Published : 06 Oct 2021 03:11 am

Updated : 06 Oct 2021 06:06 am

 

Published : 06 Oct 2021 03:11 AM
Last Updated : 06 Oct 2021 06:06 AM

மாய உலகம்!: கன்ஃபூஷியஸ் பேசுகிறார்

maya-ulagam

உலகின் மாபெரும் ஆசிரியர்களில் ஒருவர் என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் அவர் நிறைய புத்தகங்கள் எழுதிக் குவித்திருப்பார் என்று நீங்கள் நினைத்தால் தவறு. புத்தகத்தை விடுங்கள். ஒரே ஒரு காகிதத்தை எடுத்து ஒரே ஒரு சொல்கூட எழுதியதில்லை அவர்.

அவரிடமிருந்து கற்றுக்கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையும் வானில் மின்னும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒன்று. அப்படியானால் அவர் தன் மாணவர்களுக்கு என்னென்னவோ கற்றுக்கொடுத்திருப்பார் என்று நீங்கள் நினைத்தால், மீண்டும் தவறு. வாருங்கள், மிக முக்கியமான ஒன்றை உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிறேன் என்று எவரையும் அமர வைத்துப் பாடம் எடுத்ததில்லை அவர்.


நான் ஏன் அதை எல்லாம் செய்ய வேண்டும் என்று திகைப்பார். உங்களில் ஒருவருக்கும் தெரியாத மிகப் பெரிய உண்மை அப்படி என்ன எனக்குத் தெரிந்துவிட்டது? யார் கண்களுக்கும் படாத எதைப் புதிதாகக் கண்டுபிடித்துவிட்டேன்? எந்த வகையில் உங்கள் எல்லோரையும்விட உயர்ந்து, வளர்ந்திருக்கிறேன் நான்?

அப்படி நினைத்த காலமும் உண்டு. என்னைத் தேடி அங்கிருந்தும் இங்கிருந்தும் பறவைக் கூட்டம்போல் மாணவர்கள் திரண்டு வருவார்கள். அது, இது என்று ஏகப்பட்ட கேள்விகள் கேட்பார்கள். நான் சொல்வதைப் பய பக்தியோடு குறித்து வைத்துக்கொள்வார்கள்.

அதன்பின் பெற்றோர்களும் வரத் தொடங்கினார்கள். எங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள். அவர்களுக்கு நல்ல புத்தி வரவழைப்பது எப்படி? வீட்டில் எல்லோரையும் மதித்து நடக்கும்படி அவர்களை மாற்றுவது எப்படி?

அதன்பின் செல்வந்தவர்கள் வந்தனர். பெரிய மனிதர்கள் வந்தனர். மன்னர் தன் அமைச்சர்களை அனுப்பிவைத்தார். மன்னரே புறப்பட்டு வந்தார். சீனா கடந்து, அண்டை தேசங்களில் எல்லாம் என்னைப் பற்றி வியப்போடு பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். நீங்கள் ஒரு தத்துவ ஞானி என்றார்கள். நீங்கள் சீனாவின் தந்தை என்றார்கள். உங்கள் சொற்கள் விலை மதிப்பில்லாதவை என்றார்கள். கணிதம் தொடங்கி, குடும்பம்வரை உங்களுக்குத் தெரியாததே இல்லை என்றார்கள்.

அவ்வளவும் உண்மை என்று நம்பினேன். சிம்மாசனத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டதுபோல் நினைப்பு. வீதியில் இறங்கி நடந்தாலும் வானில் பறப்பது போலவே இருக்கும். ஒரு நாள் இப்படி மிதந்துகொண்டிருந்தபோது என்ன நடந்தது தெரியுமா?

இரண்டு பேர் எனக்கு முன்பு நடந்து சென்றுகொண்டிருந்ததைக் கண்டேன். முதியவர்கள். உடை, நடை, பேசும் விதம் ஆகியவற்றைப் பார்க்கும்போது ஏதோ கிராமத்திலிருந்து வந்தவர்கள் என்பது தெரிந்தது. இருவருமே சத்தம் போட்டுப் பேசிக்கொண்டிருந்ததால் அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டே நடந்தேன். சுமார் அரை மணி நேரம் இப்படி நடந்திருப்போமா?

இருக்கும். அதற்குள் நான் செல்ல வேண்டிய இடம் வந்துவிட்டது. ஆனாலும், அமைதியாக அவர்களோடு நடந்தேன். இருள் நிறைந்த ஒரு கிராமத்தை அவர்கள் அடையும்வரை, ஓட்டை ஒடிசலான ஒரு வீட்டுக்குள் நுழையும்வரை அவர்களைப் பின்தொடர்ந்தேன்.

வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது நன்றாக இருட்டியிருந்தது. என் முதுகில் இருந்த இறக்கைகள் எங்கோ கீழே விழுந்துவிட்டன. என் தலையில் மின்னிக்கொண்டிருந்த மகுடத்தைக் காணவில்லை.

பள்ளிக்கூடத்தைக் கண்ணால் கண்டிருப்பார்களா? புத்தகம் எப்படி இருக்கும் என்பதாவது தெரியுமா? கணிதம், தத்துவம் ஆகிய பெயர்களை உச்சரிக்கவாவது வருமா? இருந்தும் எப்படி அவ்வளவு அழகாக, அவ்வளவு இயல்பாக, அவ்வளவு ஆழமாக அவர்களால் உரையாட முடிகிறது? வயல் தொடங்கி வானம் வரை எப்படி அவ்வளவு விஷயங்களைப் பேசித் தீர்க்க முடிகிறது? குறிப்பிட்ட நிலத்தில் எவ்வளவு விளைச்சல் கிடைக்கும் என்பதைக் கண்மூடி திறப்பதற்குள் எப்படித் துல்லியமாகக் கணக்கிட முடிகிறது? ஆட்சி நிர்வாகத்தை அப்படி மாற்றினால் நல்லது, சட்டத்தை இப்படித் திருத்தினால் சிறப்பு என்றெல்லாம் எப்படிச் சிந்திக்க முடிகிறது?

அன்று அவர் ஒரு முடிவுக்கு வந்தார். இனி எதையும் நான் கற்றுக்கொடுக்கப் போவதில்லை. இதுதான் சரி என்று வாதம் செய்யப் போவதில்லை. நீ அப்படிச் செய், நீ இப்படிச் செய்யாதே என்று அறிவுறுத்தப் போவதில்லை.

ஒவ்வொருவரையும் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிக்கப் பழகிக்கொள்ளப் போகிறேன். ஆசிரியர் என்று கருதி என்னைத் தேடி வரும் ஒவ்வொரு மாணவரும் என் ஆசிரியர். வழிகாட்டுங்கள் என்று சொல்லி வரும் ஒவ்வொருவரும் என் வழிகாட்டி. வாழ்நாள் முழுக்க நான் கற்றுக்கொண்டதைவிட ஒரு குழந்தைக்கு அதிகம் தெரியும். எனவே, நான் குழந்தையிடமிருந்தும் கற்பேன்.

நம் எல்லோரையும்விடப் புத்தகங்களால் அதிக ஆண்டுகள் வாழ முடியும். அவ்வளவு ஆண்டுகளுக்கு வாழும் ஆற்றல் கொண்ட சொற்களை என்னால் எழுதி வைக்க முடியும் என்று தோன்றவில்லை. எனவே, நான் எழுதப்போவதில்லை.

நாம் பேசுவோம். உரையாடுவோம். விவாதிப்போம். என்னிடம் இருப்பதை உங்களுக்கு அளிக்கிறேன். உங்களிடம் இருப்பதைத் தாருங்கள். நாம் கற்ற பாடங்களை, நமக்குத் தோன்றும் கருத்துகளை, நாம் திரட்டிய அனுபவங்களை, நம்மிடம் இருக்கும் கேள்விகளை நாம் பரிமாறிக்கொள்வோம். விடைகள் தேடுவோம். நாம் மாணவர்கள். எனவே, நாம் ஆசிரியர்கள்.

நட்சத்திரங்களுக்குக் கீழே ஒன்றாக நடப்போம். ஒன்றாகச் சிரிப்போம். ஒன்றாக மகிழ்ந்திருப்போம். அந்தக் கிராமத்து முதியவர்கள்போல்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com
மாய உலகம்கன்ஃபூஷியஸ்Maya ulagamConfuciusசீனாநீதி கதைகள்சிறுவர் கதைகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x