அஞ்சலி: நான் ஒரு பெண், எனவே படிக்க விரும்புகிறேன்!

அஞ்சலி: நான் ஒரு பெண், எனவே படிக்க விரும்புகிறேன்!
Updated on
2 min read

ஒரு நாள் அப்பா தன் மகளை அழைத்தார். ‘ஆண் குழந்தை களைப் படிக்க வைப்பதற்கே தவிக்க வேண்டியிருக்கிறது. நீ எதற்காகப் படிக்க வேண்டும்?’

சொல்கிறேன், அப்பா. நான் ஒரு பெண். நான் படிக்க வேண்டும். ஏனென்றால் வரலாற்றில் நீண்டகாலமாக இந்த உரிமை எனக்கு மறுக்கப் பட்டு வந்திருக்கிறது. அந்த உரிமையைத் திரும்பப் பெற வேண்டுமானால் நான் படிக்க வேண்டும்.

நம்மைச் சுற்றியுள்ள இருள் விலக வேண்டுமானால் அறிவின் வெளிச்சம் தேவை. அந்த வெளிச்சத்தைப் பெற நான் படிக்க வேண்டும். என் சுதந்திரத்தைப் பறித்து என்னைப் பிணைத்து வைத்திருக்கும் அனைவரிடமிருந்தும், அனைத்திடமிருந்தும் விடுபட விரும்புகிறேன். அதற்கு நான் படித்தாக வேண்டும்.

இது ஆண்களின் உலகமாக இருப்பதால் பூதம் போல் வன்முறை வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் கண்களில் படாமல் என்னை ஒளித்துவைக்க நீங்கள் துடிக்கிறீர்கள். நானோ பூதத்தை நேரில் கண்டு வீழ்த்த விரும்புகிறேன். அதற்குத் துணிச்சல் வேண்டும். எனவே நான் படிக்க வேண்டும்.

நானொரு பெண். ஆண்களின் உலகை அனைவருக்குமான உலகமாக மாற்ற வேண்டுமானால் நான் படிக்க வேண்டும். ஆண்களின் கல்வியை அனைவருக்குமான கல்வியாக மாற்ற வேண்டுமானால் நான் படிக்க வேண்டும். ஆண்களின் சட்டம் அனைவருக்குமான சட்டமாக மாற வேண்டுமானால் நான் படிக்க வேண்டும். ’உன்னிடமுள்ள அதிகாரம் ஏன் இல்லை என்னிடம்’ என்னும் கேள்வியை ஓர் ஆணை நோக்கி நான் எழுப்பாதவரை எதுவும் மாறப் போவதில்லை. அந்தக் கேள்வி என்னிடமிருந்து தோன்ற வேண்டுமானால் நான் படிக்க வேண்டும்.

உங்கள் சரி, தவறுகள் அநேக நேரங்களில் என்னுடைய சரி, தவறுகளாக இருப்பதில்லை. இந்த முரண்களை நான் பேசியாக வேண்டும் என்றால் என் குரலை உயர்த்த வேண்டும். அதற்கு முன்னால் எனக்கும் குரலொன்று உண்டு என்பதை நான் உறுதிசெய்ய வேண்டும். அதற்கு நான் படிக்க வேண்டும்.

உங்கள் மகன்கள் அவர்களுக்கான உலகை கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். அதில் நான் அஞ்சி அஞ்சி, தயங்கித் தயங்கி வாழ வேண்டியிருக்கிறது. நான் படித்தால்தான் அந்த உலகிலிருந்து விடுபட்டு இன்னோர் உலகைப் படைக்க முடியும்.

நான் படைக்கும் உலகம் எனக்கான உலகமாக, என்னைப் போன்ற பெண்களுக்கான உலகமாக இருக்கும். அந்த உலகில் என் உரிமைகளைத் தயக்கமின்றி நிலைநாட்டுவேன்.

எனக்கான சட்டங்களை, எனக்கான நியாயங்களை வகுத்துக்கொள்வேன். நான் உருவாக்கும் புதிய உலகில் என் குரல் அச்சமின்றி ஒலிக்கும். அந்த உலகில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பறவைகளும் விலங்குகளும் தாவரங்களும் அன்போடு இணைந்திருக்கும்.

நூற்றாண்டு காலத் தவறுகளைச் சரிசெய்ய வேண்டியிருக்கிறது நான் படிக்க வேண்டும். ஏனென்றால் நானொரு பெண்.

75 வயது கமலா பாசின், ராஜஸ்தானைச் சேர்ந்த பிரபல கவிஞர். பெண்ணியவாதி. ‘அப்பாவின் கேள்விக்கு மகள் அளித்த விளக்கம்' என்ற வரி இவரின் இந்திக் கவிதையில் இருக்கிறது. சமீபத்தில் புற்றுநோய் காரணமாக மறைந்துவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in