நீர்ப்பீச்சு: வானத்திலிருந்து கொட்டிய தவளை!

நீர்ப்பீச்சு: வானத்திலிருந்து கொட்டிய தவளை!
Updated on
1 min read

சாரல் மழை, பெரு மழை, அடை மழை எனப் பல மழைகள் நமக்குத் தெரியும். ‘தவளை மழை’யைப் பற்றி இதற்கு முன்பு கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 1939-ம் ஆண்டு ஜூன் 17 அன்று ஈரான் நாட்டிலுள்ள டாப்ரெஜ் என்ற நகரில் விநோத மழை பெய்தது. அதைத் தவளை மழை என்று அழைக்கிறார்கள்! ஆமாம், அன்று வானத்திலிருந்து தவளைகள் தரையில் விழுந்தன. இதைப் பார்த்து உலகமே வியந்தது. இந்த வினோத தவளை மழைக்குக் காரணம், ஒரு நீர்ப்பீச்சு (Water Spout).

நீர்ப்பீச்சு என்றால் என்ன? நீர்ப்பீச்சு உருவாக முக்கியக் காரணமே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்தான். கூடவே, மிக வேகமாக மாறும் வானிலை மாற்றங்களும் ஒரு காரணம். கடலின் மேற்பரப்பில் திடீரென்று காற்று சூடாக்கப்பட்டால், அது விரைந்து மேலெழும்பும். அப்படி காற்று மேலெழும்பியவுடன், அந்த வெற்றிடத்தை நோக்கி கடல் நீர் எழும்பி வரும். கடல் நீர் உறிஞ்சப்படும்போது அப்பகுதியில் வாழும் தவளைகள், மீன்கள், சிப்பிகள் என எல்லாமே நீருடன் மேல்நோக்கிப் பயணமாகின்றன. மேலே சென்ற கடல் நீர், காற்றுடன் பயணித்து, சிறிது தொலைவில் கடலிலோ அல்லது கடற்கரை நகரங்களிலோ மழையாகப் பொழியும்.

கடலில் மட்டுமல்ல, நீர்ப்பீச்சு மிகப் பெரிய ஏரிகளிலும்கூட ஏற்படும். டாப்ரெஜ் நகர தவளை மழைக்கு அந்த நகரை ஒட்டிய ரிஜாயே ஏரியில் ஏற்பட்ட நீர்ப்பீச்சுதான் காரணம். இதே போன்ற ஒரு நீர்ப்பீச்சால் 1881-ம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள வொர்செஸ்டர் நகரில் ‘மீன் மழை’ பெய்தது.

திமிங்கலங்களையோ சுறாக்களையோ உறிஞ்சும் அளவுக்கு நீர்ப்பீச்சுக்குச் சக்தி இல்லையாம். ஒரு வேளை சக்தி இருந்தால் என்னவாகியிருக்கும்?!

தகவல் திரட்டியவர்: எம். ராஜசேகர், 9-ம் வகுப்பு,
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, லால்குடி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in