

கருவாக முட்டைக்குள் இருக்கும்போதே தாய் எழுப்பும் ஒலிகளை உணர ஆரம்பித்து விடுகின்றன குஞ்சுகள் என்பதைச் சமீபத்திய ஆய்வு கூறுகிறது. வேறு ஆய்வுக்காகக் காட்டுக்குச் சென்ற டயான் கொலம்பெல்லி-நாக்ரெல் மூலம்தான் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ் பல்கலைக் கழகத்தில் விலங்குகளின் நடத்தையியல் ஆய்வாளர் டயான். பறவைகள் எழுப்பும் ஒலிகளைப் பதிவு செய்து, பறவைகளின் மொழியை அறியும் நோக்கில்தான் காட்டுக்குள் சென்றார்.
பல பறவைகள் குரலெடுத்துப் பாடும். ஆபத்து ஏற்படும்போது தனது இனத்துக்குச் செய்தி தெரிவிக்க, தனது இடத்தில் அத்துமீறும் வேறு பறவையை மிரட்ட, சிறு விலங்குகளை விரட்ட, இணையைத் தேடும்போது என்று பல சூழல்களில் பறவைகள் சத்தம் எழுப்புகின்றன. ஆனால், அங்கே அவர் கண்ட காட்சி திகைப்பை ஏற்படுத்தியது.
அடைகாத்துக்கொண்டிருந்த பெண் குருவி ஓங்கிய குரலில் தனியாகப் பாடிக்கொண்டிருந்தது. வயல்களில் வேலை செய்யும்போது களைப்பு நீங்க விவசாயிகள் பாடுவது வழக்கம். ஆனால், தனது முட்டையை அடைகாக்கும் பெண் பறவை பாடுவதன் மூலம், தனது கூட்டின் இருப்பிடத்தை வேட்டை விலங்குகளுக்குக் காட்டிக் கொடுத்துவிடும் அபாயம் இருக்கிறது.
பாடும் பறவை வகையைச் சேர்ந்த Splendid Fairy Wren என்கிற குருவி தனது குஞ்சுகளுக்குப் பாடக் கற்றுக்கொடுக்கும். குஞ்சுகள் பிறந்த 7-10 வாரங்களில் தம் பெற்றோரிடமிருந்து பாடக் கற்றுக்கொள்கின்றன. குளிர் காலத்தில் ஆணும் பெண்ணும் குடும்பம் நடத்தும். வசந்தகாலம் வந்ததும் ஒவ்வொரு பெண் பறவையும் தன் முட்டைகளுடன் தனித்தனி கூடுகளில் வாழும். கூட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் அலைந்து திரிந்து புழு, பூச்சிகளைச் சேகரித்து, தானும் உண்டு, தமது குஞ்சுகளுக்கும் அளிக்கும். தமது கூட்டை ஒட்டியுள்ள பகுதியில் இரையை அபகரிக்க வேறு பறவைகள் வருவதைத் தடுக்க, ரென் பறவைகள் பாடுகின்றன.
குஞ்சு பொரிந்த பின்னர் தாய்ப் பறவை பாடுவதில் வியப்பு இல்லை. ஆனால், முட்டைக்குள் இருக்கும்போதே தாய்ப் பறவை பாடுவது ஏன் என்று ஆராய்ந்தார் டயான்.
மின்னஞ்சலுக்குள் நுழைவதற்கு முன் கடவுச்சொல் போடுவதுபோல், தான் ஈன்ற குஞ்சுகளுக்கு மட்டும் சிறப்பான பாடல் ஒன்றை, தாய் ரென் கற்றுக்கொடுக்கிறது என்று முன்னர் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்தனர். கூட்டில் அனுமதியின்றி முட்டை இட்டுச் செல்லும் வேறு பறவைகளின் குஞ்சுகளை அடையாளம் காண இந்த உத்தியை ரென் கையாள்கிறது.
குறிப்பிட்ட சத்தம் அல்லது தூண்டுதல் மீது கவனம் குவியும்போது பறவைகள், மனிதக் கருவின் இதயத் துடிப்பில் மாற்றம் ஏற்படுகிறது. கரு நிலையிலேயே தாய்ப் பறவையின் பாடல்களை உணரும் திறன் இருக்கிறதா என்று ஜப்பானிய காடை, பெங்குவின் போன்ற பறவைகளில் ஆய்வு நடத்தினார்கள்.
பறவைகளின் கூட்டிலிருந்து 109 முட்டைகளை எடுத்து ஆய்வு செய்தனர். அதே இனத்தைச் சேர்ந்த, வேறு இனத்தைச் சேர்ந்த பறவைகளின் பாடல்களைப் பதிவுசெய்து, ஒலிபரப்பினர். பாடலுக்கு முன்பும் பின்பும் முட்டைக் கருவின் இதயத் துடிப்பை அளந்து பார்த்தனர். இதன் மூலம் தாய்ப் பறவையின் பாடலையும் மற்ற பறவையின் பாடலையும் முட்டையில் உள்ள கரு அடையாளம் காண்கிறது என்று கண்டறிந்தனர்.
இரண்டாம் ஆய்வில் முட்டை நிலையில் கற்றல் ஏற்படுகிறதா என்று 138 முட்டைகளில் ஆய்வு செய்தனர். அதே இனத்தின் பறவையின் ஒலிகளையும் அறிமுகமில்லாத பறவைகளின் ஒலிகளையும் பதிவுசெய்து, பரிசோதனை மேற்கொண்டனர். அதே இனப் பறவைகளின் ஒலிக்குக் காலப்போக்கில் முட்டைக் கரு பழகிவிடுகிறது என்று கண்டுபிடித்தனர். அதாவது கரு, முட்டையில் உள்ள போதே கற்றல் உருவாகத் தொடங்கிவிடுகிறது.
முட்டை பொரிந்து குஞ்சு வந்த பின்னர்தான் பாடல்களைக் கற்றுக்கொள்கிறது என்கிற கருத்து இதன் மூலம் மாறிவிட்டது. பாடும் பறவைகள் மட்டுமல்ல, பாடக் கற்காத பறவைகளும் முட்டை நிலையில் தமது இனப் பறவைகளின் ஒலிகளை அடையாளம் காண்கின்றன என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாம் மொழியைக் கற்றுத் தேர்வதுபோல, ரென் போன்ற பறவைகள் தமது பெற்றோரிடமிருந்து பாடல்களைக் கருவிலேயே கற்றுக்கொண்டு, வெளியே வந்ததும் தமக்கென்று தனித்துவமான பாடல்களை உருவாக்கிப் பாடுகின்றன.
கட்டுரையாளர்,
விஞ்ஞானி தொடர்புக்கு: tvv123@gmail.com