

வீடு இல்லாமல் தெருவில் தூங்கிக் கொண்டிருக்கும் யாரைவாயது பார்த்தால் நாம் என்ன செய்வோம்? பார்த்தபடியே சென்றுவிடுவோமில்லையா? ஆனால், அமெரிக்காவில் வசிக்கும் ஹைலி போர்ட் என்ற ஒன்பது வயது சிறுமி, அப்படிப் பார்த்துவிட்டு போகும் ரகமில்லை.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் நகரில் வசிக்கிறாள் இந்தச் சிறுமி. ஒரு நாள் தன் அம்மா, அப்பாவுடன் கடைக்குப் போகும்போது வீடில்லாத ஒருவர் தெருவோரம் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். அந்தக் காட்சி ஹைலியின் மனதைப் பாதித்தது. நாம் பாதுகாப்பான வீட்டில் தூங்கும்போது, அந்த அங்கிள் மட்டும் வீடில்லாமல் குளிரிலும் வெயிலிலும் வாடுகிறாரே என நினைத்து வருந்தினாள்.
ஹைலியின் தாத்தா ஒரு கட்டிட ஒப்பந்தகாரர். தாத்தா வீடுகள் உருவாக்குவதை ஹைலி அடிக்கடிப் பார்த்திருக்கிறாள். வீடில்லாத அந்த மனிதருக்கு நாமே ஏன் ஒரு வீட்டைக் கட்டித்தரக் கூடாது என முடிவெடுத்தாள். வீட்டில் சேர்த்து வைத்த காசைக் கொண்டு பழைய மரப் பலகைகளைக் கடைகளில் வாங்கினாள். தன் குட்டித் தங்கையைத் துணைக்குக் கூட்டிக்கொண்டு வீட்டுத் தோட்டத்தில் வேலையைத் தொடங்கினாள்.
இதைக் கவனித்த ஹைலியின் அம்மா, அவளுக்குக் காசு கொடுத்து உதவினார். பிறகென்ன? வேலை மளமளவென நடந்தது. ஆனால், ஹைலியின் அப்பா ஒரு கட்டளை போட்டார். வீடு கட்டும் வேலையால் படிப்பு கெட்டுவிடக் கூடாது என்று கூறிவிட்டார். அதனால் தினமும் ஒரு மணி நேரம் மட்டும்தான் வீடு கட்ட வேலை செய்ய வேண்டும் என்றும் சொல்லிவிட்டார். அதனால் அந்த வீட்டைக் கட்டி முடிக்க சில மாதங்கள் ஆயின.
ஹைலி கட்டிய இந்த வீடு 32 சதுர அடி பரப்பளவு கொண்டது. வீட்டை நகர்த்திக்கொள்ள வசதியாக சக்கரங்களையும் ஹைலி பொருத்தியுள்ளார். குட்டி ஜன்னல், கரண்டுக்காகச் சூரிய மின்சக்தி பேனலை வைத்து, வீட்டை உருவாக்கியிருக்கிறாள் இந்தச் சிறுமி.
இப்போது வீடு இல்லாதவர்களுக்குக் கட்டித் தர நிதியும் திரட்டிவருகிறாள். உணவு தானியங்களைப் பயிரிட்டு அவற்றை ஏழைகளுக்குக் கொடுக்க ஹைலி முடிவு செய்துள்ளார். சிறு குழந்தைகளுக்கு வழிகாட்டியாகச் செயல்படுவதாக அமெரிக்காவில் ஹைலிக்குப் பாராட்டு குவிந்தவண்ணம் உள்ளது.