Last Updated : 23 Feb, 2022 11:35 AM

 

Published : 23 Feb 2022 11:35 AM
Last Updated : 23 Feb 2022 11:35 AM

பெற்றோரும் ஆசிரியர்களும் புதிய வாசல்களைத் திறக்க வேண்டும்! - சிறார் எழுத்தாளர் உதயசங்கர் நேர்காணல்

சிறார் இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர் உதயசங்கர். குழந்தைகளுக்கு கதை, நாவல், பாடல் உள்ளிட்ட 20 நேரடி நூல்கள், மலையாளச் சிறார் நூல்களின் 60-க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் எனச் சிறார் இலக்கியம் சார்ந்து நீண்ட காலமாக இயங்கிவருபவர். அவர் எழுதிய ‘மாயக்கண்ணாடி’ நூல் பல விருதுகளைப் பெற்றுள்ளது. தற்காலச் சிறார் இலக்கியம் குறித்து அவரிடம் கலந்துரையாடியதில் இருந்து:

தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் இன்றைய நிலை எப்படியிருக்கிறது?

நவீனத் தமிழ் சிறார் இலக்கியம் ஆரோக்கியமான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இதுவரை இருந்த தேக்கநிலை தகர்த்து, புதிய பாய்ச்சல் தொடங்கியிருக்கிறது. புதிய முயற்சிகள், புதிய கருப்பொருள்கள் தமிழில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குழந்தைகள் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனாலும் இவையெல்லாம் ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே நடைபெற்றுவருகின்றன. பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பரவலாக்கப்பட வேண்டியுள்ளது. குழந்தைகளுக்குப் புத்தகங்களை வாங்கிக்கொடுக்கும் பழக்கம் விரிவடைய வேண்டியிருக்கிறது.

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் எழுதப்படுகின்றனவா, வாசிக்க ஏற்ற மொழிநடையில் எழுதப்படுகிறதா?

சிறார் இலக்கியமென்றால் விலங்குகள், பறவைகளை வைத்துக்கொண்டு பொதுவான நீதிக் கதைகள் எழுதினால் போதும் என்ற மனோபாவம் இப்போதும் இருக்கிறது. ஆனால், சமூகத்தில் தற்போது நிலவிவரும் மதிப்பீடுகளைப் பற்றிய பார்வையை, உரையாடலை, விவாதத்தை குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை நவீனச் சிறார் இலக்கியம் கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழல், அறிவியல், இயற்கை, பாலின சமத்துவம், அரசியல், சாதி-மதப் பாகுபாடு உள்ளிட்டவற்றைக் குறித்துக் குழந்தைகளிடம் அறிமுகப்படுத்துகிற படைப்புகள், அவர்களை ஈர்க்கும்வகையில் கலாப்பூர்வமாக எழுதப்பட வேண்டும். அந்த வகையில் போதாமைகள் இருக்கின்றன.

குழந்தைகள் வாசிப்பதற்கு ஏற்ற மொழி நடையில் எல்லா நூல்களும் எழுதப்படவில்லை. சிறார் இலக்கிய மொழி குறித்த விவாதங்களோ உரையாடலோ தமிழில் உருவாகவில்லை. அதனால் பல படைப்புகள் வாக்கியப் பிழை, எழுத்துப் பிழை, கருத்துப் பிழை, தட்டையான தன்மையுடன் அமைந்திருக்கின்றன. சிறார் எழுத்தாளர்கள் கவனமாக எழுத வேண்டிய காலம் இது. ஓர் எதிர்காலச் சமூகத்திற்காக எழுதுகிறோம் என்கிற பொறுப்புணர்வுடன் அனைவரும் எழுத வேண்டும்.

எப்படிப்பட்ட சிறார் நூல்கள் வர வேண்டுமென இன்றைய குழந்தைகள் விரும்புகிறார்கள்?

படங்கள், வித்தியாசமான வடிவமைப்பு, நகைச்சுவை, மிகைப்புனைவு (ஃபேண்டஸி), சாகசம், துப்பறிதல், சுவாரசியம், புதிய தகவல்கள் ஆகிய வகைகளில் குழந்தைகள் விரும்புகிறார்கள். அவர்களின் வயதுக்கேற்றபடி விருப்பங்கள் மாறும். நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் இந்த வகைமைகளில் எழுதவும் வாசகர்களைக் கண்டறியவும் மெனக்கெட வேண்டும்.

முன்னோடி சிறார் எழுத்தாளர்களில் வாசிக்கப்பட வேண்டியவர்கள் யார்?

நூற்றாண்டு காணும் சிறார் இலக்கிய மேதை அழ. வள்ளியப்பா, அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்திருக்கிற வாண்டுமாமா, சிறார் கலைக்களஞ்சிய முதன்மை ஆசிரியர் பெ. தூரன், ‘கோகுலம்’ முன்னாள் ஆசிரியர் ரேவதி, தம்பி சீனிவாசன் ஆகியோரின் படைப்புகளை அவசியம் வாசிக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பு நூல்களின் வழியாக மற்ற மொழிகளில் நடந்துள்ள பரிசோதனைகள் தமிழில் வந்துள்ளனவா?

கடந்த இருபது வருடங்களாக மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. படைப்புகளின் வகைமை, பார்வை, கருப்பொருள், வெளிப்பாடு ஆகிய அம்சங்களில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கின்றன. யெஸ். பாலபாரதியின் ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’, விழியனின் ‘மலைப்பூ', விஷ்ணுபுரம் சரவணனின் ‘நீலப்பூ’, உதயசங்கரின் ‘ஆதனின் பொம்மை’, ஆயிஷா நடராசனின் ‘டார்வின் ஸ்கூல்’, யூமா வாசுகியின் ‘தூய கண்ணீர்' போன்ற நூல்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

சிறார் வாசிப்பில் பெற்றோர், ஆசிரியர்களது பங்கு என்ன?

பெற்றோர்களும் ஆசிரியர்களுமே, சிறார் வாசிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். பள்ளிப்பாடங்களைத் தாண்டிய வாசிப்பை நோக்கிச் சிறார்களை விரல்பிடித்து அழைத்துச் செல்பவர்கள் அவர்கள்தாம். வீட்டில் குழந்தைகளுடன் அமர்ந்து பெற்றோர் வாசிக்க வேண்டும். குழந்தைகளை வசீகரிக்கும் புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். இன்னமும் தெனாலி ராமன், பீர்பால், பஞ்ச தந்திரக் கதைகள் என்று காலாவதியான கதைகளை வாங்கிக் கொடுப்பதாலோ, நீதி சொல்வதாலோ பயனில்லை. கால மாற்றத்துக்கேற்ப புதிய மதிப்பீடுகளை அறிமுகப்படுத்தும் புத்தகங்களை வாங்கிக்கொடுக்க வேண்டும்.

பள்ளியில் ஒவ்வொரு குழந்தைக்கும் உத்வேகம் தருபவர் ஆசிரியரே. நவீனச் சிறார் இலக்கிய நூல்களை வாசித்து நேரடியாகவோ பள்ளி நூலகம் மூலமாகவோ குழந்தைகளுக்கு அவர் அறிமுகப்படுத்த வேண்டும். ஆசிரியர்களும் பெற்றோரும் குழந்தைகளை நூலகங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளின் மனவளமே எதிர்கால சமூகத்தைத் தீர்மானிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x