Last Updated : 18 Jun, 2014 12:47 PM

 

Published : 18 Jun 2014 12:47 PM
Last Updated : 18 Jun 2014 12:47 PM

ஓடி விளையாடு: கல்லா, மண்ணா?

இன்றைக்கு நம்ம வீட்டுள்ளே விளையாடுற மாதிரி பல விளையாட்டுகள் வந்திடுச்சு. உதாரணமா கேரம் போர்டு, பிஸினஸ்/டிரேட், வீடியோ கேம். இது போததெனு ஆங்கிரி பேர்டு, டாக்கிங் டாம் அப்படி இப்படினு ஏகப்பட்ட விளையாட்டுகள் வேற இருக்கு. அப்பா, அம்மா காலத்துல இந்த மாதிரியெல்லாம் கேம்ஸ் கிடையாது. அப்ப வேற மாதிரியான விளையாட்டுகள் இருந்துச்சு. பசங்களோட பசங்களா கலந்து விளையாடுவாங்க. கண்ணாமூச்சி, கொலகொலயா முந்திரிக்கா, பூப்பறிக்க வருகிறோம், நொண்டியாட்டம் அப்படினு கலர் கலராக ஏகப்பட்ட விளையாட்டுகள். அந்த மாதிரி விளையாட்டுகள் நம்ம உடலுக்கும் அறிவுக்கும் நல்லது. அந்த மாதிரியான ஒரு விளையாட்டுதான் ‘கல்லா, மண்ணா?’

கல்லா, மண்ணா?

கல்லா, மண்ணா விளையாட குறைஞ்சது ஒரு ஐஞ்சாறு பேராவது வேணும். முதல்ல ‘பிங்கி பிங்கி பாங்கி...’ போட்டு உங்க ஃப்ரண்ட தனியா பிரிச்சுக்கணும். இப்ப தனியா வந்த ஃப்ரண்ட் கிட்ட, ‘உனக்கு கல்லு வேணுமா? மண்ணு வேணுமா?’ அப்படினு கேட்கணும். இப்ப உங்க ஃப்ரண்ட் மண்ணு வேணும்னு சொல்லிட்டா நீங்க யாரும் மண்ணுக்குப் போகக் கூடாது. எல்லோரும் கல்லு மேல ஏறி நிக்கணும். மண்ணுக்குப் போன உங்க ஃப்ரண்ட் உங்களைத் தொட்டா நீங்க அவுட்.

அப்புறம் அவுட் ஆனவுங்க கிட்ட திரும்பவும் மண்ணு வேணுமா, ‘கல்லு வேணுமா?’ன்னு கேட்கணும். அப்புறம் திரும்பவும் விளையாட்டு தொடரும். அவுட் ஆனவுங்க கல்லு வேணும்னு சொன்னா யாரும் கல்லுக்குப் போகக் கூடாது. கல்லுக்குப் போனா அவுட் ஆக்கிருவாங்க.

ஊர்ல உள்ள பசங்க இந்த விளையாட்டு விளையாடுறது சுலபம். ரோடு, வீட்டுக்குப் பக்கத்தில உள்ள தரை எல்லாம் மண்ணு வச்சிக்கலாம். பக்கத்துல கிடக்கிற கல்லு, கழிவு நீர் போற மூடப்பட்ட கால்வாய கல்லா வச்சிக்கலாம். வீட்டு மேல ஏறி நின்னாலும் கல்லுதான்.

ஆனால் சென்னை, மதுரை மாதிரி ஊர்ல ‘கல்லா, மண்ணா’ விளையாடுறது கொஞ்சம் கஷ்டம். அதுக்கு என்ன பண்ணணும்னா, ஆளுக்கு ஒரு குச்சி (அதாவது கொம்பு / கம்பு) எடுத்துக்கணும். இப்ப ஆடுறவுங்க மண்ணு வேணும்னு சொன்னா, எல்லோரும் குச்சி எடுத்து கல்லுல தொடணும். இப்ப உங்கள அவுட் பண்ண முடியாது. அதுபோல கல்லு வேணும்னு கேட்டா, குச்சிய வச்சி மண்ணைத் தொடணும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x