

நேரு
அருமை நேரு பிறந்தது
அலகா பாத்து நகரிலே
இளைஞர் நேரு படித்தது
இங்கி லாந்து நாட்டிலே
தீரர் நேரு வாழ்ந்தது
தில்லி நகரம் தன்னிலே
இன்று நேரு வாழ்வது
எங்கள் பிஞ்சு நெஞ்சிலே!
****
வால்
ஈயை ஓட்ட என்றும் உதவும்
பசுவின் வால்
எதிர்த்து நீந்தத் துடுப்பாய் உதவும்
மீனின் வால்
குளிரில் உடம்பைச் சூடு படுத்தும்
அணிலின் வால்
கிளையில் மாட்டித் தொங்கிட உதவும்
குரங்கின் வால்
கொடிபோல் ஆட்டி ஆபத்து உணர்த்தும்
முயலின் வால்
கோபம் வந்தால் சிலிர்த்து நிற்கும்
பூனையின் வால்
நன்றியைக் காட்ட நன்றாய் உதவும்
நாயின் வால்
நமக்கும் இருந்தால் எப்படி உதவும்
****
எண்ணிப் பார்!
ஏணி மேலே ஏணி
ஏணி மேலே ஏணி வைத்து
ஏறப் போகிறேன்
ஏறி ஏறி எட்டி வானை
முட்டப் போகிறேன்!
பந்து நிலா அதை எடுத்து
வீசப் போகிறேன்
பாலு, சோமு உங்கள் சமர்த்தைப்
பார்க்கப் போகிறேன்!
முந்திப் பந்தைப் பிடிப்பவனை
வாழ்த்தப் போகிறேன்
மூச்சுப் பிடித்துப் பூமிமீது
குதிக்கப் போகிறேன்!