Published : 03 Nov 2021 03:08 AM
Last Updated : 03 Nov 2021 03:08 AM

குழந்தைகளை நேசித்தவர்; குழந்தைகளால் நேசிக்கப்பட்டவர்!

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நூற்றாண்டு

‘தோ... தோ... நாய்க்குட்டி’, ‘அணிலே அணிலே ஓடிவா’, ‘மாம்பழமாம் மாம்பழம்’ போன்ற பாடல்களை நீங்கள் பாடி மகிழ்ந்திருப்பீர்கள். இந்தப் பாடல்களை எல்லாம் உங்கள் அம்மா, அப்பாவும் பாடியிருப்பார்கள். உங்கள் தாத்தா, பாட்டியும் பாடியிருப்பார்கள். உங்கள் பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும்கூடப் பாடப் போகிறார்கள். இப்படிப் பல தலைமுறைகளையும் தன்னுடைய பாடல்களைப் பாட வைத்துக்கொண்டிருப்பவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா.

‘ஏடு துாக்கிப் பள்ளியில்

இன்று பயிலும் சிறுவரே

நாடு காக்கும் தலைவராய்

நாளை விளங்கப் போகிறார்!’

என்று இன்றும் பேச்சுப் போட்டியிலும் கட்டுரைப் போட்டியிலும் குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறோமே, இதை எழுதியவரும் அழ. வள்ளியப்பாதான்!

குழந்தைகளை அதிகமாக நேசிப்பவரால்தான் இப்படிப்பட்ட மிக அழகான பாடல்களையும் கதைகளையும் எழுதியிருக்க முடியும். தன் வாழ்நாள் முழுவதும் குழந்தைகளுடன் அதிக நேரம் அவர் செலவு செய்ததால்தான் அவர்களுக்கு ஏற்ற எளிய மொழியில் எழுதி, அவர்களை ஈர்க்க முடிந்திருக்கிறது. குழந்தைகளுடன் பழகியதையும் குழந்தைகளுக்காக எழுதி யதையும்தான் தன் வாழ்க்கையின் முக்கியமான விஷயமாகச் சொல்வார், வள்ளியப்பா.

கவிஞர், எழுத்தாளராக மட்டுமின்றி சங்கு, டமாரம், பாலர் மலர், கோகுலம் ஆகிய பத்திரிகைகளில் கவுரவ ஆசிரியராகவும் சிறப்பாகச் செயல்பட்டவர் வள்ளியப்பா. சின்னச் சின்ன வார்த்தைகளில், சின்னச் சின்ன வாக்கியங்களில்தான் சிறார்களுக்கு எழுத வேண்டும் என்பார். அவரும் அப்படியேதான் எழுதினார்.

தாம் எழுதிய பாடல்களையும் கதைகளையும் கட்டுரைகளையும் குழந்தை களிடம் கொடுத்து, படிக்கச் சொல்வார். குழந்தைகள் சொல்லும் கருத்துகளையும் ஏற்றுக்கொள்வார்.

சிறார் இலக்கியத்தில் வள்ளியப்பாவின் காலம் பொற்காலம்! குழந்தைகள் எழுதுவதை ஊக்குவிப்பார். குழந்தைகளுக்காகவே கோகுலம் இதழில் ‘சிறுவர் சங்கம்’ என்கிற பகுதியை ஆரம்பித்தார். சிறுவர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் குழந்தைகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி, அவர்களின் படைப்புகளை வெளியிட்டார். இன்றைக்கு இருக்கும் புகழ்பெற்ற பல எழுத்தாளர்கள், தாங்கள் கோகுலம் சிறுவர் சங்கத்தின் உறுப்பினர்கள் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள்.

நாம் எல்லோரும் நேசிக்கும் வள்ளி யப்பாவுக்கு நூறாவது பிறந்தநாள் (நவம்பர் 7, 2021). அவரைப் பற்றிய சுவாரசியமான விஷயங்களை அறிந்துகொள்வோமா?

சீதா ரவி, ரீ கல்கி இதழ் முன்னாள் ஆசிரியர்

பாரதியார், அழ. வள்ளியப்பா பாடல்களைக் கேட்டுத்தான் நான் வளர்ந்தேன். வள்ளியப்பா பாடல்களை எளிமையாகப் பாட முடியும். இன்றும்கூட அந்தப் பாடல்களை என்னால் சொல்ல முடியும்! பாடல்கள் நிறைந்த ‘மலரும் உள்ளம்’ இரு தொகுதிகளும் என்னிடம் இருந்தன. வள்ளியப்பாவின் பாடல்கள், கதைகள் மூலமே தமிழைக் கற்றுகொண்டேன். பள்ளியிலும் அவர் பாடல்களுக்கு நடனம் ஆடுவோம், கதைகளை நாடகம் போடுவோம்.

1983ஆம் ஆண்டு ‘கோகுலம்’ பத்திரிகை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. வங்கியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த வள்ளியப்பாவை, ஆசிரியர் பொறுப்பேற்கும்படி கல்கி ராஜேந்திரன் அழைத்தார். கிண்டியிலிருந்த அலுவலகத்துக்கு நீண்ட தொலைவு நடந்துதான் வர வேண்டும். குழந்தைகளுக்காக வேலை செய்வதால் அந்தக் கஷ்டத்தை எல்லாம் அவர் பொருட்படுத்தவே இல்லை. குழந்தைகளிடம் மட்டுமின்றி எல்லாரிடமும் இனிமையாகப் பழகுவார். நகைச்சுவையாகப் பேசுவார். கோகுலத்துக்காக ஆர்வத்துடனும் அக்கறையுடனும் அவர் வேலை செய்வதைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும்.

ஒருமுறை அவர் பேரன் அரவிந்த் அலுவலகத்துக்கு வந்தான். அவனால் நடக்க முடியவில்லை. வள்ளியப்பாவால் தூக்கிக்கொண்டு நடக்க இயலாது. உடனே, ‘ஆண்டவன் கொடுத்த கால் எதற்கு?’ என்று வள்ளியப்பா கேட்க, அவனும் ‘எதற்கு?’ என்று கேட்க, ‘அரவிந்தன் வேகமாக நடப்பதற்கு’ என்று ஒரு பாடலை உருவாக்கிப் பாடிக்கொண்டே, அலுவலகத்துக்கு அழைத்து வந்துவிட்டார்!

கோகுலம் சிறுவர் சங்கத்தை ஆரம்பித்தார். தானே உறுப்பினர் அட்டையில் பெயர், உறுப்பினர் எண் எழுதி, கையெழுத்துப் போட்டு அனுப்புவார். குழந்தைகள் எழுதும் கடிதங்களுக்குக் கைப்பட பதில் எழுதி அனுப்புவார். வள்ளியப்பாவின் கையெழுத்திட்ட உறுப்பினர் அட்டைகளையும் கடிதங்களையும் குழந்தைகள் பொக்கிஷமாக நினைத்தனர். கடந்த இரு தலைமுறையினருக்கு வள்ளியப்பாவே ஆதர்சம்!

தேவி நாச்சியப்பன், எழுத்தாளர் (வள்ளியப்பாவின் மகள்)

குழந்தைகளுடன் இருப்பது அப்பாவுக்கும் பிடிக்கும்; அவருடன் இருப்பது குழந்தை களுக்கும் பிடிக்கும். அப்பா வீட்டிலிருப்பது தெரிந்தால் குழந்தைகள் வந்துவிடுவார்கள். அப்பா எழுதியவற்றை எங்களிடம் கொடுத்து, எழுத்துப் பிழைகளைக் கண்டுபிடிக்கச் சொல்வார். ஒரு பிழையைக் கண்டுபிடித்தால் பத்துப் பைசா தருவதாகச் சொல்வார். பத்துப் பைசா பெரிய விஷயம் என்பதால், ஆர்வமாகப் படிப்போம். ஆனால், அப்பாவின் எழுத்தில் பிழை எப்படி வரும்? பத்துப் பைசாவை வாங்கவே முடியாது. ஆனால், தமிழைப் பிழையின்றி எழுத, படிக்கக் கற்றுக்கொண்டோம்!

குழந்தைகளுக்கு வன்முறையை எந்த விதத்திலும் அறிமுகம் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் அப்பா. தமிழ்வாணனும் அப்பாவும் நண்பர்கள். தமிழ்வாணன் துப்பாக்கிக் கதைகளை எழுத ஆரம்பித்தபோது, குழந்தை எழுத்தாளர்கள் துப்பாக்கிக் கலாசாரத்தை எழுத்தில் கொண்டு வரக் கூடாது என்று எழுதினார் அப்பா. ரேவதி (ஈ.எஸ். ஹரிஹரன்) சார் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் அப்பா சொல்வதை ஏற்றுக்கொண்டனர்.

ஒருமுறை நாங்கள் பயணம் செய்து கொண்டிருந்தோம். திடீரென்று பேருந்து நின்றுவிட்டது. வெகு நேரமாகியும் புறப்படவில்லை. என்ன செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம். பெயிண்ட் இருந்தால் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என்றார் அப்பா. எப்படி என்று யோசித்தோம். ‘பல்லவன் போக்குவரத்துக் கழகம்’ என்பதில் ‘வ’ எழுத்தை அழித்துவிட்டால், ‘பல்லவன் போக்கு ரத்துக் கழகம்’ ஆயிடும் என்றாரே பார்க்கலாம்!

பா. ராகவன், எழுத்தாளர்

அந்த வருடம் பள்ளி ஆண்டு விழாவுக்குத் தலைமை வகிக்க வள்ளியப்பா வந்திருந்தார். என் அப்பா தலைமை ஆசிரியர் என்பதால் அவருக்கு மதிய உணவு எங்கள் வீட்டில் ஏற்பாடாகியிருந்தது. கோகுலத்தில் அப்போது வெளியாகிக் கொண்டிருந்த அவருடைய ‘அப்புசாமி குப்புசாமி’ கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப் பற்றியும் எனக்கும் எழுதுவதில் ஆர்வம் இருப்பதையும் சொன்னேன். ஆனால், அவரைப் போல ரசிக்கும்படி எழுத என்ன செய்வது?

‘கவிதைதானே? ரொம்ப சுலபம் தம்பி. முதல் வரில அப்பான்னு எழுதினா அடுத்த வரி டப்பான்னு ஆரம்பிக்கணும். இல்லன்னா சுப்பான்னு எழுதணும். முதல் வரில மூணு வார்த்த போட்டேன்னா அடுத்த வரிலயும் மூணு வார்த்ததான் இருக்கணும். இத மட்டும் பயிற்சி பண்ணு. மத்ததெல்லாம் சுலபமா வந்துடும்’ என்று சொன்னார் வள்ளியப்பா. இதைவிட எளிமையாகக் கவிதை எழுத யாராலும் கற்றுத்தர இயலாது. அவர் சொன்னதைக் கடைப்பிடித்து ஒரு கவிதை எழுதினேன். ‘ஐயாசாமி அழகுசாமி’ என்று அதற்குத் தலைப்பிட்டு அவருக்கே அனுப்பினேன். படித்துவிட்டு ஒரு கார்டு போடுவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். நான் எதிர்பாராத ஒன்று நடந்தது. அடுத்த இதழ் கோகுலம் முதல் பக்கத்தில், ‘என்னுடைய அப்புசாமி குப்புசாமி கவிதைகளால் ஈர்க்கப்பட்டு, இந்தச் சிறுவன் இப்படி ஒரு கவிதை எழுதியிருக்கிறான் என்றால் அதைவிட எனக்கு வேறென்ன மகிழ்ச்சி?’ என்று குறிப்பிட்டு அந்தக் கவிதையைப் பிரசுரித்திருந்தார்.

‘கவிதைதானே? ரொம்ப சுலபம் தம்பி’ என்று சொல்லாமல் அவர் வேறு எதையாவது சொல்லியிருந்தால் நான் என் முயற்சியை அன்று தொடர்ந்திருப்பேனா என்று தெரியவில்லை. கவிதை உள்பட எழுத்தில் எதுவுமே சுலபமில்லை என்பதை அறிவதற்குக்கூட அந்த நுழைவாயில் வேண்டியிருந்தது. அன்று அவர் தொடங்கிய கோகுலம் சிறுவர் சங்கத்தில் அவரே என்னை உறுப்பினராகச் சேர்த்து, கடிதம் எழுதித் தெரிவித்தார். தொடர்ந்து கோகுலத்துக்கு எழுதச் சொன்னார்.

எனக்கு என் பிறந்த நாள் மறந்தாலும் மறக்கும். கோகுலம் சிறுவர் சங்க உறுப்பினர் எண் மறக்காது. நான் அவருடைய 822வது மகன்.

தொகுப்பு: எஸ். சுஜாதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x