

பூமியை நோக்கி மிகமிகப் பெரிய வால்மீன் ஒன்று வந்துகொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை இருந்த வால்மீன்களைவிட, இந்த வால்மீன் சுமார் 50 மடங்கு பெரியதாக இருக்கிறது.
வால்மீன் என்றால் என்ன?
கோள்கள் உருவானபோது தூக்கி எறியப்பட்ட தூசுகளும் பாறைகளும் வாயுக்களும் சேர்ந்து, சிறிய பனிக் கோள்களாகச் சூரியமண்டலத்தைச் சுற்றி வருகின்றன. இதைத்தான் நாம் ‘வால்மீன்’, ‘வால்நட்சத்திரம்’ என்ற பெயர்களில் அழைத்து வருகிறோம். கோள்களைப் போலவே வால்மீன்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனைவிட்டுத் தொலைவில் இருக்கும்போது வால்மீன்களுக்கு ‘வால்’ இருப்பதில்லை. சூரியனை நெருங்கும்போது, சூரிய வெப்பத்தால் வால்மீன்களிலுள்ள பொருட்கள் ஆவியாகின்றன. அப்போது தான் வால்மீன்களுக்கு ‘வால்கள்’ உருவாகின்றன. சில நேரம் ஒன்றுக்கு மேற்பட்ட வால்களும் தோன்றுவது உண்டு.
ராட்சச வால்நட்சத்திரம்
நாசாவின் ஹபிள் தொலைக்நோக்கி ராட்சச வால்மீனைக் கண்டறிந்துள்ளது. 500 ட்ரில்லியன் டன் நிறையும் 137 கி.மீ. அகலமும் கொண்ட இந்த ராட்சச வால்மீன், மணிக்கு 22,000 மைல் வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் இந்த வால்மீனைக் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை. சூரியனிலிருந்து 1 பில்லியன் மைல் தூரத்துக்குதான் இது நெருங்கிவரும். 2031ஆம் ஆண்டு பூமிக்கு அருகில் சூரியனிலிருந்து சனிக்கோள் தூரத்துக்கு வரும். இந்த வால்மீன், 2010ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. என்றாலும், இப்போதுதான் ஹபிள் தொலைநோக்கி வால்மீனின் அளவை உறுதி செய்திருக்கிறது.
சிலி நாட்டில் கூட்டு அமெரிக்க ஆய்வகத்தில் ஆய்வு செய்துவரும் பெட்ரோ பெர்னார்டினெல்லி, கேரி பெர்ன்ஸ்டீன் ஆகிய விஞ்ஞானிகள் இந்த வால்மீனைக் கண்டுபிடித்ததாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
பெர்னார்டினெல்லி-பெர்ன்ஸ்டீன் வால்மீன் தற்போது, நம் சூரிய மண்டலத்தின் விளிம்பில் உள்ளது. 30 லட்சம் ஆண்டுகளுக்கு மேலாக, 22 ஆயிரம் மைல் வேகத்தில், நீள்வட்டப்பாதையில் சூரியனை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது.