Published : 27 Apr 2016 12:18 pm

Updated : 27 Apr 2016 12:18 pm

 

Published : 27 Apr 2016 12:18 PM
Last Updated : 27 Apr 2016 12:18 PM

நாட்டுக்கொரு பாட்டு- 3: ஒரே தேசிய கீதமான இரு பாடல்கள்!

3

‘இந்தக் காலத்துலயும் இப்படியா?''- வியப்புடன் அல்ல; வேதனையுடன் வினவியது உலகம். வரலாற்றில் சிறப்பு பெற்ற அந்த நாட்டில், அப்படி என்ன சிறப்பு?

மனிதன் - மகாத்மா!

ஒரு மனிதரை மகாத்மாவாக மாற்றி மனித குல வரலாற்றில் ஒரு இனிய புதிய அத்தியாயம் உருவாக அடித்தளம் இட்ட நாடு அது. ‘எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் என்னைச் சிறையில் போடுங்கள்; எனது போராட்டத்தின் வடிவம் மாறாது; பாதை தவறாது'. மனஉறுதியுடன் நின்று வென்று காட்டிய அதிசயத் தலைவரைக் கொண்ட நாடு. அது தென்னாப்பிரிக்கா.

தனிமை

நிற வெறி கோர தாண்டவம் ஆடியது; பிற உலக நாடுகள் தென்னாப்பிரிக்காவை வெறுத்து ஒதுக்கின; சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் எதிலும் கலந்துகொள்ள முடியாத சூழல். தனிமைப்பட்டுக் கிடந்தது அந்த தேசம். ஆனாலும், வெள்ளைக்காரர்கள் மனம் மாறுவதாக இல்லை.

‘உடல் மட்டுமே கறுப்பு; ரத்தம் என்றும் சிவப்பு'. இது மிகவும் சாதாரண உண்மை. இதைப் புரிந்துகொள்ள மறுத்தனர் வெள்ளையர்கள்.

போராட்டம்

வக்கீல் தொழிலுக்காகத் தென்னாப்பிரிக்கா சென்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, இந்தப் பிழையைத் திருத்தப் போராடினார். போராட்டம் சற்று பிசகினாலும் உணர்ச்சிகள் வெடித்து கலவரமாகும் நிலையும் இருந்தது. மிகப் பொறுமையாக, பொறுப்போடு போராட்டம் வடிவமைக்கப்பட்டது.

தலைவன்

அந்த மண்ணில் இருந்தே புறப்பட்டார் ஒரு தலைவர். அவர்தான் நெல்சன் மண்டேலா. காந்திய வழியில் சற்றும் அசராமல் அங்குலம் அங்குலமாக, தம் மக்களை இலக்கை நோக்கி கூட்டிச் சென்றார். நீண்ட நெடிய இந்தப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்தது. நிறப் பாகுபாட்டிலிருந்து மீண்டது தென்னாப்பிரிக்கா.

வந்தது பாட்டு

'இனி நாம் ஒருவரே' என்பதை ஊருக்குத் தெரியப்படுத்த, உலகுக்குப் பிரகடனப்படுத்த, தேசிய கீதம் வேண்டும் என்று நினைத்தார்கள்! நிறத்தால் சிதறிக் கிடந்த நாட்டில், மக்களால் பேசப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் மட்டும் பதினொன்று! இவற்றில் ஐந்து, மிகப் பரவலாகப் பேசப்பட்டவை.

ஒரே தேசிய கீதம்தான் சாத்தியம். மக்கள் பேசும் மொழிகளே குறைந்தபட்சம் ஐந்துதான். என்ன செய்ய முடியும்? இருந்தாலும் உலகுக்கு வழி காட்டியது தென் ஆப்ரிக்கா. ஐந்து மொழிகளைக் கொண்ட கீதம் உருவானது.

எல்லார்க்கும் பொது

சோசா, ஜுலு, செசோதோ, ஆப்ரிகன்ஸ், ஆங்கிலம் என ஒவ்வொரு மொழியில் இருந்தும் சில வரிகள் எடுக்கப்பட்டன. பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் தேசிய கீதத்தை உருவாக்கினால் என்ன? ஊஹூம். எழுத வேண்டிய தேவையே இல்லை. ஏறத்தாழ அப்படி ஒரு பாடல் ஏற்கெனவே இருந்தது. 1897-ல், கிறிஸ்த மத போதகர் எனாக் மன்காய் சான்டோங்கா இயற்றிய பாடல் அது. ‘ஆண்டவன் ஆப்பிரிக்காவை ஆசிர்வதிக்கட்டும்' எனத் தொடங்கும் அந்தப் பாடல், பள்ளிக்கூடப் பாடலாக இயற்றப்பட்டது. பிறகு அந்த நாட்டு தேவாலயங்களில் பிரபலம் ஆனது.

1925-ல் இது, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் அதிகாரபூர்வ பாடலாக மாறியது. நிற வெறிக்கு எதிராகக் குரல் கொடுத்த மக்கள் இந்தப் பாடலைத்தான் ஒரே குரலில் பாடிக்கொண்டு இருந்தார்கள். மக்கள் பேசும் நான்கு பிரதான உள்ளூர் மொழிகளில் உருவாக்கப்பட்டிருந்தது இந்தப் பாடல். (மொழி மாற்றப்பட்ட இப்பாடல் இன்று தான்சானியா, ஜாம்பியா நாடுகளின் தேசிய கீதமாகவும் இருக்கிறது)

இணைந்த கீதம்

இதேபோல ‘தென்னாப்பிரிக்காவின் குரல்' என்ற ஆங்கிலப் பாடலும் பிரபலமானது. தென்னாப்ரிக்காவின் தலைசிறந்த இலக்கியவாதியான லேங்கன்ஹோவர் 1918-ல் இயற்றிய பாடல் இது. 1921-ல் மார்ட்டின் லினியஸ் டி வில்லியர்ஸ் இசை அமைத்தார்.

நிறவெறியிலிருந்து மீண்டு புத்துணர்ச்சியுடன் வந்த நாட்டுக்கான தேசிய கீதம் எப்படி இருந்தால் பொருத்தமாக இருக்குமோ, அதற்கு முற்றிலும் பொருந்தி வந்தது. இரண்டு கீதங்களையும் இணைத்து தேசிய கீதம் உருவாக்கப்பட்டது. என்ன சொல்கிறது தென் ஆப்ரிக்காவின் தேசிய கீதம்?

இப்படி ஒலிக்கும்

(1. சோசா; 2. ஜூலு 3. செசோதொ 4. ஆஃப்ரிகன்ஸ் 5. ஆங்கிலம்.)

1. கோஸி சிக லேல் ஈ ஆஃப்ரிகா...

மலுஃபகனி ஸ்வூ ஹொன்டுல் வா...யோ..

2. இஸ்வா இமி தன்டா ஸோ.. யது...

கோஸி சிக லேலா தினா லூஸாஃபோல் வா...யோ...

3. மொரானா புலூகா சட்ஜபா ஸா.. ஹேஸு....

ஓ ஃபெடிஸே டின்ட்வாலே மாட்ஸ்வன்யா ஹே...

ஓஸே புலூகே ஓசா புலூகே ஸெட்ஜ் ஹாபாஸா ஹே... .

..ஸி

ஜாபாஸா ஸௌத் ஆஃப்ரிகா... ஸௌத் ஆஃப்ரிகா...

4. வூ தை ப்ளோ.. ஃபான் ஒன்ஸே ஹே... மல்

வூ தை டைப்தே ஃபான் ஊன்... ஸே...

ஊருன் ஸேவிஜே ஜேபர்ட்கஸ்

வாரி தை க்ரான்ஸே ஆன்ட்வூட் ஜே...

5. ஸௌண்ட்ஸ் தி கால் டு கம் டுகதர்

அண்ட் யுனைடட் வி ஷெல் ஸ்டேண்ட்

லெட் அஸ் லிவ் அண்ட் ஸ்ட்ரைவ் ஃபார் ஃப்ரீ.....டம்

இன் ஸௌத் ஆஃப்ரிகா.. அவர் லேண்ட்.

தமிழாக்கம்

1. ஆண்டவன் ஆப்ரிக்காவை ஆசிர்வதிக்கட்டும்.

அதன் பெருமை உயரட்டும்.

2. எமது பிரார்த்தனையைக் கேட்கட்டும்.

இதன் (ஆப்ரிக்காவின்) குடும்பம் நாங்கள்;

இறைவா எங்களை ஆசிர்வதியுங்கள்.

3. இறைவா எங்கள் தேசத்தை ஆசிர்வதியுங்கள்;

யுத்தங்களையும் வேதனைகளையும் நிறுத்துங்கள்;

இதனைக் காக்கவும்; எங்கள் தேசத்தைக் காக்கவும்.

இந்த தேசம் - தென் ஆப்ரிக்கா.. தென் ஆப்ரிக்கா.

4. எங்கள் நீல வானில் இருந்து

எங்கள் கடலின் ஆழத்தில் இருந்து

என்றும் நிற்கும் மலைகளின் மீதிருந்து

உயர்ந்த பாறைகளில் மோதி எதிரொலிக்கும்

5. ஒன்றாய்ச் சேர்ந்து வர (வாழ) அழைப்பு ஒலிக்கிறது.

(ஆம்) கூடி வாழ்ந்து (நிலையாய்) நிற்போம்.

சுதந்திரத்துக்காக போராடுவோம்; (சுதந்திரமாய்) வாழ்வோம்.

நமது பூமி - தென்னாப்பிரிக்காவில்.

இசைக் கோவையில் இந்த கீதத்தைக் கேட்டுப் பார்த்தல் அவ்வளவு இனிமையாக இருக்கும்.

(கீதங்கள் ஒலிக்கும்)

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!


    நாட்டுக்கொரு பாட்டுஒரே தேசிய கீதம்இரு பாடல்கள்!

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author