Last Updated : 19 Jan, 2022 11:00 AM

 

Published : 19 Jan 2022 11:00 AM
Last Updated : 19 Jan 2022 11:00 AM

கதை: மூங்கில் காட்டில் யானைகள்!

நீண்ட நாட்களாகத் திட்டமிட்ட மலைப் பயணம் இன்றுதான் நிறைவேறியது. கோதையின் அப்பா, தனக்கிருந்த பணிகளை ஒத்திவைத்துவிட்டு, மகளை அழைத்துக்கொண்டு செண்பக மலைக்குச் சென்றார்.

காரில் நான்கு மணிநேரப் பயணம். மலையின் கொண்டை ஊசி வளைவுகளில் ஏறும்போது கோதை பயந்தாள். ஒவ்வொரு முறையும் கண்களை மூடி அப்பா மடியில் சாய்ந்துகொண்டாள்.

திடீரென்று போக்குவரத்து தடைபட்டது.

மலைப்பாதையில் வாகனங்கள் பழுதானால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக வேண்டும். நாள்கணக்கில் வாகனங்கள் நகராமல் நின்று போகும். பயணிகள், பரிதாபமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

காருக்குள் உட்கார்ந்திருந்த கோதை பதறினாள். சத்தம் கேட்டுத் திரும்பினாள். ‘குய்யோ முறையோ’ என்று அலறி ஓடினார்கள். என்ன குழப்பமோ தெரியவில்லையே?

கோதை மெல்லக் கண்ணாடியை இறக்கிப் பார்த்தபோது, எதிரில் சுமார் முப்பது யானைகள் காட்டின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குக் கடந்து சென்றன. ஒரு பெரிய யானை, தன் தலையால் குட்டியானையின் முதுகில் முட்டி சாலையை விரைந்து கடக்கும்படி கட்டளை இட்டது. பிறகு எல்லா யானைகளும் காட்டின் தெற்குப் பகுதிக்குள் நுழைந்தன.

சிறு வயதில் கோதை யானைகள் கார்ட்டூன் அதிகம் பார்ப்பாள். ‘யானை கதைகள்’ விரும்பிக் கேட்பாள். ‘மோரா’ யானை கதை அவளுக்கு மிகவும் பிடிக்கும். குட்டியானையின் சாகசங்களை ரசிப்பாள்.

கிராமத்தார் சிலர் ஆளுக்கோர் ஈட்டி, அரிவாள், மரக்கோடரி போன்றவற்றை எடுத்துக்கொண்டு யானைகளுக்குப் பின்னால் ஓடினார்கள். கோதை பதறினாள். யானைகளுக்கு ஆபத்து என்று நினைத்தாள். “அப்பா, அவங்க எல்லாரையும் காட்டுக்குள்ள போகாம தடுத்து நிறுத்துங்கப்பா” என்று கண் கலங்கினாள்.

அப்பா பதில் சொல்வதற்குள் ஏலத்தோட்டத்தைக் கவனித்துக்கொள்ளும் வேலன் மாமா வந்தார்.

“வாகன நெரிசலால் அடிக்கடி மலைப்பாதையில போக்குவரத்து தடைபடுது. அதனால நானே இறங்கி வந்துட்டேன். நாமெல்லாம் நடந்தே மலைக்குப் போகலாமே... இன்னும் கொஞ்ச தொலைவுதான்” என்றார் வேலன்.

வேலன் மாமாவுடன் நீலியும் வந்திருந்தாள். கோதைக்கு ஏற்கெனவே அறிமுகமானவள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அப்பாவுடன் நகருக்கு வருவாள்.

வேலன் மாமா கோதை அப்பாவிடம் எஸ்டேட் வரவு செலவு கணக்குகளைக் காண்பிப்பார். சிறுமிகள் இருவரும் விளையாட்டில் கவனம் செலுத்துவார்கள். கோதை தந்த பரிசுப் பொருட்களை எஸ்டேட் குடியிருப்பில் நீலி பத்திரமாக வைத்திருக்கிறாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்.

“நீலி, நெறைய பேரு யானைகளைத் துரத்திக்கிட்டு ஓடுறாங்க. உங்க அப்பாட்ட சொல்லி அவங்கள போலீஸ்ல பிடிச்சுத் தரணும்” என்ற கோதையின் குரல் நடுங்கியது.

அதே நேரத்தில் காட்டுக்குள் இருந்து கேட்ட கூச்சல், அவர்களின் கவனத்தைத் திசை திருப்பியது. கோதைக்கு வியர்த்துக் கொட்டியது. உடலில் படபடப்பு கூடியது. இன்றைக்கு ஏதோ நடக்கப்போகிறது.

அதுவரை அமைதி காத்த நீலி, “மலைக்குத் தெற்கில் மூங்கில் காடு இருக்கு. மூங்கில்னா யானைகள் விரும்பிச் சாப்பிடும். ஆனாலும் யானைகள் இப்போ அங்க போறது ஆபத்துல முடியும்” என்றாள்.

“நீலி, புரியும்படியாதான் சொல்லேன்...”

அப்பாவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் நீலி. “ஒனக்குத் தெரிஞ்சதைச் சொல்லுடா” என்று ஊக்குவித்தார் வேலன் மாமா.

“மூங்கில் காடுகளுக்கு நுழையறதுக்கு முன்னால, உயரமா காட்டுப்புல் வளர்ந்த எடத்தைக் கடக்கணும். கோடையில் அந்தப் புல் சுள்ளுன்னு அடிக்கிற வெயிலுக்குச் சீக்கிரமே தீப்பிடிச்சிக்கும்.”

“ஐயோ... தீயா? எங்கே தீ?” என்று பதற்றம் தணியாமல் கேட்டாள் கோதை.

அவர்கள் அனைவரும் குடியிருப்பை நெருங்கிய போது, வேலன் மாமா விசில் சத்தம் எழுப்பினார். பத்து நிமிடங்களில் ஆண்கள் கடப்பாறை, மண்வெட்டி போன்றவற்றை எடுத்துக்கொண்டு ஓடிவந்தார்கள்.

கோதைக்கு உதறல் எடுத்தது. நீலி அவளைத் தேற்றினாள். தொலைவில் கை நீட்டிக் காண்பித்தாள்.

“அழாதே கோதை... எல்லாம் நல்லதே நடக்கும். யானைகள் இப்போ மூங்கில் காட்டுக்குள் புகுந்திருக்கும். யானைகளைக் காப்பாற்றத்தான் இந்தச் சனங்க ஓடுறாங்க. அதுதான் உண்மை” என்றாள் நீலி.

“எனக்கொண்ணும் புரியல...”

அவளை ஆசுவாசப்படுத்திய நீலி, “மலைவாழ் மக்கள், ‘காட்டுத் தீ’ பரவலைத் தடுக்கத்தான் ஓடுறாங்க. மூங்கில் காடுகளை ஒட்டிய புல்லையும் செடிகளையும் அஞ்சு மீட்டர் அகலத்துக்கு வெட்டி அகற்றப் போறாங்க. அதனால மலையெல்லாம் தீ பரவாம தடுக்கலாம். செடி கொடிகள் வெட்டின பகுதி, தீ பரவலைத் தடுத்து, பாதுகாப்பு வேலியைப்போல மாறும். அதைத் ‘தீ தடுப்புக் கோடு’ன்னு சொல்வாங்க” என்றாள்.

விளக்கத்தைக் கேட்ட கோதை, மெல்ல மெல்ல பழைய நிலைக்குத் திரும்பினாள். மனத்தில் நிம்மதி பிறந்தது.

கோதையையும் நீலியையும் உள்ளே அழைத்த வேலன் மாமா, “அப்பப்போ காட்டுல இது மாதிரி விபத்துகள் நடக்கிறது உண்டு. மலைக் கிராம மக்கள் ஒருபோதும் மலையை அழிக்க விடமாட்டாங்க. காட்டு விலங்குகளைப் பாதுகாக்கவும் வனத்துறைக்கு உதவுவாங்க” என்றார்.

கோதைக்கு மலைவாசிகள் மீதிருந்த சந்தேகப் பார்வை நீங்கியது. நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். கண்களில் ஆனந்தம் பரவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x