

அப்பா வாங்கி வந்தார்
அழகு மிகுந்த பானை!
களிமண்ணில் செய்த
கண் கவரும் பானை!
சிறிய கழுத்தின் கீழே
வயிறு பெருத்த பானை!
வட்ட வடிவ வாய்திறந்து
சிரிக்கும் சிவந்த பானை!
மிகக் குறைந்த விலையில்
வாங்கக் கிடைக்கும் பானை!
பயன்கள் மிக அதிகம்
தந்திடுமே பானை!
நாம் சமைக்கும் உணவில்
ருசியைத் தரும் பானை!
உணவில் ஊட்டச் சத்தும்
சேர்த்துத் தரும் பானை!
கோடை வெயில் நேரம்
ஊற்றி வைக்கும் நீரை
குளிர வைத்து நமக்குக்
கொடுக்கும் நல்ல பானை!
பத்திரமாய் நாமும் அதைப்
பாதுகாத்து வந்தால்
நமது உடல் நலனையும்
பாதுகாக்கும் பானை!