

உங்களுடைய நண்பருக்கு ஏதாவது தெரியவில்லை, புரியவில்லை என்றால், “கூகுள் பண்ணிப் பாரு” எனச் சொல்வீர்கள் இல்லையா? அதேவேளையில், இணையத்தை நீங்கள் பயன்படுத்தினால் வீட்டில் பெற்றோரும், பள்ளியில் ஆசிரியர்களும் கவலைப்படுகிறார்களா? “எப்ப பார்த்தாலும் இண்டர்நெட்ல அப்படி என்னதான் செய்வியோ…” என்கிறார்களா? அதற்கு நியாயமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இனி நீங்கள் இணையத்தில் துழாவினால் பெரியவர்கள் உற்சாகமாக உங்களைப் பாராட்டும் ஒரு புதிய விஷயம் வந்திருக்கிறது. அதுதான் கிடில் (Kiddle).
குழந்தைகளின் பயன்பாட்டுக்காக கூகுள் நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்திருக்கும் தேடு எந்திரம்தான் (சர்ச் என்ஜின்) கிடில். >www.kiddle.co என பதிவிட்டதும் வேற்றுக்கிரகப் பின்னணியில் ஒரு பெரிய சிவப்பு நிற ரோபோ பளிச்சென்று திரையில் தோன்றும். வார்த்தைகளைப் பதிவிடும். வெள்ளைப் பட்டையில் நீங்கள் தேடும் வார்த்தையைப் பதிவிட்டால் ஏராளமான தகவல்கள் கொட்டும். ஒவ்வொரு வார்த்தைக்கும் எத்தகைய வலைத்தளங்கள், தகவல்கள் உங்கள் பார்வைக்கு வர வேண்டும் என்பதை கவனமாக இந்நிறுவனத்தின் ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்துத் தருகிறார்கள்.
உதாரணமாக, ‘ஆப்பிள்’ என கூகுள் தேடு எந்திரத்தில் பதிவிட்டால் உடனடியாக ஆப்பிள் போன் நிறுவனம் தொடர்பான தகவல் என ஆரம்பித்து எக்கச்சக்கமான தகவல்கள் குவியும். அதே கிடில் தேடு எந்திரத்தில் ‘ஆப்பிள்’ எனப் பதிவிட்டுப் பாருங்கள், ஆப்பிள் தொடர்பான சுவாரஸ்யமான கணினி விளையாட்டுகள், ஆப்பிளின் எளிய வரலாறு, சுலபமான கைவினை விளையாட்டுகள், ஆப்பிளின் சத்துகள் என பல விஷயங்கள் வரிசை கட்டுகின்றன.
நீங்கள் எளிமையாகப் படிப்பதற்கு ஏற்ற பெரிய எழுத்துரு (font style), பெரிய படங்கள் ஆகியவையும் இடம்பெறுகின்றன. இதன் மூலம் நீங்கள் தேடும் விஷயத்தை சரியாக அடையாளம் கண்டு, கிளிக் செய்து தகவல்களைப் பெறலாம். குழந்தைகளுக்கு என்றே இது உருவாக்கப்பட்டிருப்பதால் பல பாதுகாப்பு வசதிகள் உள்ளன. வயது வந்தவர்கள் தொடர்பான வார்த்தைகளைப் பதிவிட்டால் “நீங்கள் கேட்பதில் சில கெட்ட வார்த்தைகள் இருக்கின்றன. மீண்டும் முயற்சி செய்யுங்கள்” எனச் சொல்லிவிடுகிறது கிடில்.
புகார் அளிக்க, கீவேர்ட் ப்ளாக்கிங் ப்ரம், சைட் ப்ளாக்கிங் ப்ரம் ஆகிய லிங்குகளும் கொடுக்கப் பட்டிருக்கின்றன. ஆக குழந்தைகளுக்கு உகந்த, பாதுகாப்பான தேடு எந்திரம் கிடில்.