புதிய கண்டுபிடிப்புகள்: மகரந்தச் சேர்க்கையைப் பாதிக்கும் காற்று மாசு
வெண்டை, கேரட், கொத்தமல்லி, வெள்ளரி, முலாம்பழம், வெங்காயம், பூசணி, முள்ளங்கி, டர்னிப், காலிஃபிளவர் போன்ற காய், கனிகளின் விளைச்சல் பூச்சிகளின் அயல் மகரந்தச் சேர்க்கையை நம்பி இருக்கிறது. பூவைச் சுற்றி வட்டமடித்தபடி இருக்கும் மலர் ஈ, தேனீ, அந்திப்பூச்சி, வண்ணத்துப்பூச்சி போன்ற பூச்சிகள்தாம் ஒரு பூவிலிருந்து மகரந்தத்தை எடுத்து அடுத்த பூவுக்கு அளித்து, அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன.
தலையில் உள்ள உணர்கொம்புகள் மூலம் வாசனை அறியும் திறனைப் பூச்சிகள் பெற்றுள்ளன. பூவின் நறுமணத்தை மோப்பம் பிடித்துத்தான் தேனும் மகரந்தமும் உள்ள பூவை நோக்கிப் பூச்சி பறந்து செல்கிறது.
சாக்கடை நெடி தூக்கலாக உள்ள இடத்தில் நம்மால் பூவின் நறுமணத்தை முகர்ந்துபார்க்க முடியாது அல்லவா? அதுபோல வாகனப் புகை, பல்வேறு காற்று மாசு காரணமாகச் சரியாகப் பூச்சிகளால் மணத்தை அறிய முடிவதில்லை. இதனால் அவை பூவை நாடிச் செல்ல முடியவில்லை என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் ரியால்ஸ் கூறியிருக்கிறார்.
கடுகுப் பயிர் வயலில் ஆய்வை மேற்கொண்டார் ரியால்ஸ். எட்டு வட்ட வடிவப் பாத்திகளை வகுத்தார். ஒவ்வொரு பாத்தியைச் சுற்றியும் வட்ட வடிவில் வளையம் போன்று குழாய் அமைப்பை நிறுவினார். குழாயின் உள்ளே மாசுபட்ட காற்றைச் செலுத்த முடியும்.
குழாயின் வெளிப்புறத்தில் நுண் துளைகள் இருக்கும். இந்த நுண் துளைகள் வழியே மாசுபட்ட காற்று வெளிவந்து, பயிர் விளையும் பகுதியில் காற்றில் கலந்துவிடும்.
இரண்டு வட்டப் பாத்திகளின் குழாய் வழியே டீசல் புகை, வேறு இரண்டு பாத்திகளில் ஓசோன் மாசு, அடுத்த இரண்டில் இரண்டும் கலந்த கலவை எனச் செலுத்தி ஆய்வு செய்தார். ஒப்பிட்டுப் பார்க்க இறுதி இரண்டு பாத்திகளில் எந்த மாசையும் செலுத்தவில்லை. இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து இந்த ஆய்வை நடத்தினார். ஒவ்வொரு வட்டப் பாத்திக்கும் எவ்வளவு பூச்சிகள் வருகின்றன என்பதைக் கணக்கிட்டார்.
வாகனங்களின் புகையால் சாலை ஓரத்தில் ஏற்படும் காற்று மாசு அளவே குழாய் வழியே உருவாக்கிய மாசுவின் அளவும். எனினும் எதிர்பார்த்ததைவிடக் காற்று மாசின் விளைவுகள் கடுமையாக இருந்தன. மகரந்தச் சேர்க்கையைக் கவனிப்பதில் பயிற்சி பெற்ற ஆய்வாளர்கள் வருகை தரும் பூச்சிகளின் எண்ணிக்கையை விடாமுயற்சியுடன் பதிவு செய்தனர். பூச்சிகளின் வருகையை டீசல், ஓசோன் மாசு ஆகியவை கடுமையாகப் பாதித்தன. காற்று மாசு இல்லாத பாத்தியில் வரும் பூச்சிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் பத்தில் ஒரு பங்கு பூச்சிகள்தாம் மாசு உள்ள பாத்திகளில் பூவை அடைந்தன.
ஒவ்வொரு பூவிலும் விதைப் பையை உற்றுநோக்கினர். மாசுக் காற்று உள்ள இடங்களில் பத்துப் பூக்களில் ஏழு பூக்கள்தாம் கருசூல் கொண்டு விதை உருவாகியிருந்தன. அதாவது காற்று மாசின் விளைவாகக் காய், கனிகளின் விளைச்சல் பாதிக்கப்படும் என்பதை இந்த ஆய்வு நிறுவியது.
பெங்களூருவில் உள்ள தேசிய உயிரியல் அறிவியல் மைய ஆய்வாளர் கீதா ஜி. திம்மேகவுடா காற்று மாசு தேனீக்கள்மீது ஏற்படுத்தும் பாதிப்புக் குறித்து இதற்கு முன்னரே ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார். காற்று மாசு மனிதர்களை மட்டுமல்ல, பூச்சிகளையும் அதன் தொடர்ச்சியாகத் தாவரங்களையும் பாதிக்கும் என இந்த ஆய்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
இன்று உணவுக்காக நாம் பயிரிடும் பத்துப் பயிர்களில் ஏழு தாவரங்கள் பூச்சிகளின் அயல் மகரந்தச் சேர்க்கையை நம்பியுள்ளன. பூச்சி மருந்துப் பயன்பாடு, பூச்சிகளின் வாழ்விடங்களான புதர்கள் அழிதல் எனப் பல்வேறு ஆபத்துகளைச் சந்திக்கும் பூச்சிகள், காற்று மாசு எனும் பெரும் தடையையும் சந்திக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கட்டுரையாளர், விஞ்ஞானி தொடர்புக்கு: tvv123@gmail.com
