Last Updated : 30 Mar, 2022 10:30 AM

 

Published : 30 Mar 2022 10:30 AM
Last Updated : 30 Mar 2022 10:30 AM

மாய உலகம்: கடவுள் என்ன சொன்னார்!

ஓவியம்: லலிதா

நாணு, அங்கெல்லாம் போகாதே என்று சொன்னால், எங்கே என்று கேட்டு விசாரித்துக்கொண்டு, மிகச் சரியாக அங்கே போய் நிற்பார். அவர்களோடு பேசாதே என்றால் எவர்களோடு என்று கேட்டுக்கொண்டு அவர்களோடு பேசுவார். அந்த வீடுகளிலிருந்து தண்ணீர்கூட வாங்கிக் குடிக்கக் கூடாது, புரிகிறதா என்று சொன்னால் ஓ புரிகிறது என்று சொல்லிவிட்டு அன்றே அங்கே ஓடுவார். எனக்குப் பசிக்கிறது, ஏதாவது கிடைக்குமா என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டுவிட்டுதான் வீடு திரும்புவார்.

ஏன் இப்படியெல்லாம் செய்கிறாய் நாணு என்று கோபித்துக்கொண்டால், நீங்களெல்லாம் ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று திருப்பிக் கேட்பார். இது கடவுளின் விதி என்று நாணுவுக்குப் புரிய வைக்க வீட்டிலுள்ள பெரியவர்கள் எவ்வளவோ முயன்றார்கள். நாம் ஈழவர்கள். நமக்கென்று சில மரபுகள் இருக்கின்றன. ஓர் ஈழவர் இன்னோர் ஈழவரோடுதான் பழகவேண்டும். கீழ்ச்சாதியாகக் கருதப்படுபவர்கள் வீட்டுக்குப் போய் நீ விளையாடுவதும் அவர்களோடு சேர்ந்து சாப்பிடுவதும் தவறு.

அப்படிச் சொன்னது யார் என்று நாணு கேட்டபோது, கடவுள் என்று பதில் கிடைத்தது. கல் போல் அப்படியே நின்றுவிட்டார் அவர். திகைப்பும் அதிர்ச்சியும் கோபமும் ஒன்றுசேர்ந்து தாக்கியது போலிருந்தது. கடவுள் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? என்னை ஏன் அவர் என் நண்பர்களிடமிருந்து பிரிக்க வேண்டும்? நான் அவர்களோடு இருக்கும்போதுதானே மகிழ்ச்சியோடு இருக்கிறேன்? அவர்கள் உணவிலும் அதே சுவையைத்தானே நான் காண்கிறேன்? என்னைப் போல் அல்லவா அவர்களும் இருக்கிறார்கள்? நான் வணங்கும் அதே கடவுளைத்தானே அவர்களும் வணங்குகிறார்கள்? இருந்தும் ஏன் பிரிந்து கிடக்க வேண்டும் நாங்கள்?

கடவுள் மனிதர்களோடு பேசியிருக்கிறாரா? யார், யாரோடு சேர வேண்டும், யார் யாரோடு சேரக் கூடாது என்றெல்லாம் அவர் சொல்லியிருக்கிறாரா? எங்கே சொல்லியிருக்கிறார் அப்படியெல்லாம்? இன்னும் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார் அவர்? நான் தெரிந்துகொள்ள வேண்டாமா?

ஒருவேளை சம்ஸ்கிருதத்தில் பேசியிருப்பாரோ? கோயில்களில் எல்லாம் அந்த மொழியில்தானே மந்திரங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்? அந்த மொழியில்தானே பெரிய, பெரிய நூல்களை எல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள்? விளையாடுவதை மூட்டைகட்டி வைத்துவிட்டு, சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் நாணு.

அவர் நினைத்ததைவிடவும் கடினமாக இருந்தது. பின்வாங்கவில்லை நாணு. விடை தெரிந்தாக வேண்டும். அதற்கு எதையும் செய்யத் தயார் அவர். வந்தேனா பார் என்று அடம்பிடித்த சம்ஸ்கிருதம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெட்டிப்பாம்பாக அடங்கிப் போனது. வேதங்களையும் உபநிடதங்களையும் படிக்க ஆரம்பித்தார். கடவுளின் சொற்களை ஏராளம் கண்டார் அவர். ஆனால், அவர் தேடியது எங்கும் கிடைக்கவில்லை.

நாம் இருப்பது கேரளம். இங்கிருப் பவர்களுக்கு மலையாளம்தான் தெரியும் என்பதால் கடவுள் அந்த மொழியில் பேசியிருப்பாரோ? மலையாளத்தில் இயற்றப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பாடல்களை ஆராய்ந்தார். அவர் தேடிய ஒரு சொல் எங்கும் இல்லை. அப்படியே தமிழையும் எட்டிப் பார்த்துவிடுவோம் என்று தமிழ் நூல்களிலும் கவனமாகத் தேடினார். கிடைக்கவில்லை.

இந்திய மொழிகள் அல்ல, உலக மொழிகளில் எங்கும் அப்படியொன்று கிடைக்கவே போவதில்லை என்பதை நாணு உணர்ந்துகொண்டார். இந்த உணர்வு தோன்றியபோது அவர் நாராயண குருவாக மாறியிருந்தார்!

கடவுள் மனிதனோடு பேசினாரா என்னும் கேள்வியோடு என் தேடலைத் தொடங்கினேன். நான் கண்டுபிடித்த உண்மை இதுதான். ஆம், கடவுள் மனிதனோடு பேசியிருக்கிறார். அவருடைய சொற்களை நான் படித்துப் பார்த்தேன். நான் யாருடன் பழக வேண்டும் என்றோ யாருடன் பழகக் கூடாது என்றோ அவர் எங்கும் சொல்லவில்லை. நாம் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக் கூடாது என்றோ யார் வீட்டில் சாப்பிடலாம், யார் வீட்டில் சாப்பிடக் கூடாது என்றோ அவர் கட்டளை இடவில்லை. இவர் மேல் சாதி என்றோ அவர் கீழ் சாதி என்றோ ஒருவரையும் அவர் பிரித்து வைக்கவில்லை.

அவர்களைத் தீண்டாதே, அவர்களோடு பேசாதே, அவர்கள் வீட்டுக்குப் போகாதே, அவர்களோடு கலக்காதே என்றெல்லாம் மனிதனால் மட்டுமே சொல்லமுடியும். கடவுளால் அல்ல. நாம் உயர்ந்தவர்கள், அவர்கள் தாழ்ந்தவர்கள் என்று மனிதனால் மட்டுமே பிரித்துப் பார்க்கமுடியும். கடவுளால் அல்ல.

கடவுள் அல்ல, மனிதன்தான் சாதியை உருவாக்கினான். கடவுள் அல்ல மனிதன்தான் பூமியெங்கும் கோடுகள் போட்டான். கடவுள் அல்ல, மனிதன்தான் வெறுப்பைக் கண்டுபிடித்தான். கடவுளுக்குத் தெரிந்த மொழி கருணை மட்டுமே. மனிதனிடம் அந்த மொழியில்தான் அவர் பேசினார். நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டது அதைத்தான். உங்கள் அனைவரிடமும் நான் பகிர்ந்துகொள்ள விரும்புவதும் அதை மட்டும்தான்.

நீங்கள் யாருடைய குரலைக் கேட்கப்போகிறீர்கள்? மனிதனின் குரலையா, கடவுளின் குரலையா? நீங்கள் யார் மொழியைக் கற்கப்போகிறீர்கள்? மனிதனின் மொழியையா, கடவுளின் மொழியையா? யார் உங்கள் வழி காட்டியாக இருக்கப்போகிறார்கள்? மனிதனா, கடவுளா?

நீங்கள் யாரைத் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள்? கடவுளின்மீது பழியைப் போட்டுவிட்டுச் சாதியை வழிபடும் மனிதனையா? அல்லது, அவ்வாறு செய்யும் மனிதனை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள். அவனும் நம் உலகின் ஒரு பகுதிதான் என்று சொல்லும் கடவுளையா?

நீங்கள் யாருடன் ஒன்றுகலந்து உரையாடப்போகிறீர்கள்? யாருடன் அமர்ந்து சாப்பிடப் போகிறீர்கள்? யாருடன் விளையாடப்போகிறீர்கள்? யார் தோள்மீது கை போட்டு நடக்கப்போகிறீர்கள்? நீங்கள் எதை நம்பப்போகிறீர்கள்? யாரை வழிபடப்போகிறீர்கள்? நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் சரி. நான் உங்களை விட்டு விலகப்போவதில்லை. உங்களைக் கைவிடவும் போவதில்லை. கடவுள் என்னிடம் என்ன சொன்னாரோ அதை உங்களுக்குச் சொல்லப்போகிறேன். உங்களோடு நான் கைகோத்து நிற்கப்போகிறேன். இன்றும், என்றும்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x