

எரிமலையைப் பற்றி பாடப் புத்தகங்களில் படித்திருப்போம். அது வெடித்துச் சிதறும்போது டி.வி.யில் பார்த்திருப்போம். எரிமலைகள் பற்றி நிறைய தகவல்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போமா?
# எரிமலை என்பது காலியான, உள்ளே குழி போல இருக்கும் ஒரு மலை. அது, பூமியின் பரப்பிலுள்ள ஒரு வெடிப்பாகும். எரிமலை வெடிக்கும்போது பூமியின் அடி ஆழத்திலிருந்து சூடான வாயு, பாறைத் துண்டுகள், சாம்பல், மேக்மா எனும் எரிமலைக் குழம்பு ஆகியவை வெடித்துச் சிதறி வெளியேறும்.
# ‘வல்கேனோ’ என்பது எரிமலையைக் குறிக்கும் ஆங்கில வார்த்தை. ரோமன் நெருப்புக் கடவுளான வல்கன் என்பதிலிருந்து உருவானது இது.
# பூமியின் கண்டத் தட்டுகள் சந்திக்கும் இடங்களில்தான் எரிமலைகள் அதிகமாக அமைந்திருக்கின்றன. பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள இடங்களில்தான் உலகின் 75 சதவீத எரிமலைகள் உள்ளன. இதை ‘பசிபிக் நெருப்பு வளையம்’ என்று அழைக்கிறார்கள். இங்கேதான் உலகின் 90 சதவீத நிலநடுக்கங்கள் நிகழ்கின்றன.
# பூமியின் உள்ளே அதிக வெப்பமுள்ள பாறைகள் காணப்படும் இடங்களிலும் எரிமலைகள் உள்ளன. இந்த இடங்களை ஹாட் ஸ்பாட்ஸ் என்று சொல்வார்கள். பூமியின் பல இடங்களில் இந்த ஹாட் ஸ்பாட்ஸ் உள்ளன. அதில் முக்கியமானது ஹவாய் தீவு.
# பூமிக்குள் இருக்கும் வரை உருகிய பாறையின் பெயர் ‘மேக்மா’. எரிமலை வெடித்து அது வெளியே வந்த பின் ‘லாவா’ என்று அழைக்கப்படுகிறது.
# எரிமலை வெடிக்கும்போது சீறிப் பாயும் சாம்பல், பூமியிலிருந்து 17 மைல் உயரம் வரை வானத்தில் பயணிக்கும்.
# எரிமலையிலிருந்து நீராவி, கார்பன் டை ஆக்ஸைடு, கந்தக டை ஆக்ஸைடு, ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வாயுக்கள் வெளியேறும்.
# எரிமலை வெடிக்கும்போது நிலநடுக்கமும், சுனாமியும் வர வாய்ப்புகள் அதிகம்.
# க்ராகடோவா, பம்பேய், பேலீ, வெசூவியஸ், நோவாராப்டா போன்றவை பிரபலமான எரிமலைகள் ஆகும்.
# எரிமலை என்றாலே, அது கூம்பு வடிவில் இருக்கும் என்றே நினைக்கிறோம் அல்லவா? ஆனால், அது எரிமலையில் ஒருவகைதான். அகன்ற பீடபூமி, சிறு பள்ளம், டூம் வடிவ அமைப்பு ஆகிய வடிவங்களிலும் எரிமலைகள் உள்ளன. கடல் ஆழத்திலும், ஐஸ் மலையிலும்கூட எரிமலைகள் இருக்கின்றன.
# உலகின் பெரிய இயங்கும் எரிமலை, ஹவாய் தீவின் மோனா லோவா (Mauna loa) ஆகும். கடலுக்கடியில் புதைந்துள்ள இதன் அடிப்பகுதி மலையுடன் சேர்த்தால், அது எவரெஸ்ட் மலையை விடப் பெரியதாகும். இந்த மலை, மொத்த ஹவாய் தீவில் பாதி அளவுக்கு உள்ளது.
# பொதுவாக எரிமலைகள் உயரமாக வளர ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். சில எரிமலைகள் வேகமாக ஒரே இரவில்கூட வளரும். மெக்ஸிகோவில் உள்ள பேரிக்யூட்டின் என்ற எரிமலை, பிப்ரவரி 20, 1943-ல் தோன்றியது. ஒரே வாரத்தில் ஐந்து மாடி உயரம் வளர்ந்தது. ஒரு வருட முடிவில் 336 மீட்டர் வளர்ந்தது. 1952-ல் அதன் வளர்ச்சி நின்றபோது அதன் உயரம் 424 மீட்டர் இருந்தது.
தகவல் திரட்டியவர்: ஆர். சோமசுந்தரம், 9-ம் வகுப்பு,
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருத்தணி.