Published : 27 Oct 2021 03:07 AM
Last Updated : 27 Oct 2021 03:07 AM

கதை: போர்க்களத்தில் வாத்து!

ராணுவம் நகரத்துக்குப் பக்கத்தில் முகா மிட்டிருந்தது. தளபதி தினமும் வீரர்களுக்குப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார். அன்று பீரங்கியை இயக்கும் வீரரிடம், “பீரங்கி சரியான இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதா? நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

“ஆம்.”

“நகரின் மையப்பகுதியை இலக்காக வைத்து பீரங்கியைத் திருப்புங்கள்.”

“அப்படியே செய்கிறேன்.”

“பீரங்கியில் குண்டை நிரப்புங்கள். நான் கட்டளை பிறப்பித்தவுடன் நகரத்தின்மீது குண்டு வீசுங்கள்.”

“சொன்னபடியே செய்கிறேன்” என்றார் அந்த வீரர்.

பீரங்கியை ஆராய்ச்சி செய்தவர், தளபதியை நோக்கி ஓடினார்.

“பீரங்கியில் குண்டை நிரப்ப முடியாது.”

“ஏன் முடியாது?” என்று கோபத்தோடு கேட்டார் தளபதி.

“பீரங்கிக் குழாய்க்குள் ஒரு வாத்து இருக்கிறது” என்று தாழ்ந்த குரலில் சொன்னார் அந்த வீரர்.

“வாத்தா? அது என்ன செய்துவிடும்?” என்று கூச்சலிட்ட தளபதி, “வாத்தை வெளியேற்ற எவ்வளவு நேரமாகும்?” என்றார்.

“நான் முயற்சி செய்தேன்... ஆனால், அது முட்டைகளை அடைகாக்கிறது.”

“ஒரு சின்ன வாத்து, ராணுவத்தின் முயற்சிகளைத் தடுக்கும் அளவு பலம் பெற்றதா? நான் அதற்குப் பாடம் புகட்டுகிறேன்” என்றவர், பீரங்கியின் எல்லாப் பக்கங்களையும் சோதித்தார். கீழே குனிந்து குழாய்க்குள் பார்த்தார். இரண்டு சிறிய கண்கள் அவரைத் திரும்பிப் பார்த்தன.

“இதோ அந்தக் குறும்புக்கார வாத்து.”

வாத்து ‘க்வாக்... க்வாக்...’ என்று குரல் எழுப்பியது. ஆனால், இருந்த இடத்தைவிட்டு நகரவில்லை.

தளபதியின் முகம் சிவந்தது. “வெளியே வா, இல்லையென்றால் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று கூச்சலிட்டார்.

வாத்து அமைதியாக இருந்தது.

அருகில் இருந்த வீரர், “வாத்தை அப்படியே உள்ளே வைத்து பீரங்கியை இயக்கலாமே?” என்றார்.

“இல்லை, அதெல்லாம் கூடாது. நாம் பீரங்கிப் பயன்பாட்டைச் சிறிது காலம் நிறுத்தி வைப்போம்” என்றார் தளபதி.

தன்னிடமிருந்த எல்லாப் பதக்கங்களையும் அணிந்துகொண்டு மன்னரைச் சந்தித்தார். வாத்து பிரச்சினை குறித்துத் தெரிவித்தார்.

“நாம் அடுத்த மூன்று வாரங்களுக்குப் போரைத் தள்ளி வைக்கலாம். அதற்குள் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவந்துவிடும்” என்றார் மன்னர்.

நல்ல யோசனை என்று ஏற்றுக்கொண்ட தளபதி, முகாமுக்குத் திரும்பினார். போர் நிறுத்தச் செய்தியைக் கேட்ட வீரர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.

ஒரு வாரம் கழித்து, தளபதி மற்றொரு சிக்கலை எதிர்கொள்ள நேர்ந்தது. மீண்டும் மன்னரைச் சந்தித்தார்.

“படைவீரர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். ஆனாலும் சம்பளம் எதிர்பார்க்கிறார்கள்.”

மன்னர், “வேலை எதுவும் செய்யாத வீரர்களுக்கு எப்படிச் சம்பளம் தருவது? சரி, அதோ நம் நகரைத் திரும்பிப் பாருங்கள். தெருக்கள் பொலிவிழந்துவிட்டன. அடுத்த இரண்டு வாரங்களுக்குப் படைவீரர்களுக்கான பணி தயார். நகரில் உள்ள கட்டிடச் சுவர்களை வண்ணம் தீட்டி அழகாக்கச் சொல்லுங்கள்” என்றார்.

“நல்ல யோசனை” என்ற தளபதி, கிளம்பிச் சென்றார்.

இப்போது வீரர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஆரவாரம் எழவில்லை. ஆனாலும், நகருக்கு வண்ணம் தீட்ட ஒப்புக் கொண்டனர்.

மறுநாள் காலை வீரர்கள் சீருடைக்குப் பதிலாகப் பழைய ஆடைகளை அணிந்துகொண்டு, முகாமிலிருந்து வெளியேறினர்.

தளபதி பீரங்கிக்கு அருகில் சென்றார். வாத்து இன்னும் அங்கேயே இருந்தது.

அன்று முதல் முகாமில் அமைதி நிலவியது. மன்னர் அவ்வப்போது ஜன்னலைத் திறந்து நகரத்தைப் பார்த்தார். நகரம் கொஞ்சம் கொஞ்சமாக அழகானது.

மூன்றாவது வார முடிவில், முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளியே வந்தன. ‘க்வாக்- க்வாக்- க்வாக்’ சத்தம் காதுகளைத் துளைத்தது.

தளபதி முழு பலத்தையும் திரட்டி ஆராய்ச்சி மணியை அடித்தார். உடனே, படைவீரர்கள் முகாமுக்குத் திரும்பினார்கள்.

பீரங்கிக் குழாய்க்குள் இருந்து முதல் வாத்துக் குஞ்சு வெளியே வந்தது.

தளபதி மிகவும் கவனமாக அதைத் தரையில் இறக்கி விட்டார். மொத்தம் எட்டுக் குஞ்சுகள். தளபதியின் கால்களைச் சுற்றி விளையாடின. கடைசியாக வெளியே வந்த அம்மா வாத்து, படைவீரர்களைப் பார்த்துச் சத்தமாக, ‘க்வாக்... க்வாக்...’ என்று கத்தியது. பிறகு குஞ்சுகளை அழைத்துக்கொண்டு புல் தரையில் அணிவகுத்துச் சென்றது.

“ஹேய்... வாத்துகளுக்கு வாழ்த்துச் சொல்வோம்” என்று கூச்சலிட்ட வீரர்கள், தலையிலிருந்த தொப்பிகளைக் காற்றில் பறக்க விட்டனர்.

“இப்போது நம்மால் பீரங்கியைப் பயன்படுத்த முடியும். மறுபடியும் போருக்குத் தயாராவோம்” என்றார் தளபதி.

வீரர்களின் ஆரவாரம் முடிவுக்கு வந்தது. அமைதியானார்கள்.

“தளபதியாரே, தயவுசெய்து இந்தப் போரை நிறுத்துங்கள். ஒன்றை உருவாக்குவது கடினம், அழிப்பது எளிது என்பதை நகரைச் சுத்தம் செய்யும்போது அறிந்துகொண்டோம். தேவையற்ற இந்தப் போரைத் தவிர்ப்போம்” என்றார் ஒரு வீரர்.

“ஆம்” என்று மற்ற வீரர்களும் ஆமோதித்தார்கள்.

தளபதிக்கும் அது சரி என்று பட்டது. மன்னரிடம் சென்று தகவலைச் சொன்னார். “எனக்கும் போர் செய்யும் மனநிலை இப்போது இல்லை. நகரத்தைச் சுத்தம் செய்யும் பணி தொடரட்டும்” என்றார் மன்னர்.

சில நாட்களில் நகரமே அழகாகக் காட்சியளித்தது. போருக்குச் செலவு செய்ய இருந்த பணத்தைக்கொண்டு, ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்தார் மன்னர். அந்த விழாவில் ராணுவ அணிவகுப்புக்குப் பின்னால், அம்மா வாத்தும் அதன் எட்டுக் குஞ்சுகளும் அணிவகுத்துச் சென்ற காட்சி எல்லோரையும் கவர்ந்தது.

கதை: ஜாய் கோவ்லி
தமிழில்: கொ.மா.கோ. இளங்கோ

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x