Last Updated : 06 Apr, 2022 06:30 AM

 

Published : 06 Apr 2022 06:30 AM
Last Updated : 06 Apr 2022 06:30 AM

கதை: ஜெயித்தது யார்?

முல்லைக் காட்டில் சிங்கராஜா போட்டி ஒன்று நடத்தப் போவதாகவும், போட்டியில் வெற்றி பெறுபவருக்கு மிகச் சிறந்த பரிசு கொடுக்கப்பட இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.

அந்தக் காட்டில் விலங்குகள் ஒற்றுமை இல்லாமல் வாழ்ந்துவந்தாலும், போட்டியைப் பற்றிப் பேசிக்கொண்டே சிங்கராஜாவின் குகை வாசலுக்கு வந்து சேர்ந்தன.

“அரசே, என்ன போட்டி என்று சொல்லுங்கள். நாங்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று விலங்குகள் ஆர்வத்துடன் கேட்டன.

“ஆற்றின் இந்தக் கரையிலிருந்து மறுகரைக்கு நீந்திச் செல்ல வேண்டும். மறுகரையைத் தொட்டுவிட்டு இக்கரைக்கு வந்து சேர வேண்டும். இதுதான் போட்டி. வெற்றி பெறுபவருக்கு மலர்க்கிரீடம் சூட்டி, பரிசும் அளிப்பேன். போட்டியில் எல்லாரும் கலந்துகொள்ள வேண்டும்” என்றது சிங்கராஜா.

சிறிய விலங்குகள் திகைத்தன. ‘பெரிய விலங்குகள் கலந்துகொள்ளும் போட்டியில் நாம் எப்படி வெற்றி பெற முடியும்?’ என்று முணுமுணுத்தன. ஆனாலும் சிங்கராஜாவின் கட்டளைக்குப் பயந்து போட்டிக்குச் சம்மதித்தன.

ஆமையும் தவளையும் “அரசே, நல்ல போட்டி அறிவித்தீர்கள். போட்டிக்கு நாங்கள் இப்போதே தயார்” என்று சத்தமிட்டன.

“நீங்கள் இருவரும் நீரில் நன்றாக நீந்தத் தெரிந்தவர்கள். அதனால், போட்டியில் கலந்துகொள்ள வேண்டாம். உங்களுக்கு வேறு போட்டி பின்னர் நடத்துகிறேன்” என்றது சிங்கராஜா.

“சரி வாருங்கள், போட்டியை ஆரம்பிக்கலாம்” என்றபடி சிங்கராஜா முன்னே நடக்க, எல்லா விலங்குகளும் பின்தொடர்ந்தன.

கரடி, சிறுத்தை, வரிக்குதிரை, கழுதைப்புலி, மான், குரங்கு, நரி, முயல் அனைத்தும் ஆற்றங்கரையில் தயாராக நின்றன.

சிங்கராஜா ஒரு குச்சியைக் கையில் எடுத்துக்கொண்டு ‘ஒன்று, இரண்டு, மூன்று’ என்று சொல்லிவிட்டு, குச்சியை மேலும் கீழுமாக அசைத்தது.

அனைத்து விலங்குகளும் ஆற்றுக்குள் குதித்து நீந்தத் தொடங்கின.

சிறுத்தை முதலில் மறுகரையைத் தொட்டது. பிறகு கரடி தொட்டது. வரிக்குதிரையும், நரியும், கழுதைப்புலியும், குரங்கும், மானும் மறுகரையைத் தொட்டன. ஆனால், முயல் சிறிய விலங்காக இருந்ததால் வேகமாக நீந்த முடியவில்லை. அது இறுதியாக மறுகரையைத் தொட்டது.

மறுகரையைத் தொட்ட விலங்குகள் அனைத்தும் திரும்பி இக்கரையை நோக்கி நீந்தத் தொடங்கின. சிறுத்தை மிக வேகமாக நீந்தி இக்கரையை வந்தடைந்தது. கரையில் நின்றிருந்த சிங்கராஜா கைதட்டி சிறுத்தையை வரவேற்றது. சிறுத்தைக்கு அடுத்தபடியாக கரடி வந்து சேர்ந்தது. வரிக்குதிரையும் நரியும் கழுதைப்புலியும் குரங்கும் அடுத்தடுத்து வந்து சேர்ந்தன.

இப்போது ஆற்றில் மானும் முயலும் மட்டுமே நீந்திக்கொண்டிருந்தன. மான் முன்னே நீந்திவர, சற்றுப் பின்னால் முயல் நீந்திக்கொண்டிருந்தது. சிறிய விலங்கான முயல் மிகவும் களைத்துப் போயிருந்தது. அது ஆற்றின் நீரோட்டத்தை எதிர்கொண்டு நீந்த முடியாமல் தத்தளித்தது. முயல் தத்தளிப்பதை மான் உணர்ந்துகொண்டது.

தன்னருகில் வரும்வரை காத்திருந்த மான், முயலிடம் கொம்புகளைப் பிடித்துக்கொள்ளச் சொன்னது. பிறகு மானும் முயலும் ஒன்றாக நீந்தி இக்கரையை அடைந்தன. களைத்துப் போயிருந்த முயலை முதலில் கரையில் ஏற்றிவிட்டு இறுதியாக மான் கரை ஏறியது.

“அரசே, இந்தப் போட்டியில் நான்தான் வெற்றி பெற்றேன். அதனால், எனக்கு மலர்க்கிரீடம் சூட்டி, பரிசை வழங்குங்கள்” என்று வேண்டிக்கொண்டது சிறுத்தை.

“சிறுத்தையே, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது நீ அல்ல. மான்தான்” என்றது சிங்கராஜா.

சிறுத்தைக்கு அதிர்ச்சியாக இருந்தது. “அரசே, நான்தானே முதலில் ஆற்றின் அக்கரையைத் தொட்டுவிட்டு மீண்டும் இக்கரைக்கு வந்து சேர்ந்தேன். ஆனால், மான் வெற்றி பெற்றதாகச் சொல்கிறீர்களே, இது நியாயம்தானா?” என்று பணிவோடு கேட்டது.

சிறுத்தை சொன்னதைக் கேட்டு சிங்கராஜா புன்னகை செய்தது.

“சிறுத்தையே, முதலில் நீந்தி வந்து இக்கரையைத் தொட்டது நீதான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், நான் அறிவித்த போட்டி என்ன? ஆற்றின் இக்கரையிலிருந்து நீந்தி மறுகரையைத் தொட்டுவிட்டு மீண்டும் இக்கரைக்கு வந்துசேர வேண்டும் என்பதுதானே? முதலில் வந்து சேர்பவர்தான் வெற்றி பெற்றவர் என்று நான் சொல்லவே இல்லையே. நான் இந்தப் போட்டியை நடத்தியது யார் முதலில் வந்து சேர்கிறார் என்று அறிந்து கொள்வதற்காக அல்ல. ஆபத்து காலத்தில் யார் பிறர் மீது அன்பும் அக்கறையும் காட்டுகிறார் என்பதை அறிந்து கொள்ளத்தான். பரிசை வெல்ல வேண்டும் என்று எல்லாரும் வேகமாக நீந்தினீர்கள். ஆனால், ஆபத்திலிருந்த முயலுக்கு மான் உதவி செய்து, இக்கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தது. இந்தக் காட்டில் ஒற்றுமை இல்லாமல் வாழ்கிற நீங்கள் அன்பையும் ஒற்றுமையையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போட்டியை நடத்தினேன். யாரும் வருத்தப்பட வேண்டாம். போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசு உண்டு. அன்பைக் கற்பித்த மானுக்கு சிறப்பான பரிசு உண்டு” என்றது சிங்கராஜா.

சிறுத்தையும் மற்ற விலங்குகளும், “அரசே, நீங்கள் சொல்வது சரிதான். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர் ஆபத்துக் காலத்தில் முயலுக்கு உதவி செய்த மான்தான். இனி நாங்கள் அனைவரும் அன்போடும் ஒற்றுமையோடும் வாழ்வோம்” என்று கைதட்டி மானைப் பாராட்டின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x