

காட்டு யானைகள், காட்டு மாடுகள், நீலகிரி மந்தி, கட மான் இவற்றைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீங்க. மலையடிவாரம், காடுகளின் எல்லைகளில் இருப்பவர்கள் இவற்றில் சிலவற்றைப் பார்த்தும் இருக்கலாம். சரி, வரையாடு பத்தி உங்களுக்குத் தெரியுமா?
வள்ளியும் அவளுடைய பள்ளி நண்பர்களும் நீலகிரி மலைப்பகுதிக்குச் சுற்றுலா செல்கிறார்கள். வரையாடு உட்பட அரிய காட்டு உயிரினங்களை அவற்றின் வாழிடங்களிலேயே பார்ப்பதுதான் அவர்களுடைய நோக்கம். கானுலாவின்போது ஒரு சில கணங்களே வந்து செல்லும் வரையாட்டை வள்ளி பார்க்கிறாள். ஓர் ஆட்டைப் பார்ப்பது பெரிய விஷயமா என்று உங்களுக்குத் தோன்றலாம்.
வள்ளி பார்த்தது, வரையாடு. அதாவது சோலைப் புல்வெளிகள் எனப்படும் அரிய மலைக் காட்டுப் பகுதிகளில் வாழும் ஆடு. அது சாதாரண ஆடல்ல. மிகக் குறைந்த எண்ணிக்கையில் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் மட்டுமே வாழ்ந்துவரும் அரிய ஆட்டினம். அதுதான் தமிழ்நாட்டின் மாநில உயிரினமும்கூட.
வள்ளி பார்த்த வரையாட்டை அவளுடன் வந்த மற்றவர்களால் பார்க்க முடியவில்லை. அது சட்டென்று மலைக் காட்டுப் பகுதியில் சென்று மறைந்துவிடுகிறது. அதேநேரம் வேறு அரிய காட்டு உயிரினங்கள், அரிய தாவரங்கள், தொதவர் (தோடர்) பழங்குடிகள் ஆகியோரைப் பற்றி வள்ளியும் அவளுடைய நண்பர்களும் தெரிந்துகொள்கிறார்கள்.
இவை அனைத்தும் ஒரு சுவாரசியமான சித்திரக்கதையாக அழகழகான படங்களுடன் குழந்தைகளைக் கவரும் விதத்தில் வெளியாகியிருக்கிறது. ஆர்த்தி முத்தண்ணாவும், மம்தா நைனியும் எழுதிய ‘வள்ளியின் நீலகிரி மலைப் பயணம்‘ (Valli's Nilgiri Adventures) எனும் இந்தக் கதைக்கு அனிருத்தா ஓவியங்களை வரைந்திருக்கிறார்.
இந்த நூலை உலக இயற்கை நிதியம் (WWF) ஆங்கிலம், தமிழில் வெளியிட்டுள்ளது. நூலின் அச்சு வடிவத்தைப் பெறத் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: ssaravanan@wwfindia.net
நூலின் ஆங்கில வடிவத்தை இணையத்தில் இலவசமாகப் படிக்கலாம்: https://bit.ly/3mSqF3D