

பள்ளியிலிருந்து மாலை வீடு திரும்பும்போது, இன்று இரவு புராஜெக்ட் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உங்கள் மனத்தில் தோன்றுகிறது. உடனே வீட்டில் சார்ட் பேப்பர், ஸ்கெட்ச் பேனாக்கள், வண்ணத் தாள்கள் எல்லாம் இருக்கின்றனவா என்று ஒவ்வொன்றாக நினைவுக்கு வருகிறது. சார்ட் பேப்பர் போன தடவை புராஜெக்ட் செய்யும்போதே தீர்ந்துவிட்டது. அதனால், போகும் வழியில் சார்ட் பேப்பரைக் கடையில் வாங்கிவிட வேண்டும் என்றெல்லாம் சிந்தித்தபடி நடக்கும்போது, சுற்றியுள்ள எதுவும் கவனத்தில் இருக்காது. மனம் முழுவதும் இரவு செய்ய வேண்டிய புராஜெக்ட்டிலேயே மூழ்கி இருக்கும்.
இப்படி மனத்தில் எண்ணம் ஓடிக்கொண்டிருக்கும்போது திடீரென்று வாகனங்களில் இருந்து வரும் ஒலி கவனத்தைத் திருப்பும். புராஜெக்ட் செய்வதைவிட உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன? விபத்தில் சிக்காமல் பத்திரமாக வீடு போய்ச் சேர்வதுதான். உடனே சாலையில் கவனத்தைக் குவித்து நடக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
நம் எண்ணம் சட்டென்று மாறிக்கொண்டே இருக்கிறது. சில நேரம் இங்கும் அங்குமாக அலைபாய்கிறது. சில சூழல்களில் சில செய்திகள் நம் கவனத்துக்கு வருவதே இல்லை.
மூளையின் கீழ்ப் பகுதியில், மூளைத் தண்டு ரெட்டிகுலர் அமைப்பில் இருக்கும் ‘லோகஸ் செருலியஸ்’ தான் அலைபாயும் கவனத்தைச் சட்டென்று குவிக்கிறது. லோகஸ் செருலியஸ் தனியா விதை அளவைப் போன்றது.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல மிக நுண்ணிய இந்த மூளைப் பகுதிதான் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது. மனித வளர்ச்சி ஆய்வுக்கான ‘மேக்ஸ் பிளாங்க்’ நிறுவனம் மற்றும் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு மூலம் இந்தத் தகவல் தெரியவந்திருக்கிறது.
கவனம் சிதறிய நிலையில் நம் மூளை நியூரான் துடிப்பு குறிப்பிட்ட தாளகதியில் இயங்குகிறது. 8–12 ஹெர்ட்ஸ் அதிர்வெண் அலைகள் மூளையில் அலைபாய்கின்றன. இவை ஆல்பா அலைகள். இந்த ஆல்பா அலைகள் பரவிய நிலையில் ஐந்து புலன்கள் வழியே நாம் பெரும் உணர்வுகள், தொகுத்துப் பகுக்கப்படாமல் மூளை கவனக்குறைவாக இருக்கும். அப்போது நம் கவனம் சிதறும்.
புற உலகிலிருந்து வரும் தகவல்களைப் பிரித்து தெரிவு செய்யும் வடிகட்டி போல ஆல்பா அலைகள் செயல்படுகின்றன. ஆல்பா அலைகளின் ஏற்ற இறக்கங்கள் மூலம் கவனம் சிதறுவதும் கவனம் குவிவதும் ஏற்படுகின்றன. ஆல்பா அலை மந்தமானால் நம் கவனம் ஏதோ ஒன்றின் மீது குவிகிறது. ஆல்பா அலைகள் உக்கிரம் அடைந்தால் மனம் போனபோக்கில் செல்கிறது.
மூளைக்கு உள்ளே பொதிந்து இருக்கும் நுண்ணிய லோகஸ் செருலியஸ் பகுதியை ஆராய்வது எளிதாக இருக்கவில்லை. லோகஸ் செருலியஸ் தூண்டப்படும்போது கண்விழிப்படலம் விரியும். சதுரங்க விளையாட்டில் காயை நகர்த்தும் முன்பு நம் கவனம் குவிகிறது. இது போன்று கவனம் குவிக்கப்படும் சில வேலைகளைச் செய்பவர்களை வைத்துப் பரிசோதனை செய்தனர். அவர்கள் தலையில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கருவி, ஆல்பா அலைகளை அளவீடு செய்தது. அவர்களின் கண்விழிப்படலம் விரிந்து சுருங்குவதையும் காட்டியது.
கவனம் குவிந்து ஒருமுகமாக இருந்த நிலையில் மூளையின் ஆல்பா அலைகள் மங்கின. கண்விழிப்படலம் விரிந்தது. இந்த நிலையில் லோகஸ் செருலியஸ் தூண்டப்பட்டு நோராட்ரீனலின் செயல்பாடு துடிப்பாக இருந்தது. இந்த மனநிலையில் கவனம் சிதறாமல் மேற்கொள்ள வேண்டிய பணிகளைத் திறம்பட செய்ய முடிந்தது. அதே நேரம் ஆல்பா அலை தாளகதியில் உச்சத்தில் அலைபாயும்போது கவனம் சிதறி மனத்தை ஒருமுகப்படுத்த முடியவில்லை.
ஆல்பா அலைகளை எது இயக்குகிறது? தலாமஸ் எனும் நடு மூளைப் பகுதியில் ஏற்படும் துடிப்புகளே ஆல்பா அலை தாளத்தைத் தூண்டுகின்றன. ஆல்பா அலைகள் அலைபாயும் நிலையில் தலாமஸ் நியூரான் செல்கள் மீது நோராட்ரீனலின் வேதிப் பொருளைச் செலுத்தினால் துடிப்பு அடங்கிவிடுகிறது. அதாவது லோகஸ் செருலியஸ் இயங்கும்போது சுரக்கும் நோராட்ரீனலின், தாலமஸின் மூளை நியூரான்களைச் செயலிழக்கச் செய்கின்றன. எனவே, ஆல்பா அலை மங்கி மறைந்து விடுகிறது. கவனம் சட்டென்று குவிகிறது.
எனவே, கவனத்தைத் திடீரென்று குவிக்க வேண்டிய சூழ்நிலைகளின்போது நோராட்ரீனலின் சுரப்பு அதிகரித்து, கவனம் ஒருமுகப்படுத்த உதவுகிறது. ஏதோ யோசனையில் சாலையில் நடக்கும்போது மோதவரும் வாகனத்திலிருந்து சட்டென்று விலக உதவுகிறது.
கட்டுரையாளர், விஞ்ஞானி தொடர்புக்கு: tvv123@gmail.com