Published : 02 Feb 2022 11:55 AM
Last Updated : 02 Feb 2022 11:55 AM

புதிய கண்டுபிடிப்புகள்: மின் அதிர்ச்சியில் வளரும் குருத்தெலும்பு

தன் டக் நுயென்

அண்மையில் இந்தியாவில் நடத்தப்பட்ட மாதிரி கணக்கெடுப்பில் 28.7 சதவீதத்தினர் மூட்டுவலியால் அவதிப்படுவதாகத் தெரியவந்துள்ளது. முழங்கால் மூட்டுப் பகுதியில் மென்மையான குருத்தெலும்பு (cartilage) உள்ளது. சவ்வு போன்ற இந்தக் குருத்தெலும்பு தேயும்போது அல்லது இறுக்கமாக மாறும்போது மூட்டுவலி ஏற்படுகிறது.

தொடை எலும்புக்கும் கால் எலும்புக்கும் இடையில் கீழ் மூட்டு உள்ளது. இந்த மூட்டில் உள்ள குருத்தெலும்புதான் இரண்டு எலும்புகளையும் நெகிழ்வாகப் பிணைக்கிறது. புரத நார்களாலும் வளைந்தால் மீண்டும் இயல்பு நிலையைப் பெறும் நெகிழும் நார்களாலும் (elastin) ஆன சிறப்புத் திசுதான் குருத்தெலும்பு. இதற்கு ரப்பர் போல வளையக்கூடிய, நெகிழக்கூடிய தன்மை உண்டு.

மூப்படைவதை எப்படித் தடுக்க முடியாதோ அப்படித்தான் மூட்டுத் தேய்மானத்தையும் தடுக்க முடியாது. வயதாகும்போது குருத்தெலும்பு தேய்மானமாகிக்கொண்டே போகும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் தேய்மானம் அடைந்துவிட்டால், ஆர்த்தரைட்டிஸ் எனப்படும் முடக்குவாத நோயாக மாறிவிடும்.

மூட்டுவலிக்கு முதுமை தவிர உடல் பருமனும் முக்கியக் காரணம். மேலும், சில நோய்கள் காரணமாகவும் முடக்குவாதம் ஏற்படலாம். விபத்தில் மூட்டுச் சவ்வு கிழியலாம்.

முடக்குவாதம் முற்றிவிட்டால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைதான் இன்று ஒரே வழி. பழுதுபட்ட பகுதியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கி, உடலின் வேறு பகுதியிலிருந்து அல்லது கொடையாளரிடமிருந்து பெறப்பட்ட குருத்தெலும்பைப் பொருத்துகிறார்கள். இதில் பல பாதகங்கள் உண்டு. உடலின் ஒரு பகுதியிலிருந்து குருத்தெலும்பை எடுத்துவிட்டால் அங்கே சிக்கல் ஏற்படும். கொடையாளர்கள் எண்ணிக்கையும் குறைவு. பல நேரம் ஒருவரின் திசு இன்னொருவருக்குப் பொருந்தாமலும் போய்விடும்.

ஆரோக்கியமான குருத் தெலும்பை மறுபடி துளிர்க்கச் செய்துவிட்டால், பட்ட மரம் பச்சை மரம் ஆவது போல மூட்டும் புதிதாகமாறிவிடும். கனெக்டிகட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வியட்நாமிய அமெரிக்கர் தன் டக் நுயென் பல ஆண்டுகளாகக் குருத்தெலும்பு மீளுருவாக்க ஆய்வுகளில் ஈடுபட்டுவருகிறார். மின் அதிர்வுகள் குருத்தெலும்பை மீளுருவாக்கம் செய்யும் என இவரது ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

தன் டக் நுயென்

உடல் திசுக்களின் உள்ளே மட்கும் தன்மை கொண்ட நானோ ஃபைபர் பாலிமர்களைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்துவருகின்றனர். இந்த நானோ பொருள் மீது அழுத்தம் கொடுத்தால், சிறிதளவு மின்னோட்டம் வெளிப்படும். வலு குறைந்த மின்சாரம் என்றாலும் குருத்தெலும்பு செல்களை ஈர்க்கும். குருத்தெலும்பு செல்கள் குவிய, குவிய அங்கே புதிய குருத்தெலும்பு மீண்டும் உருவாகும். இது அசல் குருத்தெலும்பு போலவே இருக்கும்.

மூட்டுத் தேய்ந்த முயலின் கால்களில் அறுவை சிகிச்சை செய்து, நானோ பொருளை வைத்து பரிசோதனை மேற்கொண்டார் நுயென். முயலின் கால் மூட்டுகளில் மீண்டும் குருத்தெலும்பு வளர்ந்தது. மனிதனைப் போன்ற எடையுடைய பெரிய விலங்குகளில் இந்த ஆய்வை மேற்கொண்டால்தான் சிகிச்சையின் பலன் குறித்துத் துல்லியமாக முடிவுக்கு வர முடியும் என்கிறார் நுயென்.

கட்டுரையாளர், விஞ்ஞானி தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x