Published : 27 Oct 2021 03:07 AM
Last Updated : 27 Oct 2021 03:07 AM

புதிய கண்டுபிடிப்புகள்: நாய் இரவு விலங்கா?

காலையில் கண்விழித்ததும் பல் துலக்கி, காபி குடித்து, குளித்து, சாப்பிட்டு அன்றைய வேலைக்குத் தயார் ஆகிறோம். அலுவலக வேலை அல்லது படிப்பு முடித்து வீட்டுக்குத் திரும்புகிறோம். மாலையில் தேநீர் அருந்தி, விளையாடி, படித்து, தொலைக்காட்சி பார்த்து நேரத்தைக் கழிக்கிறோம். பிறகு இரவு உணவை முடித்து, உறங்கச் செல்கிறோம். சாதாரணமான ஒருவரின் சராசரி ஒரு நாள் நடவடிக்கைகள் இவை. நாய்களுக்கு என்ன வேலை, ஒரு நாள் பொழுதை எப்படிக் கழிக்கின்றன?

இரவெல்லாம் கண் விழித்துக் காவல் காக்கும். யாரையாவது, எதையாவது பார்த்துக் குரைத்துக்கொண்டே இருக்கும் என்றெல்லாம் நாமாகக் கற்பனை செய்து வைத்திருக்கிறோம். இது சரியா? இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள் அருணிதா பானர்ஜியும் அனிந்திதா பத்ராவும். இவர்கள் நடத்திய ஆய்வில் நாய்கள் ஒரு நாளின் பாதி நேரத்தைத் தூங்கிக் கழிப்பதாகவும் பகல், இரவு என இரு பொழுதுகளிலும் செயல்படும் விலங்காக இருப்பதாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

செல்லப் பிராணியாக வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களின் நடத்தையை மனிதர்கள்தாம் பெருமளவில் தீர்மானிக்கிறார்கள். நாம் சாப்பிடும்போது நாய்க்கும் உணவு தருகிறோம், நாம் தூங்கும்போது நாயையும் தூங்க வைத்துவிடுகிறோம்.

ஆனால், தெருநாய்களின் நிலை அப்படி அல்ல. வாழ்விடங்களை மனிதர்களுடன் பகிர்ந்துகொள்ளும் தெருநாய்கள் அரிதாகவே வேட்டையாடி உணவைப் பெறுகின்றன. மனிதர்கள் விரும்பி அளிக்கும் உணவு, இறைச்சி, குப்பையில் கிடைப்பவை முதலியவற்றை உண்டு வாழ்கின்றன. அவற்றின் மூக்கு, புரதம் செறிவாக உள்ள உணவை இனம் காண உதவுகிறது.

தெருநாய்களின் நடத்தையை உற்றுக் கவனித்தபோது சோம்பிப் படுத்தல், பறவைகளையும் விலங்குகளையும் துரத்துதல், உலாவுதல், உண்ணுதல், உடலை நாக்கால் சுத்தம் செய்தல், குரைத்தல், குட்டிகளோடு விளையாடுதல், இணையோடு குடும்பம் நடத்துதல், வேறு விலங்குகளோடு சண்டையிடுதல், மனிதர்களோடு உறவாடுதல் என்று சுமார் 177 விதமான செயல்பாடுகளில் ஈடுபடுவதை அறிந்தனர்.

பரிணாம வரலாற்றின் அடிப்படையில் நாய்கள் இரவில் நடமாடும் நரி குடும்பத்தைச் சேர்ந்தவை. எனவே, நாய்கள் இரவில் இயங்கும் விலங்கு என்கிற கருத்து உள்ளது. ஆனால், ஆய்வுத் தரவுகளைப் பார்த்தபோது ஆச்சரியம் காத்திருந்தது. நாய்கள் பகலிலும் இரவிலும் பெரிய வித்தியாசமின்றி செயல்படும் நிலையில் இருந்தன. அதாவது நாயைப் பகல் அல்லது இரவு நேரத்தில் செயல்படும் விலங்கு என்று பகுக்க முடியாது. தெருநாய்கள் இரவில் இருப்பது போலவே பகலிலும் சுறுசுறுப்பாக இருக்கின்றன. தாம் வாழும் இடங்களில் உள்ள மனிதர்களின் செயல்பாடுகளை ஒத்து, தெருநாய்களின் நடத்தை அமைந்திருக்கிறது.

மற்ற விலங்குகளைப் போல மனிதர்களைத் தவிர்க்காமல், முன்பின் அறிமுகம் இல்லை என்றாலும் மனித உறவை நாடுகின்றன. நகர்ப்புறங்களில் வாழ்விடங்களை மனிதர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பல விலங்குகள் உள்ளன. அவற்றில் பல, மனிதர்கள் நடமாடும் நேரத்தில் ஒளிந்து வாழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுவிட்டன. பகலில் செயல்படும் சில விலங்குகள், மனிதர்களைத் தவிர்க்கும்விதமாக அதிகாலை அல்லது மாலை நேரத்தில் இயங்குகின்றன. ஆனால், தெருநாய்கள் மனிதர்களைத் தவிர்ப்பதில்லை. அறிமுகமில்லாத மனிதர்களின் குறிப்பைக்கூடப் புரிந்து செயல்பட முனைப்பு காட்டுகின்றன. உணவுக்காக மட்டுமல்ல, மனிதர்களின் வசிப்பிடங்களில்தாம் குட்டிகளைக்கூட ஈனுகின்றன.

ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் பெருமளவு தெருநாய்கள் காணப்படுகின்றன. சுதந்திரமாகத் திரியும் தெருநாய்கள் தங்கள் உணவிற்காக மனிதர்களைச் சார்ந்துள்ளன. பதிலுக்கு அவை மனிதக் குடியிருப்புகளைப் பாம்பு, நரி போன்ற விலங்குகளிடமிருந்து பாதுகாக்கின்றன. குப்பை, மலம் முதலியவற்றை அகற்றும் பணியையும் மேற்கொள்கின்றன.

காட்டு விலங்குகள் எந்தச் சூழலில் மனிதர்களை அண்டி வாழும் வளர்ப்பு விலங்குகளாகப் பரிணாம வளர்ச்சி பெறுகின்றன என்கிற கேள்விக்கு விடை தேட இந்த ஆய்வு உதவும். மனிதர்களோடு வசிப்பிடத்தைப் பங்கு போட்டுக்கொள்ளும் விலங்குகளுடன் மோதலின்றி, இணக்கமாக வாழ்வதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கும் இந்த ஆய்வு பயன்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கட்டுரையாளர்,

விஞ்ஞானி தொடர்புக்கு: tvv123@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x