றாக நடிக்கத் தெரியுமா?'' என்று கேட்டார்.
“ஓ, தெரியுமே! இதோ பாருங்கள்'' என்று கூறி, உடனே தம் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி ஒரு பக்கமாக வைத்தார்; தலையில் மாட்டியிருந்த தொப்பியைக் கையில் எடுத்துப் பிடித்துக் கொண்டார். ஆடிப் பாடி நடிக்கத் தொடங்கிவிட்டார். நடிப்பைக் கண்டு அந்த நடிகை தம்மைப் பாராட்டுவார் என்று ஆண்டர்சன் எதிர்பார்த்தார். ஆனால், அவர் ஏளனமாகச் சிரித்தார்.
“நீங்கள் எப்படியாவது எனக்கு உதவிசெய்ய வேண்டும்'' என்று ஆண்டர்சன் மன்றாடிக் கேட்டுக்கொண்டார்.
“இப்போது ஒன்றும் நிச்சயமாகச் சொல்ல முடியாது” என்று அவள் கூறிவிட்டாள். பாவம், ஆண்டர்சன் ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டார்.
கையிலுள்ள பணமெல்லாம் கரைந்துவிட்டது. ஆண்டர்சனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஊருக்குத் திரும்பி விடலாமா என்றுகூடத் தோன்றியது. "சேச்சே, புகழ் சம்பாதிக்காமல் திரும்புவதா? கூடாது. கூடவே கூடாது" என்று மனத்தைத் திடப்படுத்திக்கொண்டார்.
ஆண்டர்சனுடைய குரல் மிகவும் இனிமையாக இருக்கும். "தம்பி, உன் குரல் நன்றாயிருக்கிறது. முயற்சி செய்தால் நல்ல பாடகனாகலாம்" என்று சிலர் யோசனை கூறினார்கள்.
ஒருநாள் அந்த நகரில் இருந்த புகழ்பெற்ற ஒரு பாடகர் வீட்டுக்கு ஆண்டர்சன் சென்றார். அவரை நேரில் பார்த்து, அவரிடம் தம் விருப்பத்தைக் கூறினார். உடனே, அவர் ஆண்டர்சனைப் பாடச் சொன்னார். ஆண்டர்சன் இனிமையாகப் பாடினார். அதைக் கேட்ட அவர், “தம்பி, நீ என் வீட்டிலே இருக்கலாம். சாப்பாடு துணி மணியெல்லாம் தருவேன்” என்றார். ஆண்டர்சனுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. விரைவில் புகழ் சம்பாதித்து விடலாம் என்று நினைத்துப் பூரிப்படைந்தார்.
பாடகர் ஆண்டர்சனுக்குத் தினமும் சங்கீதம் கற்றுக் கொடுத்து வந்தார். ஆண்டர்சனும் கருத்தாய்க் கற்றுக்கொண்டார். ஆயினும், அங்கே அதிக நாள் இருக்க முடியவில்லை. காரணம், அவருடைய குரல் பதினைந்தாவது வயதில் மாறிவிட்டது. அதில் இனிமை இல்லை. கேட்கவே சகிக்கவில்லை. "இனி நீ இங்கே இருப்பதில் பயனில்லை. பேசாமல் ஊருக்குத் திரும்பிப் போய்விடு" என்று அந்தப் பாடகர் புத்திமதி கூறினார்.
ஆண்டர்சனுக்கு ஊருக்குத் திரும்ப மனமில்லை. ஆனாலும், பாடகருடைய வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
“இனி, நம்மால் நடிகனாகவே முடியாதோ? சரி... போகட்டும்... ஆனாலும், நான் சும்மா இருக்கப் போவதில்லை. பெரிய நாடகாசிரியனாக, சிறந்த கவிஞனாக வேண்டும்'' என்று முடிவு செய்தார் ஆண்டர்சன்.
சிறு வயதிலே பொம்மை நாடக மேடையில் பொம்மை நடிகர்களை நிற்க வைத்து, அவர்களுக்காக வசனமும் பாட்டும் எழுதியதை நினைத்துக்கொண்டார். அந்த அனுபவம் அவருக்குப் பெரிதும் உதவியது. நாடகங்களும் பாடல்களும் எழுதத் தொடங்கினார். அவற்றை விலைகூறிப் பார்த்தார்; வாங்குவதற்கு ஆள் இல்லை. அன்றாடச் சாப்பாட்டுக்கே திண்டாட்டமாயிருந்தது.
அப்போது, காலின் என்னும் ஒரு பெரியவரை ஆண்டர்சன் சந்தித்தார். ஆண்டர்சன் தாம் எழுதிய நாடகங்களையும் கவிதைகளையும் அவரிடம் காட்டினார். அவர் எல்லாவற்றையும் படித்துப் பார்த்தார். எல்லாம் நன்றாகவே இருந்தன. ஆனாலும், அவற்றில் எழுத்துப் பிழைகளும், இலக்கணப் பிழைகளும் ஏராளமாயிருந்தன. ஆண்டர்சனை ஒரு நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்துப் படிக்க வைத்தால், அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று காலின் நினைத்தார். அன்றே ஆண்டர்சனைப் பள்ளிக் கூடத்தில் சேர்க்க ஏற்பாடு செய்தார். 18 வயது ஆண்டர்சன் 8 வயதுப் பிள்ளைகளுடன் உட்கார்ந்து படிப்பதென்றால் எப்படி இருக்கும்? சிறிய வயதில் சரியாகக் கல்வி கற்காமல் போனோமே என்று நினைத்து, ஆண்டர்சன் வருந்தினார். ஆனாலும், பொறுமையுடன் படித்தார். விடா முயற்சி அவருக்கு வெற்றி தேடித் தந்தது.
பள்ளிக்கூடத்தில் சேர்ந்த ஐந்தாண்டுகளில், ஆண்டர்சன் எழுதிய புத்தகம் ஒன்று வெளிவந்தது. அவர் எழுதிய நாடகங்களில் ஒன்றும் மேடையில் நடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு, ஆண்டர்சன் சில நாவல்களை எழுதினார். நாவல், நாடகம், கவிதை முதலிய பல துறைகளிலும் அவர் ஈடுபட்டார். அவையெல்லாம் அவருக்கு ஓரளவுதான் புகழ் தேடித்தந்தன. ஆயினும், அவருக்கு உலகப் புகழ் தேடித் தந்தவை அவரது குழந்தைக் கதைகளே ! ஆம், ஓய்வு நேரத்தில் குழந்தைகளைக் கூட்டி வைத்துக் கொண்டு அவர் சொன்ன கதைகள்தாம் அவருக்குப் பெரும் புகழ் தேடித் தந்தன!
குழந்தைகளுக்கு மத்தியிலே உட்கார்ந்துகொண்டு கதை சொல்லுவதிலே ஆண்டர்சனுக்கு ஒரு தனி இன்பம். அவர் கதை சொல்லும்போது, நேருக்கு நேராகக் கதாபாத்திரங்கள் வருவது போல் இருக்குமாம். அபிநயத்துடன் ஆடிப்பாடிக்கொண்டே கதை சொல்லுவாராம். குழந்தைகள் அந்தக் கதைகளைக் கேட்டுத் துள்ளிக் குதிப்பார்களாம்.
வெகு விரைவில் அவருடைய குழந்தைக் கதைகள் புத்தகங்களாக வெளிவந்தன. புத்தகங்களாக வெளிவந்ததோடு அக்கதைகள் பல நாடுகளுக்கும் பரவத் தொடங்கின. கதைகளுடன் ஆண்டர்சனின் புகழும் பரவியது.
டென்மார்க் தேச அரசாங்கத்தார் ஆண்டர்சனுக்குப் பணம் கொடுத்து ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி முதலிய நாடுகளைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்தார்கள். அந்த நாடுகளுக்கு அவர் போவதற்கு முன்பே அவருடைய கதைகள் அங்கே போய்ச் சேர்ந்துவிட்டதால், அவருக்கு அமோகமான வரவேற்புக் கிடைத்தது. புகழ் ஏற ஏற, நிறையக் கதைகளை அவர் எழுதினார்.
அவர் காலத்திற்குள் மொத்தம் 156 கதைகள் புத்தகங்களாக வெளி வந்தன. ஆனால், அந்தக் கதைகளை ஆரம்பத்தில் படங்கள் இல்லாமலே வெளியிட்டார்கள். அந்தப் புத்தகங்களைப் பார்த்த டென்மார்க் தேசத்துப் பதிப்பாளர் ஒருவர், இந்தக் கதைகளைப் படங்களுடன் வெளியிட்டால், குழந்தைகள் மேலும் குதூகலம் அடைவார்களே என்று நினைத்தார். ஆனால், படங்கள் போடுவதற்கு ஓவியர் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஆண்டர்சனிடமே அப் பதிப்பாளர் ஒப்படைத்தார். ஆண்டர்சன் விருப்பப்படி 'வில்ஹ் பாடர்சன்' என்ற ஓவியர் படங்கள் வரைந்தார். அவர் வரைந்த படங்கள் சுமார் 200 இருக்கலாம். அவை யாவுமே மிகவும் நன்றாக இருந்தன. பலரும் அவற்றைப் பாராட்டினார்கள்.
ஆண்டர்சன் அன்னையிடம் கூறியது வீண் போகவில்லை. அழியாப் புகழ் சம்பாதித்துக்கொண்டுதான் அவர் ஊர் திரும்பினார். அவர் திரும்பி வந்தபோது அந்த ஊர் மக்கள் அவருக்கு பெரிய வரவேற்பு அளித்தார்கள்! தெருவெல்லாம் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஊர்வலமாகச் சென்றனர். “ஆண்டர்சன் வாழ்க! ஆண்டர்சன் வாழ்க!" என்ற ஒலி வானைப் பிளந்தது.
மறுநாள், அங்கிருந்த எல்லாப் பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை! நகர மண்டபத்திலே கோலாகலமான வரவேற்பு நடந்தது. மேயரும், நகரசபை அங்கத்தினர்களும் கைகுலுக்கி அவரை வரவேற்றார்கள். மேயர் ஆண்டர்சனை வரவேற்றுப் பேசினார். மக்களெல்லாம் மண்ட பமே அதிரும்படி கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அவருக்கு வாழ்த்துத் தந்திகள் வந்து குவிந்தன. பல நாட்டுக் குழந்தைகளும் அவருக்குப் பரிசுகள் அனுப்பியிருந்தார்கள்.
அன்று இரவு அவரை கௌரவிப்பதற்காக ஒரு பெரிய விருந்து நடந்தது. விருந்து முடிந்ததும், அவரை விருந்து மண்டபத்தின் ஒரு ஜன்னல் அருகே அழைத்துச் சென்றார்கள். ஆண்டர்சன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். எங்கே பார்த்தாலும் பிரகாசமான விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. ஆண்டர்சனுக்கு மரியாதை செய்யவே அப்படி விளக்குகளை ஏற்றி வைத்திருந்தனர். விளக்குகளின் ஒளியைக் கண்டு அவர் மனம் குளிர்ந்தார்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு யாரைப் பார்த்துக் கேலி செய்தார்களோ, அவருக்குத் தான் இப்படி ராஜ மரியாதை நடந்தது!
ஆண்டர்சனின் புகழ் நாளுக்குநாள் வளர்ந்தது. அவரது கதைகள் உலகெங்கும் பரவின. இதுவரை சுமார் 125 மொழிகளில் அவரது
கதைகள் வெளிவந்திருக்கின்றன. வண்ண ஓவியங்களுடன் அழகழகான பதிப்புகள் ஆயிரக்கணக்கில் வெளிவந்திருக்கின்றன; இன்னும் வெளிவந்துகொண்டேயிருக்கின்றன!
ஓடென்ஸ் நகரிலே ஆண்டர்சன் பிறந்த வீடு இப்போது ஒரு கலைக்கூடமாக விளங்குகிறது. ஆண்டர்சனின் கையெழுத்துப் பிரதிகள், கடிதங்கள், இன்னும் அவர் சம்பந்தப்பட்ட படங்கள், சித்திரங்கள் முதலியவற்றையெல்லாம் திரட்டி அங்கு ஒரு காட்சியாக வைத்திருக்கிறார்கள். அவற்றுடன், இதுவரை வெளிவந்துள்ள ஆண்டர்சனின் கதைப் புத்தகங்களையும் ஆண்டர்சனைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களையும் சேகரித்து வைத்திருக்கிறார்கள். அந்த நகருக்குச் செல்வோர் அங்கே சென்று அவற்றைப் பார்க்காமல் திரும்ப மாட்டார்கள் !