Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

டிங்குவிடம் கேளுங்கள்: பேய்க்குக் கால் உண்டா?

சிங்கத்தைவிட புலியே வலிமையானது என்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படியென்றால் சிங்கத்தை ஏன் காட்டுக்கு ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், டிங்கு?

- அ.ச. தியாஸ்ரீ, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

நீங்கள் சொல்வதைப் போல் சிங்கத்தைவிட புலியே வலிமையானது என்பது சரிதான். ஆனால், சிங்கத்தை யாரும் தேர்தல் எல்லாம் வைத்து, காட்டின் ராஜாவாகத் தேர்ந்தெடுக்கவில்லை தியா.

சிங்கமும் புலியும் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய விலங்குகள். இரண்டு விலங்குகளின் வலிமையைச் சோதிக்க வேண்டும் என்றால், இரண்டும் ஒரே வயதாக இருக்க வேண்டும். ஒரே எடையாக இருக்க வேண்டும். இரண்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் சிங்கமும் புலியும் சண்டை போட்டு ஜெயித்தால்தான், எது வலிமையானது என்பதைச் சொல்ல முடியும்.

மிகப் பழங்கால ரோம் நகரில் உள்ள கொலோசியத்தில் சிங்கம், புலி சண்டைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் எல்லாம் புலிகளே வெற்றி பெற்றிருப்பதாகக் குறிப்புகள் உள்ளன. சிங்கங்கள் பொதுவாகக் கூட்டமாகச் சேர்ந்தே வேட்டையாடுகின்றன. புலிகள் தனியாகவே வேட்டையாடுகின்றன. இன்று சிங்கங்கள் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவில் இந்தியா உட்பட ஒரு சில இடங்களிலுமே வாழ்கின்றன. புலிகள் ஆசியாவில்தான் காணப்படுகின்றன. அதனால் சிங்கங்களும் புலிகளும் ஒரே காட்டில் வசிப்பது வெகு குறைவாகவே இருக்கிறது.

அப்படி வசிக்கக்கூடிய இடங்களிலும் சிங்கங்கள் சமவெளிப் பகுதியில்தான் வாழ்கின்றன. புலிகள் காட்டுக்குள் வாழ்கின்றன. சிங்கம் புலியின் எல்லைக்குள்ளோ புலி சிங்கத்தின் எல்லைக்குள்ளோ நுழைவதில்லை. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, சிங்கத்தின் உருவம் கம்பீரமாக இருப்பதாலும் அழகான பிடரி முடி இருப்பதாலும் காட்டின் ராஜா என்று சொல்ல ஆரம்பித்திருப்பார்கள். அதையே கதைகளிலும் பயன்படுத்தி வருகிறார்கள். தான் ஒரு காட்டு ராஜா என்பது சிங்கத்துக்கும் தெரியாது, சிங்கம்தான் காட்டு ராஜா என்பது புலிக்கும் தெரியாது.

பேய்க்குக் கால் இல்லை என்று சொல்கிறார்கள். ‘ஜலிங்... ஜலிங்...’ என்று சத்தம் வந்தால் பேய் நடந்து போகிறது என்று சொல்கிறார்கள். பேய்க்குக் கால் இருக்கிறதா, இல்லையா? முதலில் பேய் இருக்கிறதா, டிங்கு?

- ச. காவியஸ்ரீ, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

உங்கள் கேள்வியே ரசிக்க வைக்கிறது, காவியஸ்ரீ. கண் முன்னால் பார்க்கக்கூடிய எதையும் நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். பார்க்க முடியாத, இல்லாத ஒரு விஷயத்தை யாராலும் இது இப்படித்தான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது அல்லவா? பேய்க்குக் கால்கள் இல்லை என்று சொல்பவர்களே, கொலுசு போட்டுக்கொண்டு நடப்பதாகக் கூறும்போது உங்களுக்குப் பேய் இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது அல்லவா? சந்தேகமே வேண்டாம், பேய் என்ற ஒன்று உலகில் இல்லை. அதனால்தான் அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு பேய் அப்படி இருக்கும், இப்படி இருக்கும் கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x