

பறவைகளைப் போல் வேறு உயிரினங்கள் வலசை செல்வதுண்டா, டிங்கு?
- எஃப். டிவிஷா, 6-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.
ஆமாம் டிவிஷா. கடினமான பருவநிலை உருவாகும்போது வசிப்பதும் கடினம், உணவுத் தட்டுப்பாடும் ஏற்படும். அதனால் சில பறவைகள், விலங்குகள், பூச்சிகள் ஆகியவை வாழக்கூடிய சூழலை நோக்கி இடம்பெயர்கின்றன. அலாஸ்கா கரிபு மான்கள், மெக்சிகோ மோனார்க் வண்ணத்துப்பூச்சிகள், ஆப்பிரிக்கத் தட்டான்பூச்சிகள், ஆப்பிரிக்க எருதுகள், சாம்பல் வண்ணத் திமிங்கிலங்கள் போன்றவை மிக நீண்ட தூரத்துக்கு வலசை செல்லும் உயிரினங்களில் சில.
காலாவதியான மாத்திரைகளைச் செடிகளுக்குப் போடலாமா, டிங்கு?
- வி. தேவமித்ரா, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பள்ளி, திருச்சி.
மாத்திரைகள் மனிதர்களுக்காகத் தயாரிக்கப் படுபவை. தாவரங்கள் தாமாகவே வளரக்கூடியவை. பயன்படுத்த இயலாத காலாவதியான மாத்திரைகளைக் குப்பையில் போடுவதற்குப் பதிலாகத் தாவரங்களுக்குப் போடுகிறார்கள். இந்த மாத்திரைகளில் உள்ள கால்ஷியம் போன்ற சத்துகள் தாவரங்களின் வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. அதனால், தேவையற்ற மாத்திரைகளைத் தாவரங்களுக்குப் போடுவதில் தவறில்லை, ஆனால், எல்லா மாத்திரைகளையும் இப்படிப் போடக் கூடாது தேவமித்ரா.
பாலைவனத்தில் ஏன் மழை பொழிவதில்லை, டிங்கு?
-எஸ். சுபஹரிஷ், 6-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, நெய்வேலி கிராமம், தஞ்சாவூர்.
பருவநிலை மாற்றம், மனிதர்களின் செயல்பாடுகள், மலைகள் போன்ற காரணங்களால் சில பகுதிகளில் மழையின் அளவு குறைந்துவிடுகிறது. ஆண்டுக்கு 250 மி.மீ.க்கும் குறைவான அளவு மழை பொழியும் இடங்கள் காலப்போக்கில் வறட்சியான, பாலைவனங்களாக மாறிவிடுகின்றன. பாலைவனக் காற்றில் ஈரப்பதம் இருக்காது. நீர்நிலைகளோ தாவரங்களோ அதிகம் இல்லாததால் வெப்பத்தால் நீராவி உருவாகி, மேகமாக மாறி, மழையாகப் பொழியும் வாய்ப்பும் இருப்பதில்லை. அதனால் பாலைவனங்களில் மிக மிகக் குறைவான அளவுக்கே மழை பொழிகிறது, சுபஹரிஷ்.