Published : 17 Nov 2021 03:06 AM
Last Updated : 17 Nov 2021 03:06 AM

ஜப்பானிய கதை: மூக்கு நீண்ட பூதங்கள்!

தமிழில்: சூ. ம. ஜெயசீலன்

மூக்கு நீண்ட இரு பூதங்கள் ஜப்பான் நாட்டின் வடக்கே உள்ள உயரமான மலையில் வாழ்ந்துவந்தன. அவற்றில் ஒன்று பச்சை பூதம். மற்றொன்று சிவப்பு பூதம். தங்களுடைய மூக்கை நீண்ட தூரத்துக்கு நீட்ட முடியும் என்பதால், மிகவும் கர்வத்தோடு இருந்தன. இரண்டு பூதங்களுக்கு இடையே அழகான மூக்கு எது என்று அடிக்கடி வாக்குவாதம் நடக்கும்.

ஒருநாள் பச்சை பூதம் மலை உச்சியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. அப்போது சமவெளிப் பகுதியில் இருந்து வந்த நறுமணம் அதன் மூக்கைத் துளைத்தது. ‘ஆஹா! ஏதோ நல்ல மணமாக இருக்கிறதே! என்னவாக இருக்கும்?’ என்று யோசித்தது. கண்டுபிடிக்க முடியாததால் தன் மூக்கை நீட்டத் தொடங்கியது. மணத்தைப் பின்தொடர்ந்து மூக்குப் பயணித்தது. ஏழு மலைகளைக் கடந்து சமவெளிப் பகுதிக்குச் சென்ற மூக்கு, ஒரு மன்னரின் மாளிகையில் நின்றது.

இளவரசி வெள்ளை மலர் அழைப்பின் பேரில் பக்கத்து நாட்டு இளவரசிகள் வந்திருந்தனர். அவர்களுக்குத் தன்னிடமிருந்த மிகவும் அழகான அங்கிகளை வெள்ளை மலர் காட்டினாள். அனைத்தும் வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்ட ஆடைகள். பச்சை பூதத்தின் மூக்கு முகர்ந்து பார்த்தது இந்த வாசனையைத்தான். பிரித்த அங்கிகளை மாட்டி வைப்பதற்கான இடத்தை வெள்ளை மலர் தேடினாள். பச்சை பூதத்தின் மூக்குக் கண்ணில் பட்டதும், கம்பு என்று நினைத்து, அதில் வரிசையாக அங்கிகளைத் தொங்கவிட்டாள்.

மலையில் அமர்ந்திருந்த பச்சை பூதம், தன் மூக்கில் ஏதோ ஊர்வதுபோல் உணர்ந்தது. உடனே மூக்கை இழுக்க ஆரம்பித்தது. அழகான அங்கிகள் காற்றில் பறந்து போவதைப் பார்த்த இளவரசிகள் ஆச்சரியப்பட்டார்கள். அங்கிகளை எடுக்க முயன்றார்கள். ஆனால், முடியவில்லை. தன் மூக்கில் அழகான அங்கிகள் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த பச்சை பூதம் மகிழ்ந்தது. எல்லாவற்றையும் தன் வீட்டுக்குக் கொண்டு சென்றது. பிறகு, பக்கத்து மலையில் வாழ்ந்த சிவப்பு பூதத்தை அழைத்தது.

“இங்கே பாரு! என் அழகான மூக்குதான் அற்புதமான இந்த அங்கிகளை எல்லாம் எனக்குக் கொண்டு வந்தது” என்று பெருமையாகக் காட்டியது பச்சை பூதம். அங்கிகளைப் பார்த்த சிவப்பு பூதம் பொறாமைப்பட்டது.

“யாருடைய மூக்கு சிறந்தது என்று நான் காட்டுகிறேன். கொஞ்சம் பொறுத்திரு” என்றது சிவப்பு பூதம். மலை உச்சியில் அமர்ந்து, தனது நீண்ட சிவப்பு மூக்கைத் தடவிக்கொண்டே காற்றில் முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. நாட்கள் கழிந்தன. எந்த வாசனையும் வரவில்லை. பொறுமையிழந்த சிவப்பு பூதம், ‘சரி, இதற்கு மேல் நான் காத்திருக்கப் போவதில்லை. என் மூக்கைச் சமவெளிப் பகுதிக்கு அனுப்புகிறேன். நிச்சயமாக ஏதாவது நல்லது கிடைக்கும்’ என்று நினைத்தது.

சிவப்பு பூதம் தன் மூக்கை நீட்டத் தொடங்கியது. ஏழு மலைகளைக் கடந்து சமவெளியில் இறங்கி, இறுதியில் அதே மன்னரின் மாளிகைக்குச் சென்றது. அந்த நேரம் மன்னரின் இளைய மகன் இளவரசர் வாலரஸ் தன்னுடைய நண்பர்களுடன் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். சிவப்பு பூதத்தின் மூக்கைப் பார்த்ததும், “அங்கே பாருங்கள், சிவப்புக் கம்பத்தை யாரோ அங்கே வைத்திருக்கிறார்கள். வாருங்கள் அதில் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்” என்று உற்சாகமாகக் கத்தினான்.

சிவப்புக் கம்பத்தில் சிறுவர்கள் கயிறு கட்டினார்கள். பிறகு அவர்கள் எப்படி விளையாடினார்கள் தெரியுமா? ஊஞ்சலாடிக்கொண்டே மேலே போனார்கள். மூக்கில் ஏறினார்கள். ஒரு சிறுவன் கத்தியால் தன் பெயரை மூக்கு மீது எழுதினான்.மலையில் அமர்ந்திருந்த சிவப்பு பூதத்துக்கு இது எவ்வளவு வேதனையைக் கொடுத்திருக்கும்! சிறுவர்கள் ஏறியதால் மூக்கை இழுக்கவும் இயலவில்லை.

மூக்கில் காயம் ஏற்பட்டவுடன் தன் பலத்தை எல்லாம் திரட்டி, சிறுவர்களை உதறிவிட்டு, மூக்கை இழுத்துக்கொண்டது. இதைப் பார்த்த பச்சை பூதம் அடக்க முடியாமல் சிரித்தது. ஆனால், தன் மூக்கை வருடிக்கொண்டே சிவப்பு பூதம், “பொறாமைப்பட்டதால் எனக்குக் கிடைத்த தண்டனை இது. என் மூக்கை இனி ஒருபோதும் சமவெளிப் பகுதிக்கு அனுப்பவே மாட்டேன்” என்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x