

சிறுவர் நாடகக் களஞ்சியம்
l மு. முருகேஷ், சாகித்திய அகாதெமி, தொடர்புக்கு: 044 2419 1683
கடந்த நூற்றாண்டின் இறுதி வரை வானொலி, பள்ளி ஆண்டுவிழா, சிறார் மன்றங்கள் எனப் பல வகைகளில் சிறார் நாடகங்கள் பரவலாக நடத்தப்பட்டுவந்தன. பல சிறார் எழுத்தாளர்கள் எழுதிய நாடகங்கள் இவற்றில் நடிக்கப்பட்டன. இன்றைக்குத் தொழில்நுட்ப வசதிகளால் நாடகத்தைவிட எளிமையான காட்சிக் கலைகள் கவனம் பெற்றுவிட்டன. அதே நேரம் இணையவழியிலும் சில சிறார் நாடக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் புத்தகம் வெளியாகியுள்ளது.
மந்திரச்சந்திப்பு
l யெஸ். பாலபாரதி, புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044 2433 2924
ஆசிரியர் ஏற்கெனவே எழுதிய சிறார் நாவல்களான ‘ஆமை காட்டிய அற்புத உலகம்’, ‘புதையல் டைரி’, ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ உள்ளிட்ட நாவல்களின் கதாபாத்திரங்கள் சந்தித்துக்கொண்டால் என்ன நடக்கும் என்கிற சுவாரசியமான கதை. இந்தக் கதையின் ஊடாக ‘கல்வி’ கோபாலகிருஷ்ணன், வாண்டுமாமா, பேராசிரியர் சிவதாஸ் உள்ளிட்டோர் உருவாக்கிய பிரபலமான கதாபாத்திரங்களும் வந்துசெல்கிறார்கள். இப்படி இவர்கள் அனைவரும் சந்தித்தால் ஒரே அமர்க்களமாகத்தானே இருக்கும்.
புலிக்குகை மர்மம்
l உதயசங்கர், வானம் பதிப்பகம், தொடர்புக்கு: 91765 49991
கோவில்பட்டியில் புலிக்குகை என்றொரு குகை, குன்றுப் பகுதியில் இருக்கிறது. அங்கே மர்மமான நபர்கள் நடமாடுகிறார்கள். கேப்டன் பாலுவின் சிறார் குழு கிரிக்கெட் விளையாடும்போது மாரி என்கிற சிறுவன் காணாமல் போகிறான். ஊரெங்கும் தேடியும் அவனைக் கண்டறிய முடியவில்லை. இதற்கிடையே ஊர் மக்கள் சென்றிராத புலிக்குகைக்குள் பாலுவும் நண்பர்களும் தைரியமாகப் போகிறார்கள். உள்ளே மாரியைத் தவிர வேறு எவற்றையெல்லாம் அவர்கள் கண்டறிந்தார்கள் என்பது இளையோர் சாகச நாவலாக விரிந்திருக்கிறது.
தற்கால சிறார் கதைகள்
l உமையவன், பயில் பதிப்பகம், தொடர்புக்கு: 72000 50073
ஆயிஷா இரா. நடராசன், கொ.மா.கோ. இளங்கோ, உதயசங்கர், மா. கமலவேலன், சுகுமாரன், பாவண்ணன், விழியன், விஷ்ணுபுரம் சரவணன் உள்ளிட்ட 31 சிறார் எழுத்தாளர்கள் எழுதிய புதிய சிறார் கதைகளின் தொகுப்பு. சிறார் எழுத்தாளர்களின் கதைகள் தொடர்ச்சியாகத் தொகுக்கப்படாத நிலையில் இப்புத்தகம் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட காலம், மையக்கரு அடிப்படையிலான தொகுப்பு முயற்சிகள் எதிர்காலத்திலும் நடைபெற வேண்டும்.
மலைப்பூ
l விழியன், புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044 2433 2424
மாஞ்சாலை என்கிற மலை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி லட்சுமி, மிகுந்த சிரமங்களுக்கு இடையே பள்ளி சென்று படிக்கிறாள். மாணவர்களே அறிவியல் முறைப்படி ஆய்வுசெய்வதற்கான ஒரு திட்டத்தில் அவள் பங்கேற்கிறாள். அவர்களுடைய ஆய்வுத்திட்டம் மாவட்ட அளவிலும், பிறகு மாநில அளவிலும் தேர்வாகிறது. தேசிய அளவில் தேர்வாகும்போது, ஆய்வுத்திட்டத்தைச் சமர்ப்பிக்க லட்சுமி, காசிக்கு செல்கிறாள். அங்கே, நாம் எல்லோரும் அவசியம் யோசிக்க வேண்டிய 2 முக்கியக் கேள்விகளை பிரதமரிடம் கேட்கிறாள் லட்சுமி.
அறிவியல் தேசம்
l ஆயிஷா இரா. நடராசன், அறிவியல் வெளியீடு, தொடர்புக்கு: 75983 40424
இந்தியாவின் அறிவியல் சாதனைகள் என்ன? இயற்பியல், வானியல், தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம் என பல்வேறு அறிவியல் பிரிவுகளில் இந்தியா நிகழ்த்தியுள்ள சாதனைகள் என்னென்ன? இவை அனைத்தையும் ஒரு ரயில் பயணத்தில் வெவ்வேறு பெட்டிகளுக்குச் செல்வதுபோல் படித்தால் எப்படியிருக்கும். அதுவே நூலாக விரிந்துள்ளது.
குட்டித் தோசை
l ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு, ராஜேஸ் கனகராஜன், தேசிங், பஞ்சு மிட்டாய் வெளியீடு, தொடர்புக்கு: 97317 36363
குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ்ந்த பாடல்கள் புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அப்படி மூன்று பேர் எழுதிய 33 பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அறிவியல், சமத்துவ உணர்வு, விளையாட்டு, கற்பனை எனப் பல தலைப்புகளில் குழந்தைகளே வாசிக்கக்கூடிய வகையில் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. குழந்தைகள் பாடி ஆடி மகிழலாம்.
உருவு கண்டு
l வெற்றிச்செழியன், மக்கள் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை, தொடர்புக்கு: 98409 77343
திருக்குறள் தெரியாத தமிழ்க் குழந்தை களோ, மாணவர்களோ இருக்க முடியாது. திருக்குறளை வெறும் மனப்பாடப் பகுதியாக மட்டும் கருதாமல், திருக்குறள் கூறும் கருத்துகளை நாடகம் வழியாக முன்வைக்கிறது இந்த நூல். படித்துப் பார்ப்பது மட்டுமல்லாமல், நடித்துக் காட்டவும் இந்நூல் உதவும்.
மலைபூதம் வாய்பிளந்த மர்மம்
l கொ.மா.கோ. இளங்கோ, புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044 2433 2924
ஆசிரியர் எழுதிய ‘ஜிமாவின் கைபேசி’ நாவலில் வரும் ஜிமா இந்த நூலிலும் இரண்டு கதைகளில் வந்துசெல்கிறாள். தலைப்புக் கதையான ‘மலைபூதம் வாய்பிளந்த மர்மம்’, ‘உச்சிமலையில் ஒளிரும் ரத்தினம்’ ஆகிய கதைகள் அறிவியல் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. ஆசிரியர் பணிபுரிந்துவரும் ஆப்பிரிக்க கண்டத்தின் ஏழைக் குழந்தைகளின் நிலையையும் ஒரு கதை வழியாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.
புலிப்பல்லும் நரிக்கொம்பும்
l எஸ். அபிநயா, வானம் பதிப்பகம், தொடர்புக்கு: 91765 49991
நீங்கள் நன்கு அறிந்த சிறார் எழுத்தாளர் எஸ். அபிநயா, பள்ளியில் பயிலும் காலத்திலேயே எழுதிவருபவர். ‘மாயா பஜா’ரில் நீங்கள் வாசித்த சுவாரசியமான பல கதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. குழந்தைகளுக்கு எழுதும் பெரியவர்கள் விலங்குக் கதாபாத்திரங்களை அறிவுரை சொல்லப் பயன்படுத்துவதற்கும், விலங்குக் கதாபாத்திரங்களை அபிநயா படைத்துள்ள முறைக்கும் நிறைய வேறுபாடுகளை உணர முடிகிறது.