

கடல் நீர் ஆவியாவதால் உருவாகும் மழை நீர் ஏன் உப்புக் கரிப்பதில்லை, டிங்கு?
- வி. ஹேம வர்ஷினி, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.
நல்ல கேள்வி ஹேம வர்ஷினி. அடர்த்தி குறைவான பொருள் மேலே செல்லும், அடர்த்தி அதிகமான பொருள் கீழே தங்கிவிடும். கடல் நீர் ஆவியாகும்போது, நீருடன் கலந்திருக்கும் உப்புகளைக் கடலிலேயே விட்டுவிடுகின்றன. நீராவியில் உள்ள நீரைவிட உப்புப் படிகத்தின் அடர்த்தி அதிகமானது. நீராவியில் உள்ள காற்றில் ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் அடர்த்தி குறைவாக இருப்பதால் அவை மேலே செல்கின்றன. உப்புப் படிகங்கள் அடர்த்தி அதிகமாக இருப்பதால் கடலிலேயே தங்கிவிடுகின்றன. அதனால்தான் கடல்நீர் உப்பாக இருக்கிறது. தூய்மையான மழைநீர் சுவை, மணம் அற்றதாக இருக்கிறது.
பொதுவாகப் பறவைகள் குறிப்பிட்ட உயரம்தான் பறக்கின்றன. ஆனால், கழுகு மட்டும் மிக உயரமாகப் பறப்பது ஏன், டிங்கு?
- மெல்பின், 9-ம் வகுப்பு, ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா, கூத்தூர், திருச்சி.
கழுகு தன்னுடைய ஆற்றலை அதிகம் பயன்படுத்தாமல், காற்றின் ஆற்றலைப் பயன்படுத்தி பறப்பதில் திறமை வாய்ந்தது. சூரிய ஒளியால் நிலம் அதிகமாக வெப்பமடையும்போது, வெப்பக்காற்றுக் குமிழிகள் உருவாகி மேலே செல்லும். இந்த வெப்பக் குமிழிகளின் அடர்த்தி குறைவு என்பதால், இவற்றையும் பறப்பதற்குப் பயன்படுத்திக்கொள்கிறது. கழுகின் பார்வைத் திறன் நன்றாக இருக்கும். உயரமாகச் செல்லச் செல்ல, கழுகின் இரை கிடைக்கும் பரப்பும் பெரிதாகும். உயரத்தில் இருந்தாலும் தரையில் ஓடும் எலி போன்ற இரையைத் துல்லியமாகக் கழுகால் கண்டறிந்துவிட முடியும். அதனால், உயரமாகப் பறப்பதுதான் கழுகுக்கு நல்லது, மெல்பின்.
ஏன் சில விலங்குகள் நீண்ட காலம் தூங்குகின்றன, டிங்கு?
- ஜி. இனியா, 5-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
பனிப்பிரதேசங்களில் வசிக்கும் உயிரினங் களுக்குக் குளிர்காலத்தில் இரை கிடைக்காது. அதனால், இருக்கும் ஆற்றலைச் சேமித்து வைத்துக்கொள்வதற்காக நீண்ட உறக்கத்தை (Hibernation) மேற்கொள்கின்றன. இப்படித் தூங்கும்போது சாப்பிடுவதில்லை. மலம், சிறுநீர் கழிப்பதில்லை. கோடைக்காலம் வந்தவுடன் தூக்கத்தைக் கலைத்து, இரை தேடிக் கிளம்பிவிடுகின்றன. கடினமான சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்கு இயற்கை கொடுத்த தகவமைப்புதான் இந்த நீண்ட உறக்கம். வெப்பப் பாலைவனங்களில் வசிக்கும் சில உயிரினங்களும் நீண்ட தூக்கத்துக்குச் செல்கின்றன, இனியா.