Published : 20 Apr 2016 11:48 AM
Last Updated : 20 Apr 2016 11:48 AM

நாட்டுக்கொரு பாட்டு 2 - அவசரத்தில் கிடைத்த தேசிய கீதம்!

இந்தியாவிலிருந்து பிரிந்துசென்ற பாகிஸ்தான் நாட்டு தேசிய கீத வரலாற்றை இந்த வாரம் பார்ப்போமா?

‘பாகிஸ்தான் எப்போது விடுதலை பெற்றது?

‘நம்ம நாடு, 1947 ஆகஸ்ட் 15.

அதுக்கு முந்திய நாள் அவங்களுக்கு.

அதாவது, 1947 ஆகஸ்ட் 14.'

ரொம்ப சரி. ஆனால், ஒரு செய்தி தெரியுமா...? சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே, நமக்கு தேசிய கீதம் கிடைத்துவிட்டது. ஆனால், பாகிஸ்தானுக்கு அப்படி இல்லை.

சுதந்திரத்துக்குப் பிறகு, ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் கழித்துதான் அவர்களுக்கு தேசிய கீதம் கிடைத்தது.

பரிசு அறிவித்து, பல பாடல்களை ஆராய்ந்து பார்த்து, தேடித் தேடித் தேடித் தேர்ந்தெடுக்கப்பட்டது - பாகிஸ்தானின் தேசிய கீதம்.

யார் தருவார்?

1948-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பாகிஸ்தான் அரசு ஒரு விளம்பரம் வெளியிட்டது.

‘நம் நாட்டுக்கான தேசிய கீதம் எழுதி அனுப்புங்கள்.

சிறந்த படைப்புக்குச் சன்மானம் உண்டு'.

1948 டிசம்பரில், ‘தேசிய கீத கமிட்டி' அமைக்கப்பட்டது. சிறந்த பாடல், அதற்கான சிறந்த இசைக் கோர்வையைத் தேர்ந்து எடுப்பது, தகவல் செயலர் ஷேக் முகமது இக்ரம் தலைமையிலான தேர்வுக் கமிட்டியின் பணி என அறிவிக்கப்பட்டது. பல பாடல்கள் பரிசீலிக்கப்பட்டன. எதிலும் முழுத் திருப்தி இல்லை.

சீக்கிரம்...சீக்கிரம்...

கமிட்டியின் அப்போதைய தலைவர் ஃபஸ்லூர் ரஹ்மான், பல கவிஞர்கள், இசை அமைப்பாளர்களைத் தொடர்புகொண்டு, பாடல், இசை வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஊஹூம்.... எதுவும் சரியாக இல்லை.

கமிட்டியில் உறுப்பினராக இருந்த அஹமது சாக்லா அமைத்திருந்த இசைக் கோவை நன்றாக இருந்தது. கமிட்டியும் அதை ஏற்றுக்கொண்டது.

முதலில் இசை

ஈரானின் ஷா வருகையின் போது, சொற்கள் இல்லாமல், இசையாக மட்டும் 1950-ம் ஆண்டு மார்ச் முதல் நாளன்று, முதல் முறையாக, பாகிஸ்தானியக் கடற்படை இசைக் குழுவால் அந்நாட்டு கீதம் முழக்கப்பட்டது.

என்ன பாட்டு பாட...?

1950-ம் ஆண்டு ஜனவரியில் சுதந்திர பாகிஸ்தானுக்கு வந்த முதல் வெளிநாட்டு முக்கியஸ்தர் என்ற பெருமையைப் பெற்றார் அன்றைய இந்தோனேஷிய அதிபர் சுகர்னோ. ஆனால், அப்போது இசைக்கப்படுவதற்கு பாகிஸ்தானுக்கு என்று தேசிய கீதம் இல்லை!

தொடர்ந்து அதே ஆண்டு, ஈரான் நாட்டு ஷா பாகிஸ்தானுக்கு வந்தார். தேசிய கீதம் அவசரமாகத் தேவை என அறிவிக்கப்பட்டது.

கிடைத்தது கீதம்!

இதன் பிறகு இந்த இசைக் கோவையை, தேர்வுக் கமிட்டி, பல கவிஞர்களுக்கும் அனுப்பி வைத்தது. அதற்குப் பொருத்தமாகப் பாடல் எழுதித் தரும்படி கேட்டுக் கொண்டது. கடைசியாக, ஹஃபீஸ் ஜலந்தரி இயற்றிய பாடலை கமிட்டி ஏற்றுக்கொண்டது.

1954-ம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று பாகிஸ்தான் வானொலி, முதன் முறையாக இதனை ஒலிபரப்பியது.

மூன்று நாட்கள் கழித்து 1954-ம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று பாகிஸ்தானிய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், இந்தப் பாடலை தேசிய கீதமாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.

மூன்று பத்திகள் கொண்ட இந்தக் கீதம்.

இசைக்க ஆகும் நேரம் - 80 வினாடிகள்.

சரி..., ஏழு ஆண்டு தேடலுக்குப் பின் தேர்வான தேசிய கீதம் என்னதான் சொல்கிறது?

அஹமது சாக்லா இசை அமைத்து ஹஃபீஸ் ஜலந்தரி இயற்றிய பாகிஸ்தானின் தேசிய கீதம் இப்படி ஒலிக்கும்:

“பாக் சர் ஜமீன் ஷாத் பாத்

கிஷ்வரே ஹசீன் ஷாத் பாத்

துநிசானே அஸ்மி ஆலி ஷான்

அர்ஸே பாகிஸ்தான்

மர்கஸே யகீன் ஷாத் பாத்.

பாக் சர் ஜமீன் கா நிஜாம்

குவ்வதே அகுவ்வதே அவாம்

கௌம் முல்க் சல்தனத்

பாயிந்தா தபிந்தா பாத்!

ஷாத் பாத் மஞ்சிலே முராத்!

பெர்ச்சமே சிதாரா ஓ ஹிலால்

ரஹ்பரே தரக்கி ஓ கமால்

தர்ஜுமானே மாஸி, ஷான் இஹால்,

ஜானே இஸ்டிக்பா

சாயா ஏ குதா ஏ ஸூல் ஜலால்”.

இனி, இப்பாடலின் பொருளைப் பார்ப்போமா...?

தமிழாக்கம்:

இந்தத் தூய நிலம்

என்றும் மகிழ்வுடன் இருக்கட்டும்.

இந்த அழகான நிலம்

என்றும் மகிழ்வுடன் இருக்கட்டும்.

மனத் திண்மையின் சின்னம் நீ,

ஓ! பாகிஸ்தான்!

தளர்வுறா உறுதியின் மையம்

என்றும் மகிழ்வுடன் இருக்கட்டும்.

சாமானியர்களின் சகோதரத்துவ வலிமையே

இந்தத் தூய நிலத்தின் நடைமுறை.

இந்த தேசம் இந்த நாடு இந்த ராஜ்யம்

என்றும் மகிழ்வுடன் இருக்கட்டும்.

இதயத்தோடு இணைந்த நம் இலக்கு

ஆசீர்வதிக்கப்படட்டும்.

பிறை நட்சத்திரக் கொடி -

வளர்ச்சிக்கும் முழுமைக்கும் வழிகாட்டி;

கடந்த காலப் பிரதிபலிப்பு;

நிகழ் காலப் பெருமிதம்;

எதிர் கால வாழ்க்கை.

எல்லாம் வல்ல இறைவனின் நிழல்!

(தேசிய கீதங்கள் ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x