வனக்குரல் - நகைச்சுவை சிறார் நாளேடு | கட்டிடம் கட்ட தடை; பூனைநாயகத்துக்கு எச்சரிக்கை

வனக்குரல் - நகைச்சுவை சிறார் நாளேடு | கட்டிடம் கட்ட தடை; பூனைநாயகத்துக்கு எச்சரிக்கை
Updated on
2 min read

பன்றிபுரம்: பன்றிபுரத்தில் காட்டுப்பன்றி நலவாழ் சங்கத்துக்குச் சொந்தமான நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இயற்கை விவசாயம் நடந்துவந்த பன்றிபுரத்தில் நலவாழ் சங்கத்தைச் சேர்ந்தோர் பங்களா கட்டுவதற்காக மண்ணைத் தோண்டினர். இதைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்து காட்டுப்பன்றிகள், வளம் கொழிக்கும் நிலத்தில் கட்டிடம் கட்டக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததோடு, நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தன. விவசாய நிலத்தில் கட்டிடம் கட்டினால், விவசாயத்தையும் பாதிக்கும்; காட்டுப்பன்றிகளையும் பாதிக்கும் என நீதிபதி முள்ளம்பன்றியான் உத்தரவு பிறப்பித்தார்.

பூனைநாயகத்துக்கு எச்சரிக்கை

பூனைமேடு: கிளியிடம் கண்ணை உருட்டி மிரட்டிய பூனைநாயகத்தை, பேருந்தில் பயணம் செய்தவர்கள் கண்டித்தனர். பூனைமேடு வழித்தடத்தில் யானைவால்புரத்தில் இருந்து புறப்பட்டு, மாட்டுப்பண்ணைபுரத்துக்குச் சென்றுகொண்டிருந்த போது கிளிமானூரில் ஏழு கிளிகள் பேருந்தில் ஏறின. கீச் கீச் என்று கத்திக்கொண்டும் அங்கும் இங்கும் அலைந்துகொண்டும் இருந்த கிளிகளைக் கண்டு எரிச்சலடைந்த பூனைநாயகம், கண்களை உருட்டி மிரட்டினார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த சக பயணிகளான காகம், புறா, சிட்டுக்குருவி எல்லாம் சேர்ந்து பூனைநாயகத்தைக் கண்டித்தன. கோபமடைந்த பூனைநாயகம் பேருந்தை, பூனைமேடு காவல் நிலையத்துக்கு விடச் சொன்னார். தலைமைக் காவலர் கரடியன், பூனைநாயகம் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திவருகிறார்.

நரிகளுக்கு உணவு

நரிவால்புரம்: சாப்பாட்டுக்குத் திண்டாடும் நரிகளுக்காக வரும் ஆண்டில் உணவு வழங்கப்படும் என வன பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீனிப்பிரிவுத் துறை அமைச்சர் நரியன் பட்ஜெட் குறித்து வனசபையில் பேசும்போது, “தற்போது சாப்பாட்டுக்குத் திண்டாடுவோர் பட்டியலில் நரிக்குடும்பங்கள்தாம் மிகுந்த வேதனையில் உள்ளன. ஏமாற்றிப் பிழைக்கக்கூடியவர்கள் என்கிற தவறான நம்பிக்கையின் காரணமாக, இவர்களுக்கு யாரும் வேலை கொடுப்பதும் இல்லை. அதனால், நரிக்குடும்பங்களுக்கு இந்த ஆண்டு உணவும் வேலையும் கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

நாகராஜாவுக்கு மூச்சுத்திணறல்

நாகர்காடு: பாம்புபுரத்தைச் சேர்ந்த ஏழு வயது நாகராஜா, நேற்றுக் காலையில் நாகர்காடு அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி போட வந்தார். ஆதார் எண், போன் நம்பர் ஆகியவற்றைப் பதிவு செய்த தலைமை செவிலியர் தவளைகுமாரி, தடுப்பூசியை நாகராஜாவுக்குச் செலுத்தினார். உடனே நாகராஜா தவளைகுமாரியைப் பிடித்து லபக்கென்று விழுங்கிவிட்டார். இதனால், நாகராஜாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நாகராஜாவின் தொண்டையில் சிக்கிய தவளைகுமாரியை, இன்னொரு செவிலியர் மீட்டெடுத்தார். நாகராஜாவின் மூச்சுத்திணறலும் சரியானது. இது குறித்து தவளைகுமாரி அரசு மருத்துவமனை புறக்காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆமைநகர் போலீசார் நாகராஜாவைக் கைது செய்து, சப்பாத்திகள்ளிக் குகையில் அடைத்தனர்.

குரங்கனுக்கு வீரதீர விருது!

வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்களைத் துணிச்சலுடன் காப்பாற்றிய குரங்கனுக்கு வீரதீர விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு காட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது ஏராளமான காட்டு விலங்குகள் அடித்துச் செல்லப்பட்டன. அப்போது தன் உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன், இருபது விலங்குகளைக் காப்பாற்றிய குரங்கனுக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பதில் காட்டுவாழ் உயிரினங்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றன.

வனவாணி (எஃப்.எம்) இன்றைய நிகழ்ச்சிகள்

1. காலை 8 மணிக்கு: புலர்காலை ஊளை - நிலைய வித்வான் நெடியவால் நரி பாகவதர்.

2. காலை 10 மணிக்கு: வனக்கூத்து - புலியன்குளம் புலிராஜன் மற்றும் குழுவினர்.

3. காலை 11 மணிக்கு: குயில் பாட்டு - யானைகுளித்தான்புரம் குயிலம்மா குழுவினர்.

4. மதியம் 1 மணிக்கு ஆட்டுக்கார அலமேலு, சிறுத்தை, சிங்கம் படங்களிலிருந்து பாடல்கள்.

5. மாலை 5 மணிக்கு ஒட்டக ஆட்டம்: ராஜஸ்தான் ஒட்டக ராணி குழுவினர்.

6. இரவு 7 மணிக்கு: கஜராஜன் கோயில் யானை ஊர்வலம் நேர்முக வர்ணனை.

7. இரவு 10 மணிக்கு ஆந்தை அலறலுடன் நிகழ்ச்சிகள் நிறைவு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in