

ஸ்டார் ஓட்டல் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். சால்ட் ஓட்டலைத் தெரியுமா? தனி உப்புப் பாளங்களால் ஒரு ஓட்டல் கட்டப்பட்டுள்ளது. ‘பேலசியோ டி சால்’ (Palacio de saal) என்று அழைக்கப்படுகிறது அந்த ஓட்டல். பொலிவியா நாட்டில் உள்ள உலகின் மிகப் பெரிய உப்பு பிளாட்டான ‘சாலர் டி உயுனி’ (Salar de Uyuni) என்ற இடத்தில் இது அமைந்துள்ளது. உப்பு பிளாட் என்பது உப்பு மட்டுமே மிஞ்சியுள்ள காய்ந்த ஏரிப் படுகை.
14 அங்குல கனத்தில் இருக்கும், ஒரு மில்லியன் உப்புப் பாளங்களால் இந்த ஓட்டல் 1993-ல் உருவாக்கப்பட்டது. தரை, சுவர், கூரை, கட்டில், மேஜை, நாற்காலி, சிலைகள் என இங்கு எல்லாமே உப்பால் செய்ததுதான். நீச்சல் குளம், கோல்ஃப் மைதானம் கூட உப்புதானாம். நீராவிக் குளியலறை, நீர்ச்சுழல் குளியலறையும் உண்டாம்.
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சாலர் டி உயுனிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்க இடமில்லாமல் தவித்தனர். கட்டுமானப் பொருட்கள் கிடைக்காத இந்த ஒதுக்குப்புறமான பகுதியில், உப்புப் பாளங்களால் ஓட்டல் கட்டலாம் என்ற யோசனை உருவானதாம். 4,500 சதுர அடியில் அமைந்துள்ள இந்த ஆச்சரியமூட்டும் ஓட்டலைக் கட்ட இரண்டு வருடங்கள் பிடித்ததாம். ஒவ்வொரு வருடமும் மழைக் காலம் முடிந்த பின், மழையால் கரைந்த சில சேதங்களை மறுசீரமைப்பது வழக்கம்.
‘டான் ஜுவான் க்வீசடா’ என்ற படைப்பாளியின் மூளையில் உருவான இந்த ஓட்டல்தான், உலகின் முதல் உப்பு ஓட்டல் ஆகும். இதற்குப் பின் சில உப்பு ஓட்டல்கள் திறக்கப்பட்டபோதிலும், ‘பேலசியோ டி சால்’தான் உலகின் மிகப் பெரியது. ‘பேலசியோ டி சால்’ என்றால் ‘உப்பு அரண்மனை’ என்று அர்த்தம்.
தகவல் திரட்டியவர்: ப. மகேந்திரன், 9-ம் வகுப்பு,
அரசு உயர் மேல்நிலைப் பள்ளி, துறையூர்.