Published : 05 Jan 2022 10:58 AM
Last Updated : 05 Jan 2022 10:58 AM

புதிய கண்டுபிடிப்புகள்: சொடக்கு மேல சொடக்கு

கட்டைவிரலை நடு விரலோடு அழுத்திச் சொடக்குப் போடுவதன் பின்னணியில் உள்ள இயற்பியலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதிவேகத்தில் இயங்கும் கேமரா மூலம் உராய்வு, விரல்கள் அழுத்தும் தன்மை ஆகியவற்றின் காரணமாக, விரல்களில் கண் இமைக்கும் நேரத்தில் ஏற்படும் மாற்றங்களைப் படம்பிடித்துள்ளனர்.

‘இன்ஃபினிட்டி வார்’ திரைப்படத்தில் தானோஸ் சொடக்குப் போட, பிரபஞ்சத்தின் பாதி உயிர் அழிந்துவிடுகிறது. சொடக்குப் போடும் முன்னர் இயற்கைக்கு அப்பாற்பட்ட மந்திரக் கையுறை அணிந்துகொண்டுதான் தானோஸ் சொடக்குப் போடுவார். இந்தத் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் தங்களுக்கு இந்த ஆய்வுக்கான யோசனை வந்தது என்கிறார் ஜார்ஜியா டெக்கின் ஆய்வாளர் சாத் பாம்லா. விறைப்பான கையுறை அணிந்து, சொடக்குப் போட முடியுமா என்கிற கேள்வி எழுந்தது. இதன் தொடர்ச்சியாகவே அவர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

கண் இமைக்கும் நேரத்தை மிக நுண்ணிய கால இடைவெளி என நாம் கருதுகிறோம். கண் இமைக்க நாம் சுமார் 150 மில்லி நொடிகள் எடுத்துக்கொள்கிறோம். ஒரு நொடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு மில்லிநொடி. சொடக்குப் போட எடுக்கும் கால அவகாசம் சுமார் ஏழு மில்லி நொடிகள்தாம். அதாவது கண் இமைப்பதைவிட இருபது மடங்கு வேகத்தில் சொடக்கு நிகழ்கிறது!

சொடக்கு நிகழ்வின் படங்களை மெதுவாக இயக்கிப் பார்த்தபோது, பல்வேறு கட்டங்கள் தெளிவாக விளங்கின. வில்லில் அம்பைப் பூட்டி இழுக்கும்போது விசை ஏற்படுவதுபோல, சொடக்குப் போடுவதின் முதல் கட்டத்தில் நடுவிரலை கட்டைவிரலோடு அழுத்தி வைக்கும்போது ஆற்றல் குவிகிறது.

விரல்கள் மற்றும் கைகளில் உள்ள தசைநாண்களை ஸ்பிரிங்போல அழுத்தி வைக்க உராய்வு விசை உதவுகிறது. விரல்கள் ஒன்றுடன் ஒன்று அமுங்கும்போது கூடுதல் உராய்வு ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கூடுதல் தேக்கநிலையாற்றல் ஏற்படுகிறது. கட்டைவிரலுக்கும் நடுவிரலுக்கும் இடையே ஏற்படும் உராய்வு, நடுவிரலைக் கட்டை விரலுடன் இணைத்து வில்லில் பூட்டிய அம்பு போலச் செயல்பட வைக்கிறது.

குறிப்பிட்ட அளவு ஆற்றல் தேக்கநிலை அடையும்போது உராய்வு முறியடிக்கப்பட்டு, கட்டைவிரலும் நடுவிரலும் ஒன்றோடொன்று சறுக்கி, வில்லிலிருந்து புறப்படும் அம்புபோல நடுவிரல் உள்ளங்கையை நோக்கிப் பாய்கிறது.

இறுதிக் கட்டத்தில் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புபோல கட்டைவிரலில் நழுவி, நடுவிரல் விலகி, உள்ளங்கையில் சென்று மோதுகிறது. உள்ளங்கையில் சென்று மோதும்போதும், நடுவிரல் வேகமாகப் பாயும்போதும் ஒலியை ஏற்படுத்துகிறது. இதுவே சொடக்கு ஒலியாக வெளிப்படுகிறது. நடுவிரல் நழுவி உள்ளங்கையைச் சென்று அடைய வெறும் ஏழு மில்லிநொடிகள்தாம் எடுத்துக்கொள்கின்றன.

விரல்களின் மேலே அதிக உராய்வு தரும் அல்லது உராய்வு நீங்கும் பொருளைப் பூசினால் சொடக்கு ஏற்படுவது இல்லை. அதிகமான உராய்வு நடுவிரல் லாகவமாக நழுவிச் செல்வதைத் தடுக்கிறது. உராய்வு குறைந்தால் ஆற்றல் குவிந்து விரல் அம்பு போலச் செல்வது தடைபடுகிறது. அதாவது கைவிரல்களின் உராய்வு அளவுதான் சொடக்கு ஏற்படப் பொருத்தமான உராய்வு அளவு.

கைகளில் கையுறை அணிந்துகொண்டு சொடக்குப் போட முடியாது. திரைப்படத்தில் கிராபிக்ஸ் மூலம் மட்டுமே அப்படிக் காட்ட முடியும். இயற்பியல் அடிப்படையில் சாத்தியம் இல்லை என்கிறார் ஆய்வாளர் ராகவ் ஆச்சார்யா.

கட்டுரையாளர், விஞ்ஞானி தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x