

நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர், தொகுப்பு: தேவி நாச்சியப்பன், குழந்தைப் புத்தக நிலையம் வெளியீடு, தொடர்புக்கு : 9840710422
அழ. வள்ளியப்பா நூற்றாண்டுக் கொண்டாட்டங்களை ஒட்டி பல நூல்கள் வெளியாகியுள்ளன. குழந்தைக் கவிஞரின் மகள் தேவி நாச்சியப்பன் இந்த நூலைத் தொகுத்துள்ளார். இந்த நூலில் அழ. வள்ளியப்பாவுடன் பணிபுரிந்த, இணைந்து பயணித்த பல பிரபலங்கள் கட்டுரை எழுதியுள்ளனர். சுப. வீரபாண்டியன், எழுத்தாளர் பூவண்ணன், ‘கோகுலம்’ முன்னாள் ஆசிரியர் ஈ.எஸ். ஹரிஹரன் (ரேவதி), ‘கல்கி’ ராஜேந்திரன், ‘கல்கி’ சீதா ரவி, டாக்டர் கு. கணேசன், எழுத்தாளர் கமலவேலன், இயக்குநர் வசந்த் எஸ். சாய் உள்ளிட்ட பல பிரபலங்கள், எழுத்தாளர்கள் கட்டுரைகளை எழுதியுள்ளனர். குழந்தைக் கவிஞர் குறித்த நினைவைப் பலரும் உள்ளம் நெகிழப் பகிர்ந்துள்ளனர்.
மேற்கண்ட நூல் தொகுப்பு தவிர, ‘குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா’ எனும் சிறு வாழ்க்கை வரலாற்று நூலை தேவி நாச்சியப்பன் எழுதியுள்ளார். ஏகம் பதிப்பகம் (9444909194) வெளியீடாக இந்த நூல் வெளியாகியிருக்கிறது.
சிறுவர்களின் சிநேகிதர் அழ.வள்ளியப்பா 100,
ஆர்.வி. பதி, நிவேதிதா பதிப்பகம், தொடர்புக்கு: 89393 87276
அழ. வள்ளியப்பாவின் முதன்மை சீடராகக் கருதப்படும் பூவண்ணன், சாகித்ய அகாடமி வெளியிட்டுவரும் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ‘அழ. வள்ளியப்பா’ குறித்து எழுதியிருக்கிறார். அழ. வள்ளியப்பா குறித்து இதுவரை வெளியாகியுள்ள நூல்களில் இந்த நூல் குறிப்பிடத்தக்கது.
அழ. வள்ளியப்பா நூற்றாண்டை ஒட்டி ‘சிறுவர்களின் சிநேகிதர்’ நூலை ஆர்.வி.பதி எழுதியுள்ளார். இந்த நூலில் அழ. வள்ளியப்பாவைப் பற்றிய 100 தகவல்கள் சின்னச்சின்னப் பதிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. வள்ளியப்பாவின் குழந்தை இலக்கியக் கொள்கைகள், குழந்தைக் கவிஞர் பரம்பரை குறித்த தகவல்கள் குறிப்பிடத்தக்கவை.
மேற்கண்ட நூல் தவிர, ‘தேன்கூடு’ எனும் தலைப்பில் அழ. வள்ளியப்பாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 சிறார் பாடல்களை (தொகுப்பு: உமையவன்) நிவேதிதா பதிப்பகமே வெளியிட்டுள்ளது. அழ. வள்ளியப்பா நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் எழுத்தாளர் வி.ர. வசந்தன் நடத்திவரும் கதம்பம்' சிற்றிதழ் சிறப்பு மலரை வெளியிட்டிருக்கிறது.