

உருவக் கேலி செய்த ஒருவரைத்தானே வில் ஸ்மித் அறைந்தார், அது எப்படித் தவறாகும், டிங்கு?
- கே. நாராயணன், 10-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, கரூர்.
உருவக் கேலி மோசமான விஷயம் என்பதை உணராமல், உலகம் முழுவதுமே கேலி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். கிறிஸ் ராக் உருவக் கேலி செய்யும்போது, வில் ஸ்மித் அதை நாசூக்காகச் சுட்டிக்காட்டியிருந்தால், உலகமே அவர் பக்கம் நின்றிருக்கும்; கிறிஸ் ராக் செய்தது தவறு என்று சொல்லியிருக்கும். கோபப்பட்டு அறைந்ததால், கிறிஸ் ராக் செய்ததைவிட வில் ஸ்மித் செய்தது பெரிய தவறாகிவிட்டது. ஒருவரைக் கேலி செய்வது எவ்வளவு மோசமோ அதே போல ஒருவர் மீது வன்முறையைச் செலுத்துவதும் மோசமான விஷயம்தான். ஆனால், தான் செய்த தவறுக்கு மனம் உருகி மன்னிப்பு கேட்ட பிறகு, வில் ஸ்மித்தை மன்னிப்பதும் மனித மாண்புதான், நாராயணன்!
பூமியிலிருந்து பார்த்தால் வானம் நீல நிறமாக இருக்கிறது. விண்வெளியிலிருந்து பார்த்தால் ஏன் கறுப்பாக இருக்கிறது,டிங்கு?
- மெல்பின், 9-ம் வகுப்பு, ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா, கூத்தூர், திருச்சி.
பகல் நேரத்தில் மட்டுமே நாம் நீல நிற வானத்தைப் பார்க்கிறோம். இரவில் வானம் கருமையாகத்தான் இருக்கிறது. பூமியின் மேலே வளிமண்டலம் இருப்பதால், சூரியனிலிருந்து வரும் ஒளியை அது சிதறடிக்கிறது. அப்போது ஒளியிலிருந்து வண்ணங்கள் பிரிவதால் வானம் நீல நிறமாகத் தெரிகிறது. இரவில் சூரிய ஒளி இல்லாததால் வானம் கருமையாக இருக்கிறது. பூமியின் துணைக்கோளான சந்திரனில் வளிமண்டலம் இல்லை. அதனால் அங்கே பகலிலும் இரவிலும் வானம் கருமையாகத்தான் தெரியும். அதே போல அண்டவெளியிலும் வளிமண்டலம் இல்லை. பெரும்பகுதி வெற்றிடமாகவே இருக்கிறது. அதனால், தொலைவிலிருந்து வரும் நட்சத்திரங்களின் ஒளியைச் சிதறடிப்பதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, ஒளி ஒரே நேர்க்கோட்டில் செல்கிறது. அதனால், தொலைதூர நட்சத்திரங்களிலிருந்து வரும் இந்த ஒளி, ஓர் ஒளிப் புள்ளி போலத் தென்படுகிறது, மெல்பின்.
பயணம் செய்யும்போது வாந்தி வருகிறதே ஏன், டிங்கு?
- வி. ஹேம வர்ஷினி, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.
வாகனங்களில் பயணம் செய்யும்போது வாந்தி, தலைச் சுற்றல், குமட்டல், தலைவலி போன்ற பிரச்சினைகள் வந்தால் அவர்களுக்குப் ‘பயண நோய்’ (Motion sickness) இருக்கலாம். பேருந்து, ரயில்களில் வேகமாகச் செல்லும்போது நாம்தான் பயணிப்போம். ஆனால், வெளியில் தெரியும் மரம், செடி, கட்டிடங்கள் போன்றவை நம்மைக் கடந்து வேகமாகச் செல்வது போலத் தோன்றும். கண் இப்படி மூளைக்குத் தகவல் அனுப்புகிறது. ஆனால், காது பயணிக்கும் சத்தத்தை வைத்து வேகமாக நாம் பயணிப்பதாக மூளைக்குத் தகவல் அனுப்புகிறது.
இப்படிச் சில உறுப்புகள் கொடுக்கும் தகவல்களால் மூளை குழப்பமடைகிறது. அப்போது பயண நோய் உண்டாகிறது. அது வாந்தி, குமட்டல், தலைச் சுற்றல், தலை வலியாக வெளிப்படுத்துகிறது என்கிறார்கள். பயணங்களின்போது உடல் சமநிலையை இழந்துவிடுவதாலும் பயண நோய் ஏற்படுகிறது என்கிறார்கள். நிலத்தில் மட்டுமன்றி, கப்பல், விமானப் பயணங்களிலும் பயண நோய் வரும். மூன்றில் ஒருவருக்குப் பயண நோய் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சிலருக்கு பெட்ரோல், டீசல் வாசனை ஒத்துக்கொள்ளாததாலும் வாந்தி வரலாம், ஹேம வர்ஷினி.