Published : 13 Oct 2021 05:48 AM
Last Updated : 13 Oct 2021 05:48 AM

புதிய கண்டுபிடிப்புகள்: பறவைகளின் கண்கள் சொல்லும் ரகசியம்!

பெண் குயில் காகத்தின் கூட்டில் முட்டையை வைத்துவிடும். தனது முட்டை என்று நினைத்து காகமும் குயிலின் முட்டையையும் சேர்த்து அடைகாக்கும். குயில் குஞ்சு காகத்தின் குஞ்சு போலவே இருப்பதால், காகமும் உணவூட்டி வளர்க்கும். தனது ஆற்றலைச் செலவு செய்யாமலேயே அடுத்த தலைமுறையை வளர்த்து எடுத்துவிடும் குயில். ஒட்டுண்ணிகளைப் போலவே சில பறவைகளும் மற்ற பறவைகளின் கூட்டில் முட்டையை வைத்து ஏமாற்றி, காரியத்தைச் சாதித்துவிடுகின்றன.

பொதுவாக ஏமாறும் காகம் போன்ற ஓம்புப் பறவைகளின் கண்களின் அளவைவிட, ஏமாற்றும் குயில் போன்ற ஒட்டுண்ணிப் பறவைகளின் கண்கள் பெரிதாக இருக்கும். அமெரிக்க ஆய்வாளர்கள் மார்க் ஹவுபர், இயன் ஆஸ்பிரே ஆகியோர் நடத்திய ஆய்வில் இந்த விஷயங்கள் தெரியவந்துள்ளன.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஸ்டான்லி ரிட்லேண்ட், அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வந்த நான்காயிரம் பறவைகளின் கண், உடல் அளவுகளை ஆய்வு செய்தார். நமது உடல் சுமார் எட்டுச் சாண் அளவுக்கு இருக்கும். அதில் தலையின் அளவு ஒரு சாண். பல்வேறு பறவைகளின் கண் அளவு விகிதங்களைப் பகுத்துப் பார்த்தபோது வியப்பான ஓர் ஒழுங்கு தெரியவந்தது. புழு, பூச்சி, சிறு விலங்குகளை வேட்டையாடி உண்ணும் பறவைகளுக்குக் கூரான தூரப்பார்வை தேவை. அந்தப் பறவைகளின் கண்கள் பெரிதாக இருந்தன. விதைகள், தேன் முதலியவற்றை உண்ணும் பறவைகளுக்குக் கூரான கிட்டப்பார்வை அவசியம். எனவே அவற்றின் கண்கள் சிறிதாக இருந்ததை அறிந்தார்.

பறந்து கொண்டே இரை தேடும் பறவையின் பார்வை கூர்மையானது. கூடுதல் பார்வைத்திறன் கொண்டது. மனிதனைப் போன்ற விலங்குகளின் கண்களில் சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று நிறங்களை உணரும் ஒளி உணர்விகள் உள்ளன. பறவைகளைப் பொறுத்தவரை கூடுதலாகப் புற ஊதா நிறத்தை அறியும் நான்காம் ஒளி உணர்வியும் உள்ளது. எனவே, பறவைகளால் நம் கண்களுக்குப் புலப்படாதவற்றையும் காண முடிகிறது.

பறக்க இயலாத நெருப்புக்கோழியின் கண்கள் மிகப் பெரியவை. உடலின் அளவோடு ஒப்பிட்டால் கண் பெரியது. நமது விழி லென்ஸ் குவி ஆடி வடிவில் இருக்கும். பறவைகளின் விழி லென்ஸ் சற்றே தட்டையாகத்தான் இருக்கும். இதன் காரணமாகக் கூடுதல் காட்சி புலப்படும். மேலும், பறவைகளின் கண்களில் ஒளி உணர்விகள் அதிகம். மனித கண்களில் சதுர மில்லிமீட்டருக்கு இரண்டு லட்சம் ஒளி உணர்விகள் இருக்கும். குருவியின் கண்களில் நான்கு லட்சமும் பருந்து போன்ற வேட்டையாடும் பறவைகளின் கண்களில் பத்து லட்சத்துக்கும் அதிகமான ஒளி உணர்விகளும் உள்ளன. அதனால், பறவைகளின் பார்வை கூர்மையாக இருக்கிறது.

கூர் பார்வைத் திறன் கொண்ட பறவை எளிதில் ஏமாந்து, வேற்றுப் பறவைகளின் முட்டைகளை அடைகாத்து விடாது. தனது முட்டையின் வடிவம், அளவு, நிறத்தைவிட வேறுபட்ட முட்டை தனது கூட்டில் உள்ளதை இனம் கண்டால் தாய்ப் பறவை அதற்கு எதிராக வேலை செய்யும். சில நேரம் அந்தக் கூட்டைக் கைவிட்டுச் சென்றுவிடும். சில நேரம் வேற்று முட்டையை இனம் கண்டு உடைத்துவிடும். அல்லது கூட்டிலிருந்து கீழே தள்ளிவிடும்.

காகம் போன்ற ஓம்புப் பறவையை ஏமாற்ற அதன் முட்டை சாயலில் தம் முட்டையையும் இடும் திறனை ஒட்டுண்ணிப் பறவைகள் பெற்றுள்ளன. சில பறவைகள் குறிப்பிட்ட ஓம்புப் பறவையின் கூட்டில் மட்டுமே முட்டை இடும். குறிப்பிட்ட பெண் குயில் குறிப்பிட்ட பறவையின் கூட்டில் மட்டுமே முட்டையிடும்; அதன் பெண் குஞ்சுகளும் வளர்ந்து பெரிதாகும்போது அதே ஓம்புப் பறவையின் கூட்டில் மட்டுமே முட்டையிடும்.

சதுப்புநிலக் கதிர்குருவி கூட்டில் உள்ள அதன் முட்டைகளையும் குயிலின் சற்றே பெரிய முட்டையையும் பாருங்கள்; இரண்டும் ஒன்று போலத் தெரிகின்றனவா?

ஸ்டான்லி ரிட்லேண்ட் திரட்டிய தரவுகளை மீளாய்வு செய்தார் ஆஸ்பிரே. தந்திரமாக வேற்றுப் பறவைகளின் கூட்டில் முட்டையிடும் ஒட்டுண்ணிப் பறவைகளின் கண் அளவு, வேற்றுப் பறவைகளின் முட்டைகளை அடைகாக்கும் ஓம்புப் பறவைகளின் கண் அளவு ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தார். வேற்றுப் பறவையின் முட்டையை அடைகாக்கும் ஓம்புப் பறவையின் கண்களைவிட, பறவைக் கூட்டில் முட்டையிடும் ஒட்டுண்ணிப் பறவையின் கண் பெரிதாக இருக்கிறது என்று கண்டுபிடித்தார். அதாவது குயிலைவிடக் காகத்தின் பார்வைத் திறன் குறைவு.

படத்தில் பெரிய கண் கொண்ட ஐரோப்பிய குயில் சிறிய கண் கொண்ட ஐரோப்பிய கருஞ்சிட்டு கூட்டில் முட்டையிடும். ஆனால், பெரிய கண் கொண்ட ஐரோப்பிய பூச்சி பிடிப்பான் பறவையின் கூட்டைத் தேர்வு செய்யாது.

காகம் போன்ற பறவைகளின் பார்வைத்திறன் ஒப்பீட்டளவில் குறைவு என்பதை ஒட்டுண்ணிப் பறவைகள் தமக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். அளவில் சிறிய கண்கள் உடைய ஓம்புப் பறவைகளின் பார்வை அவ்வளவு கூர்மையாக இருக்காது. எனவே, அவற்றால் தமது முட்டைகளையும் குயில் வைத்துச் செல்லும் முட்டையையும் பிரித்து அறிவது எளிதல்ல. அதனால், குயிலின் முட்டை காகத்தின் முட்டையுடன் சேர்ந்து அடைகாத்து, குஞ்சு பொரிந்துவிடும் வாய்ப்பு கூடுதல். எனவேதான் ஒட்டுண்ணிப் பறவைகள் சிறிய கண்களை உடைய பறவைகளைத் தேர்வு செய்து, அவற்றின் கூட்டில் முட்டையிடுகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கட்டுரையாளர், விஞ்ஞானி

தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x